Followers

Saturday, October 27, 2012

இஸ்லாத்தில் அறிய வேண்டியவை.


இஸ்லாத்தில் அறிய வேண்டியவை.

1- முனாபிக் என்றால்.

நயவஞ்சகன் என்பது இதன் பொருள். உள்ளத்தில் நிராகரிப்பையும்,
உதட்டில் ஈமானையும் வோளிப்படுத்துபவர்களே  முனாபிக்குகள்
என்று இஸ்லாமிய மார்க்கத்தில் அல்குர்ஆன் அல் ஹதீஸ் கூறும்
கூற்றாகும்.
நபி(ஸல்)அவர்களது மதீனா வாழ்வில் இத்தகையவர்கள் உருவாகி
இஸ்லாத்திற்குப் பெரியளவில் இழப்புகளை ஏற்படுத்தி வந்தனர்.
இவர்கள் குறித்து முனாபிகூன் என்ற அத்தியாயமே அருளப்பட்டது.

"(நபியே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால் 'நிச்சயமாக நீர் 
அல்லாஹ்வின் தூதரே என  நாங்கள் சாட்சி கூறுகின்றோம்'.
என்று கூறுவர், நிச்சயமாக நீர் அவனது தூதர் என்பதை 
அல்லாஹ் நன்கறிவான். நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள்
பொய்யர்களே என அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்".  (63:1)

இந்த அத்தியாயத்தில் முதல் வசனமே இந்நயவஞ்சகர்கள் பற்றி
அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ்வே சாட்சியாளனாக
இருக்கின்றான். என்பதை  முனாபிக்கள் பற்றி அல்லாஹ் அருளப்பட்ட
இந்த அத்தியாயம் கூறுகின்றது.

2- பனூ இஸ்ராஈல் என்றால்.

இஸ்ராஈலின் சந்ததியினர் என்பது இதன் பொருளாகும்.
யஃகூப்(அலை)அவர்களே இஸ்ராஈல் என்று அழைக்கப்படுகின்றார்கள்.
இந்த வகையில் யஃகூப்(அலை)அவர்களின் 12 புதல்வர்கள் வழியாகத்
தோன்றிய 12 கோத்திரத்தினரே இஸ்ரவேலர்கள் எனப்படுகின்றனர்.
இவர்களை நல்வழிப்படுத்த அதிகமான தூதர்களை அல்லாஹ்
அனுப்பினான். அவர்களில் பலரை இவர்கள் அநியாயமாகக் கொலை
செய்தனர். அல்லாஹ்வின் அருட்கள் பலவற்றை அனுபவித்த
இவ்வினத்தினர்கள் அவனுக்கு மாறு செய்த காரணத்தினால் அவனது
கோபத்திற்கும்,சாபத்திற்குமுள்ளானார்கள்.

"இஸ்ராஈலின் சந்ததியினரே! நான் உங்கள் மீது புரிந்துள்ள
எனது அருட்கொடையை நினைவு கூறுங்கள். நீங்கள் என்
உடன்படிக்கையை நிரைவேற்றுங்கள். நான் உங்கள் உடன்
படிக்கையை நிறைவேற்றுவேன். மேலும் என்னையை நீங்கள்
அஞ்சுங்கள்." (2:40, 47,61,83,87,91,122,211,246)------(3:49,93,181,183,)
       இவ்வசனங்கள் இவர்கள் பற்றிக் கூறுகின்றது.

3-யஹூத் என்றால்.

பனூ இஸ்ராஈலின் முக்கிய ஒரு பிரிவினரே யூதர்களாவர்.
இவர்கள் நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்து வந்தனர் என்றும், கிறிஸ்தவர்களுடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களின்
பரம விரோதிகள் என்றும் அல்குர்ஆன் கூறுகின்றது.

"நிச்சயமாக நம்பிக்கை கொண்டோர் மற்றும் யூதர்கள்,
கிறிஸ்தவர்கள்,ஸாபிமீன்கள் (ஆகியோரில்) யார் அல்லாஹ்வையும்,
இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு,நல்லறமும் புரிந்தார்களோ
அவர்களுக்குரிய கூலி அவர்களது இரட்சகனிடம் அவர்களுக்கு
உண்டு. அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை,அவர்கள்
துக்கப்படவும் மாட்டார்கள்". (2:62, 113, 120, 135,140)--(4:46,160)
           இவ்வசனங்கள் இவர்கள் பற்றிக் கூறுகின்றது.

4- நஸாரா என்றால்.

கிறிஸ்தவர்களைக் குறிக்கவே நஸாரா என்ற பதம் அல்குர்ஆனில்
பயன்படுத்தப்பட்டுள்ளது. ஈஸாஅலைஅவர்கள் அல்லாஹ்வின்
குமாரன், ஈஸாவும் அவரது தாய் மர்யமும் தெய்வாம்சம் பொருந்திய
-வர்கள் என்பன போன்ற இவர்களின் தவறான கொள்கைகளை
அல்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கிறது. இஸ்லாத்திற்கெதிராகச்
செயல்படுபவர்களில் இவர்களும் ஏனைய நிராகரிப்பாளர்களைப்
போன்றவர்களே!.

 "யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தவர்களைத் தவிர
வேறு எவரும் சுவனத்தில் நுழையவே மாட்டார்கள் என்று அவர்கள்
கூறுகின்றனர். இது அவர்களது வெறும் கற்பனைகளாகும். (இதில்)
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களுடைய ஆதாரத்தைக்
கொண்டு வாருங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக!" (2:111, 113, 120, 135,
140)--(5:14, 51, 69, 82)
          இவ்வசனங்கள் இவர்கள் பற்றிக் கூறுகின்றன.

5- துப்பஃ என்றால்.

குற்றம் புரிந்த காரணத்தினால் அழிக்கப்பட்ட ஒரு கூட்டத்தின்
பெயரே துப்பஃ என்பதாகும். இவர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்ந்த
சமூகம் என்பதை அறிய முடிகின்றது. இவர்களுக்கு அனுப்பப்பட்ட
நபி யார் என்பது தெளிவாகக்கூறப்படவில்லை. இவர்கள் ஸபஃ
நாட்டு மக்களுடன் தொடர்புபட்ட ஒரு சமூகம் என அல்குர்ஆனின்
விரிவுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எமது மூதாதையர்களுக்குக்
கொண்டு வாருங்கள்(என்றும் கூறுகின்றனர்.)" (44:36)
"இவர்கள் சிறந்தவர்களா? அல்லது 'துப்பஃ' கூட்டமும் அவர்களுக்கு
முன்பிருந்தவர்களுமா? அவர்களையும் நாம் அழித்து விட்டோம்.
நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாகவே இருந்தனர்."  (44:37)

"இன்னும் தோப்பு வாசிகள் "துப்பஃ" கூட்டத்தினர் ஆகிய அனைவரும் 
தூதர்களைப் பொய்ப்பித்தனர். எனவே எனது எச்சரிக்கை உறுதியாகி
விட்டது." (50:14)

6- ஆது என்றால்.

ஹூத்(அலை)அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட ஒரு சமூகமே "ஆதுக்"
கூட்டத்தினர்கள். பெரும் வலிமையும்,ஆற்றலும் பெற்றிருந்த இவர்கள்
தமது நபியைப் பொய்ப்பித்தனர். இதனால் இந்த சமூகம் ஏழு இரவுகளும்,
எட்டுப் பகலும் தொடராக வீசிய புயற் காற்றினால் ஒட்டு மொத்தமாக
அழிக்கப்பட்டனர்.

"இவ்வுலகிலும், மறுமை நாளிலும் சாபம் அவர்களைத் தொடரும்,
அறிந்து கொள்ளுங்கள்!  நிச்சயமாக "ஆது "சமூகத்தினர் தமது இரட்சகனை நிராகரித்தனர். இன்னும் அறிந்து கொள்ளுங்கள்! 
"ஹூதின்" சமூகமான"ஆது" சமூகம் (அல்லாஹ்வின் அருளிலிருந்து) 
தூரமாகட்டும்." (11:60)-- (7:65,72)--(23:41)--26:123-136)--(41:15,16)--(51:41,42)
        இவ்வசனங்கள் இவர்கள் பற்றிக் கூறுகின்றது.

7- உம்மிய்யூன் என்றால்.

'உம்மு' என்றால் தாய் "உம்மிய்யூன்" என்ரால் தாயைச் சார்ந்தவன் என்பது இதன் பொருளாகும்.  எழுத, வாசிக்கத் தெரியாவனை 
"உம்மி"  என்பார்கள்.நபி(ஸல்)அவர்களுக்கு எழுதவோ,வாசிக்கவோ 
தெரியாது எனவே அவர்கள் 'உம்மி நபி' என அழைக்கப்பட்டார்கள்.
'உம்மி' என்பது அறிவீனம்,முட்டாள் என்ற அர்த்தத்தைத் தாறாது. 
"உம்மிய்யூன்" என்ற இப்பதத்தை எவுத்தறிவற்ற பாமர மக்களைக்
குறிக்கவும் அல்குர்ஆன் பயன்படுத்துகின்றது. 

பாமரர்களில் சிலர் படித்தவர்களை விட  தேர்ச்சியுடையவர்களாக 
இருக்கலாம்,இவ்வாறே 'உம்மிகள்' எழுதப் படிக்கத்  தெரியாவிட்டால் 
கூட தேர்ச்சியுடையவர்களாக இருக்கலாம். நபியவர்கள் கூட எழுத, வாசிக்கத் தெரியாதவர்கள் இவர்கள் உலக மக்களுக்கு  ஒரு 
தலைவர்களாக ஆட்சிப்பீடம் என்றால் என்ன? என்பதுக்கு 
பாடப்புத்தகமாக வரவில்லையா?.இது போல அல்லாஹ் 
அவர்களுக்கு அல்குர்ஆனைக் கற்றுக்கொடுத்தான்.

"அவர்கள் (எழுத்தறிவற்ற) உம்மிகளும் உள்ளனர் அவர்கள் வெறும்
கற்பனைகலைத் தவிர வேதத்தை அறியமாட்டார்கள் அவர்கள்
கற்பனை செய்வோரேயன்றி வேறில்லை" (2:78)--(3:75)--(7:157,158)--(62:2)
     இவ்வசனங்கள் இவர்கள் பற்றிக் கூறுகின்றன.

8- ஹவாரிய்யூன் என்றால்.

"ஹவாரிய்யூன்" என்றால் சீடர்கள் என்பது பொருள். ஈஸா(அலை)
அவர்களை நம்பிக்கை கொண்ட அவர்களது தோழர்களை
'ஹவாரிய்யூன்கள்' என அல்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

"அவர்களிடம் நிராகரிப்பை "ஈஸா" உணர்ந்த போது 'அல்லாஹ்வுக்காக
எனக்கு உதவுவோர் யார்? என அவர்கள் கேட்டார். அதற்கு
ஹவாரிய்யூன்கள் (எனும் அவரது சீடர்கள்)' நாங்கள் அல்லாஹ்வின்
உதவியாளர்கள், நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம்,
மேலும் நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீரே சாட்சியாக
இருப்பீராக! என்று கூறினர்."  (3:52)---(5:112)--(61:14)
              இவ்வசனங்கள் இவர்கள் பற்றிக் கூறுகின்றன.


 9- அஹ்லுல் பைத் என்றால்.

"அஹ்லுல் பைத்" என்ற பதம் நபிஸல்அவர்களது குடும்பத்தினர் மற்றும்
அவர்களது மனைவியரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தைப்
பிரயோகம். அஹ்லுல் பைத்தினரை நேசிப்பதும்,கண்ணியப்படுத்துவதும்
அவசியம்.

 "நபியின் குடும்பத்தினரே! உங்களிலிருந்து அழுக்குகளை அகற்றி உங்களை முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகின்றான்;.' அல் குர்ஆன் -33. 33

மேலுள்ள இறைமறை வசனத்திற்கு முபஸ்ஸிரீன்கள் அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் பலர், பல்வேறு விதமான விளக்கங்களைக் கூறியுள்ளனர்;. நபிமணி (ஸல்) அவர்கள், இவ்வசனத்திற்குறிய சரியான விளக்கத்தை தமது வாழ்க்கை மூலமாகவும், வார்த்தை மூலமாகவும் தெளிவு படுத்தியிருக்கின்றார்கள்.

நபிகளாரின் மனைவியருள் ஒருவரான ஆயிஷா நாயகி அறிவிக்கின்றார்கள். ஒரு நாள் காலை, நபி ஸல் அவர்கள், கறுப்பு நிறப் போர்வையினால் தம்மைப் போர்த்திக் கொண்டு வெளியே வந்தார்கள். அப்போது, ஹஸரத் அலியின் மகனாராகிய இமாம் ஹஸன் வந்தார்கள். நபியவர்கள் தமது போர்வையினால் போர்த்திக் கொண்டார்கள். அதன் பிறகு இமாம் ஹுஸைன்வந்தார்கள். நபியவர்கள், அவரையும் தமது போர்வையினால் போர்த்திக் கொண்டார்கள். அதன் பிறகு ஹஸரத் பாத்திமா வந்தார்கள். நபியவர்கள் அவரையும் தமது போர்வையினால் போர்த்திக் கொண்டார் கள். பின்னர் ஹஸரத் அலி வந்தார்கள். நபியவர்கள், அவர்களையும் தமது போர்வையினால் போர்த்திக் கொண்டார் கள். அதன் பின், நபியவர்கள் இத் திருமறை வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

நபிகளாரின் மனைவியருள் மற்றொருவரான உம்மு ஸல்மா நாயகி அறிவிக்கின்றார்கள். சூரா அஹ்ஸாபின் 33ம் வசனம், 
நபியின் குடும்பத்தினரே! உங்களிலிருந்து அழுக்குகளை அகற்றி உங்களை முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகின்றான்;.' அல் குர்ஆன் -33. 33  எனது வீட்டில் வைத்தே இறங்கியது. அப்போது என் வீட்டில் நபிகளாருடன் ஹஸ்ரத் அலி ஹஸ்ரத் பாத்திமா, இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ஆகியோர் இருந்தனர் நபியவர்கள்,இவர்கள் நால்வரையும் அழைத்து, தமது போர்லையினால் அவர்களைப் போர்த்தி விட்டு, இவ்வாறு பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்வே ! இவர்களே எனது குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்தினர். ஆகவே, அவர்களை விட்டும் அசுத்தங்களை அகற்றி, அவர்களை பரிசுத்தவான்களாக்கி வைப்பாயாக!

நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மனிதர்களே! நான் உங்கள் மத்தியில் விட்டுச் செல்பவற்றை நீங்கள் பின்பற் றுவீர்களானால் நிச்சயம் வழி தவறவே மாட்டீர்கள். அவை அல்லாஹ்வின் வேதமும் எனது குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத்தினருமாகும்.(ஆதாரம் திர்மிதி பாக-2 பக்-308)

மேற் கூறப்பட்ட இந்த ஹதீஸை நபி ஸல் அவர்கள் அரபாவுடைய நாளின் போது கூறியதாகவும், அவர்களது அந்திம காலத்திலே மதினாவிலுள்ள அவர்களது வீட்டின் அறையில் வைத்து ஸஹாபாக்களுக்கு மத்தியில் கூறி யதாகவும், துல் ஹஜ் மாதம் 18ம் கதீர் கும் எனும் இடத்தில் வைத்துக் கூறியதாகவும் பல அறிவிப்புகள் ஹதீஸ் கிரந்கங்களில் வந்துள்ளன. மேற் கூறப்பட்ட அல்குர்ஆன் வசனமும், ஹதீஸ்களும், அல்குர்ஆனையும், அஹ் லுல் பைத்தையும் பற்றிப் படித்து பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும், அதிலுள்ள முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன.
 
நபி ஸல் அவர்கள் மற்றுமோர் முறை சொன்னார்கள், 
நான் பெறுமதியான இரு பொக்கிஷங்களை உங்கள் மத்தியில் விட்டுச் செல்கின்றேன் அவ்விரண்டில் முதலாவது அல்லாஹ்வின் வேதமான அல் குர்ஆன். அதிலே நேர்வழியும் பிரகாசமும் இருக்கின்றன. ஆகவே அல்லாஹ்வின் வேதத்தை எடுத்து அதனை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்க ள்! என்று கூறிய நபியவர்கள் அல்குர்ஆனை பின்பற்றுவதன் மீது உணர்வூட்டி அதிலே ஆர்வத்தையும் ஏற்படுத்தினார்கள். பின்பு சொன்னார்கள், இரண்டாவது பெறுமதியான பொக்கிஷம் என்னுடைய குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினர். எனது அஹ்லுல் பைத்தினர் விடயத்தில் நான் உங்களுக்கு அல்லாஹ்வை ஞாபகமூட்டுகிறேன். எனது அஹ்லுல் பைத்தினர் விடயத்தில் நான் உங்களு க்கு அல்லாஹ்வை ஞாபகமூட்டுகிறேன். எனது அஹ்லுல் பைத்தினர் விடயத்தில் நான் உங்ளுக்கு அல்லாஹ்வை ஞாபகமூட்டுகிறேன். (ஆதாரம் சஹீஹ் முஸ்லிம் பாக-2 பக்-238)

10- தாப்பத்துல் அர்ழ் என்றால்.

மறுமை நாளின் பெரிய அடையாளங்களில் தாப்பத்துல் அர்ழ் என்ற
ஒரு அற்புதப் பிராணி பூமியிலிருந்து  வெளியாவதும், அது மக்களுடன்
பேசுவதும் ஒன்றாகும். இது என்ன பிராணி எப்படி இருக்கும் என்பதெல்லாம்  அல்குர்ஆனிலும்,அல்ஹதீஸிலும் தெளிவாகக்
கூறப்பட வில்லை.

"(மறுமை ஏற்படுவது குறித்து) விதி அவர்கள் மீது நிகழ்ந்து விட்டால்
பூமியிலிருந்து ஒரு பிராணியை அவர்களுக்கு நாம்  வெளிப்படுத்துவோம். நிச்சயமாக மனிதர்கள் எமது வசனங்களை
உறுதியாக நம்பிக்கை கொள்ளாதது  குறித்து அவர்களுடன் அது
பேசும்." (27:82)

இவ்வாறன விஷயங்களைப் படித்து அவைகளை நமது வாழ்க்கையில்
அறிந்து கொள்வது கடமையிலும் கடமை அல்லாஹ் அவைகளுக்கு
அருள் புரிவானாக ஆமீன். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~***********~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~