Followers

Saturday, December 8, 2012

லஞ்சம்.... இது கேடு கெட்ட செயல்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே.

நம்மளவிலும்,நம் சமூகத்தின் வரிசையிலும் திண்டாடிக்கொண்டிருக்கும் லஞ்சம் என்ற தலைப்பை இங்கே தரிசனம் செய்கின்றேன்.
இந்த லஞ்சம் என்ற பதம் இன்று சமூகத்துக்கு மத்தியில் ஏதோ ஓழிக்கமுடியாத , தன்னளவில் இருந்து அகற்றமுடியாத ஒரு கேடு கெட்ட நிலையை இன்று உலகளாவிய ரீதியில் கண்டு வருகின்றோம்.
அது தன் கை மூலம் கொடுக்கும் லஞ்சம், தன் நாவின் மூலம் வாக்குக் கொடுக்கும் லஞ்சம், தன் செயல்ரூபத்தில் நிர்னைத்துக் காட்டும் லஞ்சம் என்று இன்னும் பல பெயர்களின் மூலம் அந்த வார்த்தையைப் பாவிக்கலாம்.

"தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மக்கள், "ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?" என்று கேட்டார்கள்.
அதற்கு நபி( ஸல்) அவர்கள், "அவர் தம் இரு கைகளால் (அவர்) உழைத்துத் தாமும் பயனடைவார். தர்மம் செய்(து பிறரையும் பயனடைய செய்)வார்!" என்று கூறினார்கள்.
அதற்கு மக்கள், "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையென்றால் அல்லது அவர் அதைச் செய்யா(செய்ய இயலா)விட்டால் (என்ன செய்வது)?" என்று கேட்டனர்.
நபி(ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்!" என்றார்கள்.
மக்கள், "(இதையும்) அவர் செய்ய (இயல)வில்லையென்றால்?" என்று கேட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அப்போது, "அவர் நற்காரியங்கள் செய்யும்படி பிறரை ஏவட்டும்!" என்றார்கள்.
"இதையும் அவர் செய்யாவிட்டால்?" என்று மீண்டும் கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், "அவர் (பிறருக்கு எதுவும்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்" என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ் அரீ (ரலி), நூல்: புகாரி, ஹதீஸ் எண் 6022.

மேலே சொல்லப்பட்ட நபிமொழியை ஆழமாக சிந்தித்தால் ஒரு மனிதன் தன் தேவைகளை எப்படிச் செய்யவேண்டும், என்பதை நன்றாக உணர்ந்து கொள்ளலாம்.
அல்லாஹ் கூறுகின்றான். "மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருளை தவறானமுறையில் உண்ணாதீர்கள். மேலும் பிற மனிதனுடைய பொருட்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதமான முறையில் தின்பதற்காக அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள்".(2:188)

இவ்வசனம் உணர்த்தும் உண்மை என்னவென்றால். இன்றைக்கு வீட்டை விட்டுப் பாதைக்கு சென்றால் வீடு திரும்பி வருமுன் லஞ்சம்,!
முறையிட போலிஸ் நிலையம் சென்றால் அங்கும் லஞ்சம்,!
கிராம உத்தியோகத்தரிடம் சென்றால் அங்கும் லஞ்சம்,!
பாடசாலைக்கு பிள்ளைகளின் தேவைக்கு பெற்றால் சென்றால் அங்கும் லஞ்சம்,!
திருமணம் முடிக்க பெண்ணோ,ஆணோ பார்க்கவேண்டும் என்றால் அதில் செல்லும் புரோக்கருக்கு லஞ்சம்,!
ஏழைகள், பணக்காரர்களிடம் தன் தேவையை சொல்வதற்குச் சென்றால் அங்கு லஞ்சம்,!
எல்லாம் முடிவில் இதற்கு தீர்வு கான அரசியலை நாடினால், நீதி கேற்பதற்கு நீதவானை நாடினல் அங்கும் லஞ்சம்.!


இக்காலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.
சில ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தைவிட லஞ்ச வரவே அதிகம்.
பல நிறுவனங்களில் லஞ்சக் கவர்கள் சகஜமாக நடமாடுகின்றன.
பல வேலைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை லஞ்சமின்றி சாத்தியமற்றதாகிவிட்டன.
இதனால் வசதியற்றோர் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்.
இது பல ஒப்பந்தங்களை மீறுவதற்கும். ஊழியர்கள் நிறுவனப் பொறுப்பாளர்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தவும் காரணமாகிறது. லஞ்சம் கொடுக்கப்படுகிறது. லஞ்சம் கொடுக்கவில்ல எனில் தரமான வேலை நடைபெறுவதில்லை.
அல்லது தாமதப்படுத்தப்படுகிறது.
லஞ்சத்தின் காரணமாக தொழில் நிறுவனர்களில் விற்க, வாங்க பொறுப்பேற்றுள்ள பிரதிநிதிகளின் பைகளில் பொருளாதாரம் நுழைந்து விடுகிறது.
இதுபோன்ற தீயவிளைவுகளின் காரணங்களினால் தான் நபி(ஸல்)அவர்கள் இத்தவறுக்கு உடன்படும் இரு தரப்பினருக்கும் பாதகமாக பிரார்த்தித்தார்கள்.


(ஒரு விவகாரத்தில்) தீர்ப்புப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:அஹ்மத்.

அல்லாஹ்வின் இறை வசனமும், நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

இஸ்லாம் என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 'ஸலாம்' என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.
சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் - இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி - குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் - உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் - சமுதாய எதிரிகளை அடக்கவும் - குற்றவாளிகளை தண்டிக்கவும் அமைதி என்ற நம் மார்க்கம் நமக்கு பல எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது.

மெத்தப் படித்து மேதைகள் ஆவார்
சொத்தைச் சேர்த்து சோடையும் போவார்
அர்த்தம் நூறு வாழ்க்கைக் குரைப்பர்
பொத்திப் பொத்தி பிள்ளையை வளர்த்து
பொறுத்துப் பொறுத்து பிழைகளை மறைத்து
மொத்த வாழ்வும் விழலுக் கிரைப்பர் நம்மவர்கள்.

மிச்சமுள்ள வாழ்வில் இன்னும்
மீந்திருக்கும் நாளும் கொஞ்சம்
மின்னலென ஞானம் வரப்பெற்றால்
அச்சமில்லா வாழ்வுந் தோன்றும்
ஆன்மீகத் தெளிவுந் தோன்றும்
உண்மையொளி உணரக் கூடும்.


இதுக்கு ஒப்ப மனித வாழ்க்கையையும் ,அதே வாழ்க்கைக்கும் நடமாடும் கேடு கெட்ட லஞ்ச ஊழல்களையும் ,நமக்குப் பின்னால் வர இருக்கும்,வளர இருக்கும் நம் குழந்தைச் செல்வங்களின் எதிர் கால நிலையையும் சற்று நிதானமாக சிந்திக்கக் கடமைப் பட்டவர்கள் முஸ்லிம் சமுதாயம்.

இந்த சமுதாயத்தில் குடிமகனும் கூட தெளிவாக, லஞ்சம் தந்தால் தப்பிவிடலாம் என்று, எண்ணும் நிலையுள்ளது. ஊழல் நிறைந்த பிரதிநிதிகள் கொண்ட சமுதாயத்தை, எதிர்கால தூண்களான மாணவர்களால் மட்டுமே மாற்ற முடியும்.

ஊழல் எதிர்ப்பு என்பது சாதாரண பணியல்ல, அபாயகரமான பணி. ஊழல் எதிர்ப்பு ஓர் புள்ளியாக துவங்கி, எதிர்காலத்தில் பெரிய புரட்சியாகவும், வெற்றியாகவும் மாறும். படித்தவர்கள் ஊழலுக்கு எதிராக சிந்தித்து மாற்றம் ஏற்படுத்த விரும்பினால்,தேசத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் வரும்.
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள் பற்றி அல்குர்-ஆனிலும் ஹதீஸ்களிலும் பல இடங்களில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தில் அத்தகைய தீமைகள் சர்வ சாதாரணமாக மலிந்து கிடப்பதை காணலாம். இன்று பெரும்பாலான மனிதர்கள் சிறிது வசதி வந்தவுடனேயே கர்வத்துடனும் மார்க்கத்தின் செயல்பாடுகளில் அலட்சியத்துடனும் தங்களை ஏதோ வானத்தில் இருந்து குதித்ததுபோல் காட்டிக் கொள்கின்றனர். இவர்கள் ஏதோ ஆயிரம் வருடங்கள் இந்த உலகத்தில் வாழப் போவது போலவும்தங்களிடம் இருக்கும் இந்த செல்வம் நிலையாக இருக்கும் என்றும் ஒருவித மயக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய சிந்தனை உடைய முஸ்லிம்கள் தாங்கள் நிலையை மாற்றி நிலையில்லாத இந்த உலக வாழ்கையை விட நிலையான மறுமை வாழ்கையே சிறந்தது என்பதை தங்களுடைய மனதில் நிறுத்த வேண்டும். மேலும் இஸ்லாத்தின் போதனைகளை மற்றவர்களிடம் பரப்ப தங்களால் ஆன முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் தவறிழைக்கக்கூடியவர்களே! அந்தத் தவறிலிருந்து மனிதர்களைத் திருத்தவேண்டுமென்ற நோக்கில், பல்வேறு சட்டங்கள் மனிதனால் இயற்றப்பட்டாலும் தவறுகள் குறைந்தபாடில்லை. நாகரீகம் வளர வளர தவறும் பல்வேறு பரிமாணங்களில் மனிதனை ஆட்டிப்படைக்கிறது. இத்தகைய தீமையிலிருந்து இரண்டு விஷயங்களால் மட்டுமே மனிதனை தீமைகளிலிருந்து மீட்டெடுக்க முடியும்.

1. இறை அச்சம்
2. வெட்கம்

இறைவனுக்கு அஞ்சக்கூடிய ஒருவன், மக்கள் மத்தியில் இருந்தபோதும் தனிமையில் இருக்கும்போதும் தவறு செய்ய அஞ்சுவான். ஏனெனில், மனிதர்கள் நம்மைப் பார்க்காவிட்டாலும் அகிலமனைத்தையும் கண்காணித்துக்கொண்டு இருக்கும் இறைவன் நாம் செய்யும் தவறை கண்கானித்துக்கொண்டிருக்கிறான். நாளை நியாயத்தீர்ப்பு நாளில்  ஆதம்[அலை] அவர்கள் முதல், உலகம் அழியும் காலத்தில் இறுதியாக பிறந்த மனிதன்வரை அனைவரையும் ஒன்றுதிரட்டும் அந்த மஹ்ஸர் மைதானத்தில், நம்முடைய தீமைகளை வெளிச்சம்போட்டு காட்டுவான் என்ற அச்சம் இருந்தால் ஒரு மனிதன் தவறு செய்வதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்வான்.
இறை அச்சம் பலவீனமாக இருக்கும் ஒருவனிடத்தில் வெட்கஉணர்வு இருந்தால், அவனும் தவறு செய்ய யோசிப்பான். ஏனெனில், நாம் தவறு செய்யும் போது யாராவது பார்த்துவிட்டால் மானம் போகுமே என்ற அவனுடைய வெட்கம் அவனை அந்தத் தவறிலிருந்து தற்காத்து காப்பாற்றும்.

எனவே அல்லாஹ் நம்மை இறையச்சமுள்ளவர்கலாக மாற்றுவானாக.!
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
**********************************~~~~~~~~~~~~~~~~~~~****************************