Followers

Saturday, November 24, 2012

இஸ்லாத்தில் உறுதியாக இருப்பது.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அன்பின் சகோதர, சகோதரிகளே.

இஸ்லாத்தில் உறுதியாக இருப்பது.

வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாக நம்புவதும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் திருத்தூதருமாவார் என்பதை உறுதியாக நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.
"அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும்
அல்லாஹ்வை வணங்குங்கள் அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!"
அல்குர்ஆன் 4:36
ஜின்னையும் ,மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. அல்குர்ஆன் 51:56

இணை கற்பித்தல் கூடாது
அகில உலகையும் படைத்து காத்து பராமரிக்கும் ஒரே ஒரு இறைவன் அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது.அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை.எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.


மூன்று விஷயங்கள் எவரிடம் உள்ளதோ அவர் ஈமானின் சுவையை பெற்றுக் கொண்டார்.

1.அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏனைய அனைவரைவிடவும் அவருக்கு விருப்பத்திற்குரியவர்களாக இருக்க வேண்டும்.

2.ஒரு மனிதனை அல்லாஹ்வுக்காக நேசிக்க வேண்டும்
3.நெருப்பில் வீசப்படுவதை ஒருவன் எப்படி வெறுப்பானோ அதே போன்று குஃப்ர் (இறை மறுப்புக்கு) திரும்புவதை அவன் வெறுக்கவேண்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

இம்மூன்று பண்புகளும் ஈமானியப் பண்புகளில் மிக உயர்ந்தவையாகும் அவற்றைப் பூரணப்படுத்துபவர் ஈமானின் இனிமையையும் சுவையையும் பெற்றுக் கொள்வார்.

உணவும் பானமும் நாவினால் சுவைக்கப் படுவது போன்று உள்ளத்தினால் சுவைக்கத் தக்க இனிமை ஈமானுக்கு உண்டு. உடலுக்கு உணவைப் போன்று ஈமான் உள்ளத்திற்கு உணவாக உள்ளது. உடல்ஆரோக்கியமாக இருந்தாலே அது உணவின் சுவையை அனுபவிக்கும். நோயுடன் சுவையை அனுபவிக்க முடியாது.


யார் மரணிக்கும் வரை அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு, அந்த கட்டுப்பாட்டிலேயே உறுதியாக‌ வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவரின் மரண நேரத்தில் வானவர்கள் இறங்கி, 'உனக்கு சுவர்க்கம் உறுதி என்கிற நற்செய்தியை சொல்லுமாறு அல்லாஹ் எங்களை உன்னிடம் அனுப்பியிருக்கின்றான். ஆகவே நீ உன் மறுமை நிலைப் பற்றி பயப்படாதே! உன் குடும்பம் மற்றும் சொத்து சுகங்களைப் பற்றியும் கவலைப்படாதே! நாங்கள் இரு உலகத்திலும் உனக்கு உதவியாளர்களாக இருப்போம்' என அம்மலக்குகள் யாராலும் ஆறுதல் வார்த்தைகள் கூறமுடியாத நேரத்தில் அம்மனிதனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவார்கள். இதைப் பற்றி அல்லாஹ்தாஆலா தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:


நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் படவேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். "நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். "மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன் தரும் விருந்தாகும்" (இது என்று கூறுவார்கள்). (அல்குர்ஆன் 41: 30-32)

அல்லாஹ்வுடைய கட்டளைப்படி வாழ்வதென்பது, தன் வாழ்க்கையை குர்ஆனும் ஹதீஸும் போதிக்கின்ற போதனைகளின்படி அமைத்துக் கொள்வதாகும். அந்த போதனைகளின் வழியிலே உறுதியாக நிற்கவேண்டும்.

'நான் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களைத்தவிர வேறு யாரிடமும் கேட்க மாட்டேனே அத்தகைய ஒரு சொல்லை இஸ்லாத்தில் எனக்குக் கூறுவீர்களாக! எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வைக் கொண்டு நான் ஈமான் கொண்டேன் எனக் கூறுவீராக! பின்னர் (அதன் மீதே) உறுதியாக நிற்பீராக! எனக் கூறினார்கள்.'
அறிவிப்பவர்: அபூ அம்ரா ஸுப்யான் இப்னு அப்துல்லாஹ்(ரலி);
நூல்: முஸ்லிம்


எப்படிப்பட்ட சோதனைகள் வரும்போதும், காலங்கள் மாறும் போதும், இடங்கள் மாறும் போதும் நம் ஈமானின் நிலையோ இஸ்லாமிய நற் பண்புகளின் நிலையோ மாறக்கூடாது. ஆனால் பெரும்பாலான மக்களின் நிலை இதற்கு மாற்றமாக இருக்கின்றது. காலத்திற்குக் காலம் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றவர்களும், செழிப்பானபோது ஒரு நிலையும், சோதனை வரும்போது மற்றொரு நிலைக்கு மாறுபவர்கள்தான் அதிகம்!

அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்துலில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும் பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப்பணியை செய்து வருகிறோம். ஆனால் அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை. இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச் செருகல்களுக்கும் மாற்றத்திற்கும் ஆட்பட்டுவிட்டதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இதற்கு காரணம் என்ன?

இஸ்லாம் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டிலேயே அன்றைய நிலப்பரப்பில் மூன்றில் இருபங்கை தன்வயப்படுத்தியது. கொள்கையிலும் வணக்க வழிபாடுகளிலும் எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாத அதே இஸ்லாம் தான் இன்றும் இருக்கிறது. இத்தனைக்கும் அன்றைய காலத்தில் டிவி ரேடியோ பத்திரிக்கை இன்டர்நெட் போன்ற எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை. அப்படியென்றால் வேறெங்கோ எங்கோ கோளாறு இருக்கிறது. ஆமாம் நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதில் தான் கோளாறு செய்கிறோம். நாம் எதை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம். எதனை மையப்படுத்தி இஸ்லாமை மக்களிடம் கொண்டு போகிறோம் என்பதை கவனமாக ஆராய வேண்டும். அக்காலத்தில் இஸ்லாத்திருக்காக நமது நபி மார்கள் எவ்வளவு தியகங்களும், எவ்வளவு இன்னலுகளும், பட்டு நமது இஸ்லாத்தை பரப்பினார்கள் என்பதை நாம் அறிந்து கொள்வோம். இன்ஷா அல்லாஹ் …,

“யா அல்லாஹ்! உள்ளங்களது நிலைகளை மாற்றியமைப்பவனே! எனது உள்ளத்தினை உனது மார்க்கத்தில் உறுதியாக வைப்பாயாக…!”

இது நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி கேட்டு வந்த பிரார்த்தனை மனிதனது வாழ்வில் எதிர்ப்படும் எத்தனையோ நிலைமைகள் அவனது போக்கையே மாற்றிவிடுகின்றன. ஸஹாபாக்களது வாழ்வில் தான் எத்தனை கஷ்டங்கள் என்றாலும் அவர்களது உள்ளங்கள் இஸ்லாத்தில் நிலை குலையவில்லை…


மிகக் கடுமையான பசியால் வீதிகளில் அடிக்கடி மயக்கமுற்று விழுவது அபூஹுரைரா (றழி) அவர்களின் வாழ்வில் சகஜமான நிகழ்வு.


அபூஹுரைரா (றழி) அவர்களுக்கு மிகக் கடுமையான பசி. பள்ளிவாயலுக்கு வெளியே வந்து நிற்கின்றார்கள். பள்ளியிலிருந்து வெளியே வந்த அபூபக்கர் (றழி)யை சந்திக்கிறார்கள். ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தைக் கேட்கிறார்கள்.


- அபூ ஹுரைராவே! நபியோடு தொடர்ந்தும் தோழமை கொண்டிருக்கும் உங்களுக்குத் தெரியாத விளக்கமா?

(அபூபக்கர் (றழி) அபூஹுரைரா கேட்டதற்கான நோக்கத்தை விளங்கிக் கொள்ளவில்லை)

- இரண்டாவதாக பள்ளியிலிருந்து வெளியே வந்த உமர் (றழி)யிடம் அபூஹுரைரா (றழி) ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தைக் கேட்கிறார்கள்.


- அபூஹுரைராவே! உங்களுக்குத் தெரியாத விளக்கமா எனக்குத் தெரிந்து விடப்போகிறது?

(அபூ ஹுரைராவின் நோக்கத்தினை உமர் (றழி)யும் விளங்கிக் கொள்ளவில்லை)

இதனை தூரத்தில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்தார்கள் கருணை நபி (ஸல்) அவர்கள். அபூபக்கர் (றழி), உமர் (றழி) அவர்களிடம் அபூஹுரைரா குறித்த வசனத்திற்கான விளக்கத்தைக் கேட்டதற்கான காரணம் தனது குரலின் பலவீனத்தைக் கேட்டு தனது பசியினை விளங்கிக் கொள்ளத்தான் எனும் காரணத்தை நபியவர்கள் புரிந்து கொண்டார்கள்.


அபூ ஹுரைரா (றழி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு வீடு அழைத்துச் சென்றார்கள் நபி (ஸல்) அவர்கள். ஒரு பாத்திரத்தில் ‘பால்’ இருந்தது. அபூ ஹுரைரா (றழி) குடிப்பதற்கு அவசரப்பட்டார்கள். அவ்வளவு பசி அவர்களுக்கு. ஆனால் நபியவர்கள் திண்ணைத் தோழர்கள் அனைவரையும் அழைத்து வரும் படி அபூஹுரைராவிடம் கூறினார்கள். அபூஹுரைரா (றழி)க்கு மிகப் பெரும் சங்கடம். கொஞ்சப் பால் திண்ணைத் தோழர்கள் அனைவருக்குமா? அனைவரையும் அழைத்து வந்தார்கள். வந்தவர்கள் அனைவரும் வயிறு நிரம்பக் குடித்தார்கள். நபி (ஸல்) : இப்போது நானும் நீரும் தான் இருக்கிறோம், அப்படித்தானே!


- ஆம். யா ரஸூலல்லாஹ்…


- அபூ ஹுரைராவே! நீங்கள் குடியுங்கள்.

(அபூஹுரைரர் நானும் குடித்தேன்)

- நீங்கள் குடியுங்கள் (அபூஹுரைரா : நானும் குடித்தேன்)


நீங்கள் குடியுங்கள் என்று அபூஹுரைராவுக்கு நபியவர்கள் கூறிக்கொண்டே இருந்தார்கள்.


- அபூ ஹுரைரா : உங்களுக்கு சத்தியத்தைக் கொடுத்தனுப்பியவன் மீது சத்தியமாக இதற்கு மேல் என்னால் குடிக்க முடியாது.


பிறகு எஞ்சியதை நபியவர்கள் குடித்தார்கள்.


இச்சம்பத்திலிருந்து விளங்க வேண்டிய சில உண்மைகள். இஸ்லாத்திற்காக தியாகம் செய்வதும், வரும் கஷ்ட நஷ்டங்களில் பொருமையாக இருப்பதும் , உள்ளத்தை இஸ்லாத்திற்காக உறுதியாக வைப்பதையும் இச்சம்பவம் நமக்கு பெரியதொரு பாடத்தைப்புகட்டுகின்றது. அல்ஹம்துலில்லாஹ் ..அன்றைய சஹாபாக்கள் இஸ்லாத்தில் எவ்வளவு தியாகங்கள் ,இஸ்லத்தை எவ்வாறு பற்றிப்பிடித்தார்கள் இதே படிப்பினைகள் நபியுடைய சமுதாயம் நாம் நாமும் இப்படியான தியாகங்களை, செய்யவேண்டும். மார்க்கத்துக்காக போராடவேண்டும். இஸ்லாம் ஒவ்வொரு முஃமினுடைய உள்ளத்திலும் ஆலாமாகப்பதிய வேண்டும்.
அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவானாக.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் ஒரு வார்த்தையானாலும் சரியே முறையாக சொல்வோமாக .
ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 அஹமட் யஹ்யா, ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA.
*****************************************************