Followers

Friday, November 23, 2012

ஈமானின் கிளைகள்..


 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு ஈமானின் கடமைகள் என்ற தலைப்பில் ஒரு சில விளக்கங்களை இவ்விடத்தில் தரிசனம் செய்கின்றேன் அல்ஹம்துலில்லாஹ்.


ஈமானின் கிளைகள்..

சொற்களும்,செயல்களும் சரியான கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டால்தான் அவை சரியானது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பது மார்க்க ஆதாரங்களான குர்ஆன் , ஹதீஸிலிருந்து அறியப்பட்ட விடையமாகும். கொள்கை ஆதாரமற்றதாக இருக்குமானால் அதன் மூலம் உருவாகக்கூடிய சொற்களும்,செயல்களும் தவறானதாக, வீணானதாக ஆகிவிடும்.
அல்லாஹ் கூறுகின்றான். "மேலும் எவன் ஈமானை நிராகரித்து விடுகிறானோ அவனின் நற்செயல் அழிந்து விடும். அவன் மறுமையில் நஷ்டமடைந்தவர்களில் இருப்பான்". (5:5)

"உமக்கும் உமக்கு முன் இருந்தவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது இதுதான்.நீர் இணைகற்பித்தால் உமது நல்லறங்கள் அழிந்து விடும். நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்." (39:65)
உண்மையில் சரியான கொள்கை என்பது அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும்,வேதங்களையும், மறுமை நாளையும், நன்மை,தீமைகள் யாவும் அவன் விதித்த விதிப்படியே நடைபெறுகின்றன என்பதையும் நம்புவதில் மட்டுமே அடங்கியிருக்கிறது என்பதை இறைவேதமும், இறைத்தூதரின் வழிகாட்டுதலும் திட்டவட்டமாக அறிவித்து விட்டன. இந்த ஆறு விஷயங்கள் தான் சரியான அடிப்படைக் கொள்கையாகும். இவற்றைக்கொண்டு தான் கண்ணியமிக்க அல்லாஹ்வின் வேதம் இறங்கியது. இவற்றைக்கொண்டுதான் அவனது தூதர் நபி(ஸல்)அவர்கள் அனுப்பப்பட்டார்கள். இவற்றுக்கு ஈமானின் கடமைகள் என்றும் கூறப்படும்.
 

1- அல்லாஹ்வை நம்புவது.

அல்லாஹ்வை நம்புவது என்றால்? அல்லாஹ்தான் வணக்கத்திர்குத்தகுதியான உண்மையான இறைவன் என நம்புவது.
ஏனேனில் அவன்தான் அடியார்களைப்படைத்தான், உலகத்தைப்படைத்தான் படைக்கப்பட்ட அனைத்துப்படைப்புக்கும் உபகாரம் செய்பவன், அவைகளுக்கு வாழ்வாதாரம் வழங்குபவன், அவைகளின் இரகசியங்களையும்,பரகசியங்களையும் அறிபவன், அவைகளில் கட்டுப்பட்டு நடப்பவை நடப்பவர்களுக்கு நற்கூலி வழங்கவும், மாறு செய்பவர்களுக்குத் தண்டனை வழங்கவும் சக்தியுள்ளவன். இந்த வணக்கத்திற்காகத்தான் அல்லாஹ் மனிதர்களையும், ஜின்களையும் படைத்தான். இந்த வணக்கத்தைச் செய்யுமாறே அவர்களை ஏவவும் செய்தான்.
அல்லாஹ் கூறுகின்றான்."ஜின்களையும்,மனிதர்களையும் என்னை வணங்குவதர்காவே தவிர நான் படைக்கவில்லை நான் அவர்களிடமிருந்து எந்தப்பபொருளையும் விரும்பவில்லை. அவர்கள் எனக்கு உணவளித்திட வேண்டுமென்று நான் நாடவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவன், ஆற்றலுடையவன், உறுதியானவன்."(51:56-58)

இந்த உண்மையை விளங்கி இதன்பால் மக்களை அழைப்பதற்காகவும், இதற்கு மாறுசெய்பவர்களை எச்சரிக்கை செய்வதற்காகவும்தான் அல்லாஹ் தூதர்களை அனுப்பிவைத்தான். அல்லாஹ் கூறுகின்றான்.

"அல்லாஹ்வையே வணங்குங்கள். "தாகூத்" (தீய சக்தி)களை விட்டு விலகிக்கொள்ளுங்கள் என்று திண்ணமாக நாம் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒருதூதரை அனுப்பிவைத்தோம்."(16:36)


இத்தகைய வணக்க வாழிபாட்டின் எதார்த்த நிலை என்னவென்றால் பிராத்தனை செய்தால், பயப்படுதல், ஆதரவு வைத்தல், தொழுகை,நோன்பு, அறுத்துப்பலியிடுதல், நேர்ச்சை செய்தல் போன்ற அனைத்து வகையான வணக்கங்களை அச்சத்துடனும் பணிவான முறையில் அதே சமயம் அல்லாஹ்வை பரிபூரணமாக நேசிப்பதுடனும், அவனது கண்ணியத்திற்குப் பணிவதுடனும் அவனுக்கு மட்டுமே செய்வதாகும். திருமறைக்குர்ஆனில் பெரும்பாலான விஷயங்கள் இம்மகத்தான அடிப்படை அம்சத்தைப் பற்றித் தான் இறங்கியிருக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான். 
நபியே!)வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை வணங்குவீராக!தெரிந்துகொள்ளுங்கள்!தூய்மையான இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரித்தாகும்"(39:2-3)

"அவனைத்தவிர வேறெவரையும் நீங்கள் வணங்கக்கூடாதென உம் இறைவன் விதித்துள்ளான்."(17:23)


"வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உருத்தாக்கி அவனிடமே பிராத்தியுங்கள். நிராகரிப்பாளர்கள் இதனை வெறுத்தாலும் சரியே!"(40:14)


அல்லாஹ் தன் அடியார்கள் மீது கடமையாக்கிய அனைத்தையும் நம்புவதும் அல்லாஹ்வை நம்புவதில் அடங்கும். உதாரணமாக இஸ்லாத்தின் ஜந்து அடிப்படைக் கடமைகளான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதரென்றும் சாட்சி சொல்வது, சொல்வது , தொழுகையை நிலைநிறுத்துவது, ஸகாத் கொடுப்பது,ரமழனில் நோன்பு நோற்பது, கண்ணியமிக்க அல்லாஹ்வின் ஆலயத்திற்குச் சென்று வர சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வது ஆகியவற்றையும் இன்னும் தூய்மைமிக்க இம்மார்க்கம் கொண்டுவந்துள்ள ஏனைய கடமைகளையும் நம்புவதாகும். இக்கடமைகளிலேயே மிக முக்கியமானதும் மகத்துவமிக்கதும், "லாஇலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நம்புவதாகும்.

மேலும் அல்லாஹ்தான் அகிலத்தார்களைப் படைத்து அவர்களின் காரியங்களை தனது அறிவு,ஆற்றளைக்கொண்டு அவன் நாடியது போன்று நிர்வகித்து வருகிறான். அவனே இவ்வுலகத்திற்கும் மறு உலகத்திற்கும் அதிபதி, அகில உலகமனைத்தையும் படைத்துப் பாலிப்பவன்,அவனைத் தவிர வேறு படைப்பாளன் ,அவனைத் தவிர வேறு பரிபாலிப்பவன் எவருமில்லை. அடியார்களைச் சீர் திருத்தவும், இம்மை ,மறுமை வாழ்விற்கு எதில் ஈடேற்றம் இருக்கிறதோ அதன் பால் அவர்களை அழைக்கவும் அவன் தூதர்களை அனுப்பி வைத்தான்.

வேதங்களையும் இறக்கி வைத்தான்.இன்னும் இவை அனைத்திலும் அவனுக்கு இணை துணை ஏதுமில்லை என்று நம்புவதும் அல்லாஹ்வை நம்புவதில் அடங்கும்.
அல்லாஹ் கூறுகின்றான். "அல்லாஹ் அனைத்துப்பொருள்களையும் படைத்தவன் அவன் ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளன்."(39:62)

கண்ணியமிக்க இறை வேதத்திலும் நம்பிக்கைக்குரிய அவனது தூதர் மூலமும் வந்துள்ள இறைவனின் அழகிய பெயர்களையும், உயர்வுமிக்க அவனது பண்புகளையும் மாற்றாமல்,மறுக்காமல், உருவகப்படுத்தாமல்,ஒப்பாக்காமல்
நம்பிக்கை கொல்வதோடு இவை அறிவிக்கின்ற மகத்தான அர்த்தங்களையும் நம்ப வேண்டும். அவ்வர்த்தங்கள் தாம் அல்லாஹ்வின் தன்மையாகும். இத்தன்மைகளிலில் எதையும் அவனது படைப்புகளுக்கு ஒப்பாக்காமல் அவனுக்கே உரித்தான விதத்தில் அவற்றை அவனுக்குக் கொடுப்பது கடமையாகும். அல்லாஹ் கூறுகின்றான்."அவனைப்போன்று எதுவும் இல்லை அவன்(யாவற்றையும்)செவியேற்பவனும்,பார்ப்பவனும் ஆவான்.(42:11)
 
 
2- மலக்குகளை நம்புவது. 
இவர்களைப் பொதுவாகவும், குறிப்பாகவும் நம்பவேண்டும். எவ்வாறெனில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு மலக்குகளிருக்கிறார்கள், அவன் தன்னை வணங்கும் அர்ஷை சுமக்கும் பொறுப்புக் கொடுக்கப்பட்டவர்கள்.சுவர்க்கத்தையும்,நரகத்தையும் பாதுகாப்பவர்கள்,அடியார்களின் செயல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் அதிகமான வகையினர் உள்ளனர் என நம்ப வேண்டும்.
மேலும் குறிப்பாக ஜிப்ரீல், மீகாயீல் , நரகத்தின் பாதுகாவளர் மாலிக், சூர் ஊதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர் இஸ்ராயீல் போன்ற அல்லாஹ்வும் அவன் தூதரும் பெயர் குறிப்பிட்டு சொல்லியிருக்கின்றவர்களையும் நம்ப வேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்."வானவர்கள் ஒளியாலும் , ஜின்கள் நெருப்பின் ஜூவாலையிலிருந்தும் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(ஏற்கனவே)உங்களுக்குக் கூறப்பட்டு விட்ட ஒன்றிலிருந்து(அதாவது மண்ணிலிருந்து)படைக்கப்பட்டுள்ளனர்." அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)அவர்கள். நூல். (முஸ்லிம்.2996)

 
3- வேதங்களை நம்புவது.

அல்லாஹ் தனது கடமையை விளக்குவதற்காகவும் அதன் பால் மக்களை அழைப்பதற்காவும் தனது நபிமார்கள், ரசூல்மார்களுக்கு வேதங்களை இறக்கியருளினான் எனப் பொதுவாக நம்புவது அவசியமாகும். குறிப்பாக தவ்ராத், இன்ஜீல்,ஜபூர், குர்ஆன் போன்ற அல்லாஹ் பெயர் குறிப்பிட்டுச் சொன்ன வேதங்களை நம்ப வேண்டும். திருக்குர்ஆன் தான் இவற்றில் மிகச் சிறந்ததும் இறுதியானதும் ஆகும். இது முந்தைய வேதங்களை விட உயர்வானதும் அவற்றை உண்மைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் இந்தக்குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான நபிவழியையுமே பின்பற்றுவதோடு எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக எடுத்துக்கொள்வது அனைத்து சமுதாயத்தினர் மீதும் கடமையாகும். ஏனெனில் அல்லாஹ் நபி(ஸல்)அவர்களை ஜின், மனித சமுதாயம் அனைத்திற்கும் தூதராக அனுப்பி அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதற்காக இந்தக்குர்ஆனையும், அவர்களுக்கு இறக்கியருளினான். இத்திருக்குர்ஆனை அல்லாஹ் இதயங்களிலுள்ளதற்கு நோய் நிவாரணமாகவும், யாவற்றையும் தெள்ளத் தெளிவாக விளக்கக்கூடியதாகவும், அகிலத்தாருக்கு நேர்வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருளாகவும் ஆக்கினான்.


அல்லாஹ் கூறுகின்றான். "இது நாம் அருளிய பாக்கியம் பொருந்திய வேதமாகும். எனவே நீங்கல் இதனைப் பின்பற்றுங்கள்;(நம்மை)அஞ்சுங்கள்;அருள் செய்யப்படுவீர்கள்." (6:155)

"இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்கக்கூடியதாகவும்,நேர்வழி
காட்டக்கூடியதாகவும்,அருளாகவும் முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் உமக்கு அருளினோம். (16:89)

 
4- தூதர்களை நம்புவது.

தூதர்களைப் பொதுவாகவும் குறிப்பாகவும் நம்புவது அவசியமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்குச் சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறவும் நரகத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்யவும் சத்தியத்தின் பால் அவர்களை அழைப்பதற்காகவும் தூதர்களை அனுப்பிவைத்தான். யார் அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நற்பாக்கியம் பெற்று வெற்றி பெற்று விட்டார். யார் அவர்களுக்கு மாறுசெய்கின்றாரோ அவர் ஏமாற்றமும் கைசேதமும் அடைந்து தோல்வி அடைந்து விட்டார். இறைத்தூதர்களில் நம்முடைய நபி(ஸல்)அவர்கள் தாம் இறுதியானவரும் மிகச் சிறந்தவருமாவார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான். "திண்ணமாக நாம் ஒவ்வொரு சமுதாயத்திர்கும் அல்லாஹ்வை வணங்குங்கள் அவன் அல்லாதவர்களை வணங்குவதிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என(போதிக்குமாறு)ஒரு தூதரை அனுப்பி வைத்தோம்." (16:36)

"முஹம்மத் உங்களுடைய ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை.மாறாக அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களில் இறுதியானவராகவும் இருக்கிறார்." (33:40)


தூதர்களில் அல்லாஹ்வும் அவன் தூதரும் பெயர் குறிப்பிட்டுச் சொல்லியிருகிகின்றவர்களை நாம் குறிப்பாக நம்ப வேண்டும். உதாரணமாக நூஹ், ஹூத், ஸாலிஹ்,இப்றாஹிம்(அலை) மற்றும் பலரையும் நம்ப வேண்டும்.
5- இறுதி நாளை நம்புவது.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அறிவித்துள்ள மரணத்திற்குப் பின்னர் நிகழவிருக்கின்ற அனைத்து விஷயங்களையும் நம்பவது இதில் அடங்கும். உதாரணமாக கப்ருடைய மண்ணரையின் சோதனை, அதன் வேதனை , அங்கு கிடைக்கும் இன்பம் , மறுமை நாளில் ஏற்படுகின்ற அமளிகள் , துன்பங்கள் , பாலம் , தராசு , கேள்வி கணக்கு , நற்கூலி , தண்டனை , மக்களுக்கு பட்டோளை கொடுப்பது , அப்போது தமது பட்டோளை வலது கையில் வழங்குவோர் இருப்பார்கள். தம் பட்டோளை இடது கையில் அல்லது தமது முதுகுக்குப்பின்னால் வாங்குவோரும் இருப்பார்கள்.

இன்னும் நமது நபி(ஸல்)அவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீர்த் தடாகத்தை நம்புவதும், சுவர்க்கம், நரகம், முஃமின்கள் அல்லாஹ்வைப் பார்ப்பது, அவர்களிடம்அல்லாஹ் பேசுவதும் ஆகியவற்றையும் மற்றும் குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் வந்துள்ள இது சம்பந்தமான அனைத்தையும் நம்புவதும் இதில் அடங்கும். எனவே இவையனைத்தையும் அல்லாஹ்வும் அவன் தூதரும் விளக்கிய முறைப்படி நம்புவது கடமையாகும்.


6- விதியை நம்புவது.

இதில் நான்கு விஷயங்கள் உள்ளன.

1- நிச்சயமாக அல்லாஹ் இதுவரை நடந்தனையும் இனி நடக்கவிருக்கின்றவற்றையும் அறிந்துள்ளான். இன்னும் தன்னுடைய அடியார்களின் நிலமைகள், அவர்களின் வாழ்வாதாரங்கள், ஆயுட் காலம், அவர்களின் செயல்கள் மற்றும் அவர்களுடைய இதர விஷயங்கள் அனைத்தையும் அவன் அறிந்துள்ளான். இதில் எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல என நம்புவது .
அல்லாஹ் கூறுகின்றான். "நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்." (9:115)

2- அவன் நிர்ணயித்துள்ள எல்லாவற்றையும் அவன் எழுதி வைத்துள்ளான் என நம்புவது. அல்லாஹ் கூறுகின்றான். "நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் வரைந்துள்ளோம்."(36:12)

3- செயல்படுத்தப்படுகின்ற அவனது நாட்டத்தை நம்பவது. அல்லாஹ் நாடியது நடக்கின்றது, அவன் நாடாதது நடக்காது . அல்லாஹ் கூறுகின்றான். "அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைச் செய்வான்"(3:40)
உலகிலுள்ள அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவையே என நம்புவது. அவனையன்றி வேறு படைப்பாளன் யாருமில்லை. அவனைத் தவிர வேறு பரிபாலிப்பன் எவனுமில்லை.
அல்லாஹ் கூறுகின்றான். "அவன் தான் உங்களைப் படைத்துப் பரிபாலிப்பவானாகிய அல்லாஹ்!அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.(அவன்)ஒவ்வொரு பொருளையும் பாடத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்.அவன் அனைத்திற்கும் பொருப்பாளன்." (6:12)

மேலே சொல்லப்பட்டவைகள் ஈமானின் கிளைகள் . ஒரு முஃமின் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நம்பவேண்டிய ஒவ்வொன்றும் சொல்லப்பட்ட சிரு குறிப்பை மேலே சொல்லப்பட்டு இருக்கின்றது.
எனவே நம்மால் முடிந்த அளவு முழுமையாக ஈமானின் பரிபூரண தன்மைகளை விளங்கி பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் உறுதியாக இருப்பதற்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
***********************************************************************************