Followers

Sunday, November 18, 2012

மனிதனின் கடமைகளும், உரிமைகளும்.

 
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

மனிதனின் கடமைகளும், உரிமைகளும்.

“மனிதர்களே உங்களை ஒரு ஆண் பெண்ணில் இருந்தே படைத்தோம் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கு அறிபவன் (அல் குர்ஆன் 4913)
இஸ்லாம் ஒரு மனிதன் அல்லது தேசம் செல்வம் சக்தி, அல்லது இனத்தின் அடிப்படையில் பாரபட்சத்துக்கு உள்ளாவதை தடை செய்துள்ளது. இறைவனின் படைப்பில் மனிதர்கள் யாவரும் சமமானவர்களே. அல்லாஹ் விடத்தில் மனிதர்களின் தகுதி அவர்களின் இறையச்சம் மற்றும் நன்னடத்தை என்பவற்றை கொண்டே மட்டிடப்படுகின்றது.

இயந்திர வாழ்கையாகிவிட்ட இன்றைய காலத்தில் ஒரு மனிதன் தனக்கும் மற்றவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதை புரிந்து கொண்டால் அவன் வாழ்கையை சரியான முறையில் அமைந்து விடும். இன்றைய அறிவியல் யுகத்தில் பறவைகள் போன்று பறப்பதற்கும் மீன்களை போன்று நீந்துவதற்கும் நமக்குக் கற்பிக்கப்படுகிறது. ஆனால் நிலத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை மட்டும் தெரிந்து கொள்வதில்லை. மனிதனுடைய வாழ்க்கை நெறி தவறிச் செல்வதால் ஏற்படும் பிரச்சனைகள், குழப்பங்கள், உயிரிழப்புகள், சமூக சீர்கேடுகள் என விளைவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.


மனிதர்கள் தன் கடமைகளை சரியாக அறிந்துக் கொண்டால் தன்னுடைய உரிமைகளும் மற்றவர்களின் உரிமைகளும் சரியாக பேணப்படும். மனிதன் தன் மீதுள்ள கடமைகளை அறிந்துக் கொள்வதும் பிறருடைய உரிமைகளை பேணுவதும் தலையாய கடமையாகும்.


மனிதனை மனிதன் மதிக்காத வரை மறுமையில் விமோசனம் கிடைக்காது

இறைவனால் தரப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் ஒரு சம்பூரணமான வாழ்க்கைத்திட்டத்தை முன்வைக்கின்ற மார்க்கமாகும். உலகில் படைக்கப்பட்ட அத்தனை படைப்புகளையும் அரவணைக்கின்ற மார்க்கமாகும். இந்த படைப்புகளில் மிக உயர்ந்த படைப்பாகிய மனிதனை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கின்ற, மதிக்கின்ற ஒரு மார்க்கமாகும்.

இஸ்லாத்தில் இறைவன் உரிமைகள், கடமைகள் என பல்வேறு வகையான சலுகைகளை ஏற்படுத்தி இருக்கின்றான். அவைகளை நாம் பொதுவாக இரண்டு வகைக்குள் உள்ளடக்கலாம். அதாவது, ஒரு மனிதன் தன்னைப் படைத்த இறைவனுக்குச் செய்கின்ற உரிமைகள், கடமைகளாகும்.

இதனை நாங்கள் “ஹுகூகுல்லாஹ்” என்ற வரையறைக்குள் உள்வாங்க முடியும். அப்படியென்றால் ஒரு மனிதன் தனது இறைவனுக்கு செய்கின்ற தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களைக் குறிப்பிடலாம்.

இந்த உரிமைகளை, கடமைகளை மனிதன் இறைவனுக்கு செய்யாது விடுவானேயானால் அவனை இறைவன் நாளை மறுமையில் பார்த்துக் கொள்வான். அந்த கடமைகளை விட்டால் என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்று கூறி இருக்கின்றானோ அவைகள் அனைத்தும் மறுமையில் மாத்திரம் தான் கிடைக்கும்.


நீங்கள் அனைவருமே பொறுப்புடையவர்களாவீர். ஒவ்வொருவரும் தம் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள். தலைவன் ஒரு பொறுப்பாளன். தன் பொறுப்பில் உள்ளவர்கள் அவன் விசாரிக்கப்படுவான். ஒரு ஆண் தன் குடும்பத்தினரின் பொறுப்பாளன். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் விசாரிக்கப்படுவான். ஒரு பெண் அவளது கணவனின் வீட்டிற்கு பொறுப்பாளி. தன் பொறுப்பு பற்றி அவளும் விசாரிக்கப்படுவாள். ஒரு வேலைக்காரனும் கூட தன் முதலாளியின் பொருட்களின் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மேற்கண்ட ஹதீஸிலிருந்து ஒவ்வொருவரும் தன் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்படுவார்கள் என்பதையும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதையும் அறியலாம்.

படைத்த இறைவன் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்திருக்கிறான். மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும், வழிகாட்டுதலையும், வணக்க வழிபாட்டு முறைகளையும் தந்த இறைவன் செய்த அருளுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகள்,


* நேர்வழி காட்டிச் சென்ற இறைத்த தூதர் (ஸல்) அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,

* பெற்றோர் குழந்தைகள் ஒருவர் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,


* கணவர் மனைவி ஒருவர் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,


* ஆசிரியர் மாணவர் ஒருவர் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,


* ஆட்சி அதிகாரத்திலிருப்பவர்கள் குடிமக்கள் ஒருவர் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,


* உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமைகள்,


* ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள்,

என மனிதர்களாகிய நமக்கு பல கடமைகள் இருக்கிறது.

ஆனால் இன்னொரு பகுதி இருக்கின்றது அவைகள் உலகில் வாழும் போது சரிவர நிறைவேற்றப்படாத பட்சத்தில் அதற்கான தண்டனைகள் இவ்வுலகில் வழங்கப்படும் எனவும் இறைவன் எச்சரிக்கை விடுகின்றான்.


அந்த விடயம்தான் மனிதன் மனிதனுக்கு செய்கின்ற உரிமைகள், கடமைகளாகும். இதனை நாங்கள் “ஹூகூகுல் இபாத்” என்று சொல்லலாம். ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உரிமைகளில் யாரும் கையடிக்க முடியாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,


“ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய உரிமைகள், கடமைகள் 5 இருக்கின்றன. அவைகள்,

1. ஒரு முஸ்லிம் ஸலாம் கூறினால் அதற்கு அழகியமுறையில் பதில் சொல்லுதல்.


2. தாகித்த ஒருவனுக்கு தண்ணீர் புகட்டுதல்.


3. ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்லுதல்.


4. தும்மிய ஒருவருக்கு அதனை கேட்டவர் பதில் கூறுதல்.


5. நோயுற்ற ஒருவனை சுகம் விசாரிக்கச் செல்லுதல் என்பதாகும்.


அன்பானவர்களே!

இந்த உரிமைகளை சற்று ஆழ்ந்து நோக்கும் போது இவைகள் எமக்கு சர்வசாதாரணமான விடயங்களாகத் தெரிகின்றன. இவைகளை செய்வதற்கு எந்தவொரு செலவோ அல்லது நஷ்டமோ ஏற்படப் போவதில்லை.

ஆனால் இவைகள் இன்று எமது சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்ற அற்ப விடயங்களாக மாறி இருக்கின்றன. இதனால் மனிதப் புனிதனாக வாழ வேண்டிய ஒரு மனிதன் மிருகங்களை விடவும் கேவலமான முறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.


சிறு, சிறு பிரச்சினைகளுக்காக சண்டை சச்சரவுகளுக்காக இந்த விடயங்களை செய்யாது விடுகின்றோம். அன்பும், பண்பும், பாசமும், நேசமும் ஏற்படக்கூடிய இந்த விடயங்களை செய்யாது விட்டதனால் பொறாமையும், கோபமும், பழிவாங்கும் தன்மையும் எமக்கு மத்தியில் ஏற்பட்டு பல பிரச்சினைகளையும் சிக்கல்களையும் எமது வாழ்வில் அன்றாடம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். ஆகவே அடுத்த மனிதனின் உரிமைகள் விடயத்தில் அக்கறை காட்டுவது அவசியமாகின்றது.


இஸ்லாம் கூறியிருக்கின்ற சிறிய சிறிய விடயங்களில் ஆழமான அர்த்தங்கள் பொதிந்திருப்பதை நாங்கள் காணலாம். நான் மேற்கூறிய விடயங்கள் மாத்திரம்தான் நாம் மனிதனுக்கு செய்யும் உரிமைகள் என்று நினைத்துவிடக் கூடாது. மாறாக இன்னும் பல அம்சங்கள் எமது வாழ்வோடு பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது.


மனிதன் ஒரு சமூகப் பிராணியாவான். அவன் இயற்கையாக சமூகத்திற்குள் ஒன்றி வாழும் தன்மையுடையவனாக காணப்படுகின்றான். நாம் பகுத்தறிவுள்ளவர்கள் என்ற வகையில் மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகள், உரிமைகள் பல இருக்கின்றன.


பசித்தோருக்கு உணவளித்தல், விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவிபுரிதல், தொழிலுக்கு வழிகாட்டல், உடை அளித்தல், வேலை செய்தவருக்கு ஒழுங்காக கூலி கொடுத்தல், நல்ல பிரயோசனமான அறிவுகளை வழங்கல், விருத்தாப்பிய நிலையில் உள்ள வயோதிபர், முடவர், செவிடர் ஆகியோர்களுக்கு உதவி செய்தல், மார்க்க அறிஞர்களை உருவாக்குதல், கல்விமான்களை உருவாக்குதல், வைத்தியர்களை உருவாக்குதல் போன்ற அனைத்தும் மனிதன் மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளாக இருக்கின்றன. இவைகளைச் செய்வதனால் ஒற்றுமையும், பரஸ்பர உறவும் ஏற்படுகின்றன.


எமது நாட்டில் பேரழிவுகளான சுனாமி, வெள்ளப்பெருக்கு, பயங்கரவாத யுத்தம் போன்றவைகள் ஏற்பட்ட காலகட்டங்களில் "ஹூகூகுல்லாவின்" செயற்பாடான சுன்னத்தான உம்ராவை நிறைவேற்றுவதைவிட "ஹூகூகுல்" இபாதின் செயற்பாடான பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வது சிறந்ததொரு செயலாக கருதப்படுகின்றது. எனவே இதன் மூலம் மனிதன் மனிதனுக்கு செய்ய வேண்டிய உரிமைகள் எவ்வளவு தூரம் அவசியமானது என்பதை அறிந்துகொள்ள முடியும்.


அதுமாத்திரமல்ல, இவ்வாறான செயற்பாடுகள் நன்மையான செயல்களாக இருக்க வேண்டுமே தவிர, பாவமான காரியங்களாக இருக்கக்கூடாது. அவைகளுக்கு உதவியாகவும் நாம் ஆகிவிடக்கூடாது. ஒருவன் மார்க்கத்திற்கு முரணான காரியங்களைச் செய்ய உதவி கேட்கின்றான் என்றால் அதற்கு நாம் உதவிகள் செய்து அதனை செய்வதற்கு இடமளிக்கக்கூடாது.


இதனைத்தான் இறைவன் தனது திருமறையில் பின்வருமாறு தெளிவாக கூறியுள்ளான். “விசுவாசிகளே! நல்ல விடயங்களிலும், இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். மாறாக பாவமான காரியங்களிலும், விரோத நடவடிக்கைகளிலும் ஒருவருக்கொருவர் உதவி புரியாதீர்கள்” (அல்மாயிதா - 02)
எனவே இந்த உலகில் நிலையான, உறுதியான சமாதானமும், உலக மக்கள் அனைவரும் சுபீட்சமான, சந்தோஷமான வாழ்க்கையையும் அனுபவிக்க, சுவாசிக்க வேண்டுமாக இருந்தால் “ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு சகோதரனாவான்” என்ற நபியவர்களின் கூற்றுக்கு அமைவாக அடுத்த மனிதனையும் மதித்து, அவனும் எமது சகோதரனே! என்ற தூய, கலப்பற்ற எண்ணத்துடன் வாழ்வோமாக இருந்தால் நாமும் இந்த நிலையை அடைவோம் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமே இல்லை.

இன்று நாங்கள் பல பிரிவினர்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் வெட்டித்திண்ணும் அளவுக்கு ஜாஹிலிய்யாக் கால மக்களை விட மிக மிக கீழ்த்தரமானவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவைகளைக் களைய வேண்டும்.


இல்லாதொழிக்க வேரோடு அழிக்க வேண்டும். அதற்கு நாங்கள் செய்ய வேண்டிய ஒரே பரிகாரம் எம்மிடம் இருக்கின்ற பெருமையை, கர்வத்தை, ஆணவத்தை முதலில் இல்லாதொழிக்க வேண்டும். இதனை நாங்கள் அனைவரும் தாமாகவே உணர்ந்து செய்தோமேயானால் இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் இறைவனால் நேசிக்கின்ற சமூகமாக மாற முடியும்.


எனவே மனிதன் மனிதனை மதிக்காதவரை மறுமையில் கூட விமோசனம் கிடைக்காது என்பதை ஆழமாக உணர்ந்து அதன் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் நற்பாக்கியம் பெற்றவர்களாக, சுவனத்தை அடைந்து கொள்கின்ற சமூகமாக, நபியவர்களோடு ஒன்றாக இருக்கின்ற நன் மக்களாக எல்லாவற்றையும் விட எம்மைப் படைத்த இறைவனை எமது கண்களாலே காணக்கூடிய பாக்கியத்தைப் பெற்றவர்களாக எம்மனைவரையும் அல்லாஹ் ஆக்கியருள வேண்டும் என பிரார்த்தனை செய்வோமாக!
********************************************************************************** 
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA. 
((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
 

No comments:

Post a Comment