Followers

Thursday, November 15, 2012

அநாதைகள் பற்றி அல்குர்ஆனும், அல்ஹதீஸூம்,



 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....


அநாதைகள் பற்றி அல்குர்ஆனும், அல்ஹதீஸூம்,
அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நம்முடைய எந்த ஒரு வணக்க வழிபாடாக இருந்தாலும் அவை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில் அவைகள் மூன்று வித நிபந்தனைகளுக்குட்பட்டு செய்யவேண்டும். அவைகளாவன: - அமல்களை செய்பவர் ஈமான் கொண்ட முஸ்லிமாக இருக்க வேண்டும். அல்லாஹ்வுக்காகவே செய்கின்றேன் என்ற உளத்தூய்மையுடன் செய்ய வேண்டும் அமல்களைச் செய்யும் போது அவற்றை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையின்படி செய்யவேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் தன் உம்மத்தினராகிய மானிட சமூகத்தை மிக மிக நேசித்தார்கள். மதிப்பும் மரியாதையும் வைத்து கௌரவித்தார்கள்.மனித சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் பரிதாபத்திற்கும், அனுதாபத்திற்கும் உரியவர்களான ஏழைகள்,அநாதைகள், அகதிகள், ஆதரவற்றவர்கள் ஆகியோர் மீது அன்பு செலுத்தி,ஆதரித்து,அரவணைத்து ,ஆறுதல் அளித்தார்கள்.

வாழ வழியறியாது தத்தளித்துப் பரிதவித்த அவர்கள் மீது பரிதாபமும்,அனுதாபமும் கொண்டு துன்ப துயரங்கள் துடைத்து கவலைகள் களைந்து இனிய நளினமான ஆறுதல் வார்த்தைகளால் அவர்களின் ஒளிமயமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஊட்டி,
அறிவொளி புகட்டி மறைவழியில் வாழ வளி செய்து நம்பிக்கையையும்,நிம்மதியையும்,
மகிழ்ச்சியையும் ஆதரவற்ற நெஞ்சங்களில் பிரகாசிக்கச் செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் "நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்'' என்று கூறியபடி தம் சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்கள்: புகாரீ 5304), திர்மிதீ (1841),அபூதாவூத் (4483), அஹ்மத் (21754

அன்பும் பாசமும் பொருளாதார உதவிகளும் இல்லாமல் தவிக்கும் நபர்களில் அநாதைக் குழந்தைகள் முக்கிய இடம் பிடிக்கிறார்கள். ஏதோ ஒரு காரணத்தினால் கணவரை இழந்து குழந்தைகளுடன் தவிக்கும் பெண்களுடன் இருக்கும் குழந்தைகள், அல்லது தாயையும் தந்தையையும் இழந்து தவிக்கும் குழந்தைகளும் கவனிப்பாரற்று பெரும் சோகத்தில் வாழ்கிறார்கள். இவ்வாறு வாழும் அநாதைகளைக் கவனிக்கும் பொறுப்பும் கடமையும் முஃமின்களுக்கு உண்டு என்பதையும், அதற்குக் கிடைக்கும் பரிசு சொர்க்கம் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் மேற்கூறிய பொன்மொழியில் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவர்கள் அநாதைகளுக்குச் செலவழிக்கும் செல்வம் அவனுக்குச் சிறந்த தோழனாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
"இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம் தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ, அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரீ (1465

"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், "நியாயமின்றி கொல்லக் கூடாது' என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறை நம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ (2766


அநாதைகளை ஆதரிக்கவேண்டும் அவர்களின் விசயத்தில் கவணம் செலுத்த வேண்டும் இது ஒவ்வொருவர் மீதும் கடமை என்பதை கீழ் வரும் அல்குர்ஆன் வசனங்கள் அநாதைகள் பற்றி போதிக்கின்றது.

அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கக்கூடாது, பெற்றோருக்கும்,அநாதைகளுக்கும் , நெருங்கிய உறவினர்களுக்கும்,
ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள். மனிதர்களிடம் அழகானதையே பேசுங்கள். தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுங்கள்.என இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதிமொழி எடுத்ததை (எண்ணிப்பாருங்கள்.) அதன் பின்னரும் உங்களில் சொற்பமானோரைத் தவிர (மற்றையோர் அதனை) புறக்கணித்தீர்கள்.இன்னும் உதாசீனப்படுத்தியவர்களாகவே இருக்கின்றீர்கள். (2:83)

கிழக்கு, மேற்குப் பக்கம் உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது (மட்டும்) நன்மையாகாது. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும், நம்புவோரும்,

தான் விரும்பும் செல்வத்தை (அல்லாஹ்வுக்காக) நெருங்கிய உறவினர், அநாதைகள், வறியோர், வழிப்போக்கர், யாசிப்போர் (ஆகியோருக்கும்) அடிமைகளை விடுதலை செய்வதற்கும் வழங்கி, தொழுகையை நிலைநாட்டி,ஸகாத்தையும் கொடுப்போரும், வாக்குறுதியளித்தால் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், வறுமை, துன்பம், போர் என்பவற்றின் போது சகித்துக்கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்கள் தாம் உண்மை உரைத்தவர்கள். அவர்களே பயபக்தியாளர்கள். (2:177)

(நபியே!) அவர்கள் உம்மிடம் எதை (யாருக்கு) செலவு செய்வது? என்று கேட்கின்றனர். நன்மை தரும் எதனை நீங்கள் செலவளித்தாலும் (அது) நெருங்கிய உறவினர்கள், அநாதைகள், ஏழைகள் வழிப்போக்கர்கள் ஆகியோருக்குரியதாகும் என்று (நபியே!) நீர் கூறுவீராக! மேலும் நீங்கள் செய்கின்ற எந்தவொரு நன்மையானாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாவான். (2:215)


இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருபவற்றை (இவ்வாறு தெளிவுபடுத்துகின்றான்.) மேலும் அநாதைகள் குறித்தும் உம்மிடம் கேட்கின்றனர். அவர்களுக்குரிய சீர்திருத்தம் செய்வது நன்று நீங்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் (அவர்கள்) உங்கள் சகோதரக்களாவார். மேலும் சீர்திருத்தம் செய்பவனிலிருந்து குழப்பம் விளைவிப்பவனை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடியிருந்தால் அவன் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருப்பான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும், ஞானமிக்கவனுமாவான் எனக் கூறுவீராக!. (2:220)


அநாதைகளிடம் அவர்களின் சொத்துக்களை நீங்கள் கொடுத்து விடுங்கள். நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றி விடாதீர்கள். உங்களுடைய சொத்துக்களுடன் (சேர்த்து) அவர்களின் சொத்துக்களை உண்ணாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது. (4:2)


நீங்கள் அவ்வாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணைவைக்காதீர்கள். இன்னும் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினர்களான அயலவர்கள், அந்நிய அயலவர்கள், அருகிலுள்ள நண்பர்கள், வழிப்போக்கர்கள், உங்கள் அடிமைகள் ஆகியோர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பெருமையடித்து கர்வம் கொள்வோரை நேசிக்க மாட்டான். (4:36)


(போரில்) நீங்கள் பெற்ற கனீமத் பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஜந்தில் ஒரு பகுதி அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், (இவரின்) நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும் , ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்குமுரியதாகும்
. என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (8:41)

அநாதையின் சொத்தை அவந் பருவம் அடையும் வரை நல்லவிதமாகவே அன்றி நெருங்காதீர்கள். மேலும் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கிறது. (17:34)


ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: ‘என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்’ என்று கூறுகிறான். எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், ‘என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்’ எனக் கூறுகின்றான். அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை. இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள். இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். ( 89:15-20)


முற்பகல் மீது சத்தியமாக- ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-

உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
யாசிப்போரை விரட்டாதீர்.
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக” ( 93:1-11)

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா, ஹொரோவபதான, அனுராதபுரம். SRI LANKA
******************************************************* 
 

No comments:

Post a Comment