Followers

Monday, November 19, 2012

நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரையும், இறுதி ஹஜ்ஜின் போது போதித்த இறுதிப் பேருரையும்.


 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடேயோன் அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்...அல்ஹம்துலில்லாஹ்.


நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரையும்,
இறுதி ஹஜ்ஜின் போது போதித்த இறுதிப் பேருரையும்.


கி.பி. 517: நபியவர்கள் மக்காவில் பனூஹாஷிம் பள்ளத்தாக்கில் ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள் காலையிலே பிறக்கிறார்கள்.

வயது 4: ஜிப்ரீல் (அலை) ரஸூலுல்லாஹ்வின் நெஞ்சைப் பிளந்து இதயத்தைப் பரிசுத்தப்படுத்தினார்கள். அத்தோடு செவிலித்தாயான ஹலீமாவிடமிருந்து தாய் ஆமினாவிடம் கையளிக்கப்படுகிறார்கள்.
வயது 6: யத்ரிப்பில் உள்ள அப்துல்லாஹ்வின் மண்ணறையைத் தரிசித்து மக்கா திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டு “அப்வா” எனும் இடத்தில் ஆமினா வபாத்தாகிறார். பின்னர் நபியவர்கள் பாட்டனார் அப்துல் முத்தலிப் இனால் பராமரிக்கப்படுகின்றார்.

வயது 8: மக்காவில் பாட்டனார் அப்துல் முத்தலிப் மரணித்ததும் சிறிய தந்தை அபூதாலிபிடம் வளர்கிறார்கள்.

வயது 12: அபூதாலிப் ஷாமுக்கு செல்லும் போது “பஹீரா” எனும் துறவி இவர் இறுதி நபி (முஹம்மத் -ஸல்-) என முன்னறிவிப்புச் செய்கிறார்.
வயது 20: குறைஷ், கைஸ் கோத்திரங்களுக்கிடையில் ‘ஹர்புல் பிஜார்’ எனும் யுத்தம் நடைபெற்றது. ‘ஹல்புல் புழூல்’ எனும் முக்கியமானதொரு பாதுகாப்பு ஒப்பந்தம் அப்துல்லாஹ் பின் ஜுத்ஆன் என்பவரது வீட்டில் குறைஷித் தலைவர்களுக்கிடையில் நடைபெறுகிறது. இதில் நபியவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

வயது 25: கதீஜா நாயகியின் வியாபார நடவடிக்கையில் நபியவர்கள் பங்கு கொள்கிறார்கள். கதீஜா நாயகி விரும்பியபடி அவரையே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

வயது 35: குறைஷியர் கஃபாவை புனர்நிர்மாணம் செய்கிறார்கள். அவர்களுக்கிடையே ஹஜருல் அஸ்வத் கல்லை யார் வைப்பது என்பது சம்பந்தமாக ஏற்பட்ட பெரும் பிணக்கை நபியவர்கள் சுமூகமாகத் தீர்த்து வைக்கிறார்கள்.

வயது 37: ஹிறா குகைக்கு அடிக்கடி நபியவர்கள் சென்று தயானத்தில் ஈடுபடுகிறார்கள்.
நுபுவ்வத் முதல் ஹிஜ்ரத் வரை


வயது 40: புனித அல்-குர்ஆன் நபியவர்களுக்கு இறங்கத் துவங்குகிறது. நுபுவ்வத் பணி இதனோடு ஆரம்பமாகிறது. நபியவர்கள் இரகசியப் பிரச்சாரத்தினை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
வயது 44: ரஸூலுல்லாஹ் மீதும் ஸஹாபாக்கள் மீதும் மக்கா குறைஷியரது துன்புறுத்தல் அதிகரிக்கிறது.
வயது 45: இரு குழுக்களாக ஸஹாபாக்கள் நபியவர்களின் கட்டளைப்படி ஹபஷாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்கிறார்கள்.
வயது 46: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப், உமர் பின் கத்தாப் ஆகியோர் இஸ்லாத்தில் நுழைகிறார்கள்.
வயது 47: ரஸூலுல்லாஹ்வுக்குப் புகழிடம் அளித்ததற்காக பனூ ஹாஷிம், பனூ முத்தலிப் கூட்டத்தினர் அபூதாலிப் பள்ளத்தாக்கில் முஷ்ரிக்களால் தடுத்து வைக்கப்படுகிறார்கள்.
வயது 50: ரஸூலுல்லாஹ்வின் வாழ்வில் மிகவும் பக்கபலமாகவும் நேசத்துக்குரியவர்களாகவும் இருந்த சிறிய தந்தை அபூதாலிபும், பின்னர் மனைவி கதீஜா (ரழி) அவர்களும் வபாத்தாகின்றனர். இவ்வருடம் ‘சோக வருடம்’ என அழைக்கப்படுகிறது. நபியவர்கள், கணவனை இழந்த நிலையில் ஹபஷாவுக்குச் சென்றிருந்த ஸஹ்தா பின் ஸம்ஆ வைத் திருமணம் செய்கிறார்கள்.

வயது 51: நபியவர்கள் மக்காவுக்கு வெளியே தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள். தாஇபுக்குச் செல்லும் வேளையில் காபிர்களால் கடுமையாகத் துன்புறுத்தப்படுகிறார்கள். மக்காவுக்கு வெளியே இருந்து ஹஜ்ஜுக்காக வரும் மக்களுக்கு இஸ்லாத்தின் தூதை எத்திவைக்கிறார்கள். இதனால் புதிதாக இஸ்லாத்தில் பலர் நுழைகிறார்கள்.

வயது 52: நபியவர்கள் இஸ்ரா, மிஃராஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தில் தொழுகை கடமையாக்கப்படுகிறது. யத்ரிபில் (மதீனா) இஸ்லாத்தை ஏற்றோருடன் நபியவர்கள் முதலாவது பைஅதுல் அகபா உடன்படிக்கை செய்கிறார்கள்.

வயது 53: இரண்டாவது பைஅதுல் அகபா இடம் பெறுகிறது.
ஹிஜ்ரத் முதல் வபாத் வரை


வயது 53: முஸ்லிம்கள் மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்கிறார்கள். இது இஸ்லாமிய வரலாற்றிலேயே முக்கியமானதொரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. அத்தோடு மதீனா சாசனம் வரையப்படுகிறது. (ஹி-1)
வயது 54: 1000 பேர் அடங்கிய குறைஷிக் காபிர்களுக்கும் 313 பேர் உள்ளிட்ட முஸ்லிம்களுக்குமிடையில் பத்ர் யுத்தம் நிகழ்கிறது. முஸ்லிம்கள் இப்போரில் வெற்றி பெறுகின்றனர். (ஹி-2)

வயது 55: 3000 பேர் கொண்ட குறைஷிக் காபிர்களுக்கும் 700 பேர் கொண்ட முஸ்லிம்களுக்குமிடையில் உஹத் யுத்தம் நடைபெறுகிறது. இதில் முஸ்லிம்களுக்கு காபிர்களால் பேரிழப்பு ஏற்படுகிறது. (ஹி-3)
வயது 58: பனூ முர்ரா, கத்பான், கிஸ்றா கோத்திரங்களை அடக்கிய 10000 பேர் காபிர்களுக்கும் 3000 பேர் அடங்கிய முஸ்லிம்களுக்கும் இடையில் இடம்பெற்ற கந்தக் யுத்தத்தில் முஸ்லிம்கள் வெற்றி பெறுகின்றனர். (ஹி-6)

வயது 59: ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்கள் 1400 பேரோடு உம்ராவுக்காக மக்கா செல்கிறார்கள். இடையில் முஸ்லிம்களுக்கும் மக்கா காபிர்களுக்கும் இடையில் ஹ{தைபிய்யா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகிறது. (ஹி-7)

வயது 60: யூதர்களுடனான ‘கைபர்’ போரில் முஸ்லிம்கள் வெற்றி பெறுகின்றார்கள். (ஹி-8)
வயது 61: யுத்தம் எதுவுமின்றி முஸ்லிம்கள் தம் சொந்த மண்ணான மக்காவை வெற்றி கொள்கிறார்கள். ஹவாஸன், ஸகீப் கோத்திரக் காபிர்களுடனான ‘ஹூனைன்’ யுத்தத்தில் முஸ்லிம்கள் பெருந்தொகையினரோடு போராடி ஈற்றில் அவர்களை வெற்றி கொள்கின்றார்கள். (ஹி-9)

வயது 62: நபியவர்களின் வெற்றியில் அச்சம் கொண்ட ரோமர்கள் 40000 பேருடன் போருக்காக ‘தபூக்’ நோக்கி வருகிறார்கள். இவர்கள் 30000 பேரடங்கிய முஸ்லிம்களை எதிர்கொள்ளத் தயங்கி விரண்டோடுகின்றார்கள். (ஹி-10)

வயது 63: ரபீஉல் அவ்வல் 12 திங்கட் கிழமை நபிகளால் (ஸல்) அவர்கள் தன் தூதுத்துவப் பணியை நிறைவு செய்தவர்களாக இம்மண்ணுலகை விட்டும் பிரிகறார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். (ஹி-11)

                                             
                                                            
   
மக்களே...நபியவர்களின் இறுதிப் பேருரை....
  
ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து 'மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது 'கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, 'பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள்.
அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

உரையைத் தொடங்கினார்கள்.

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: 'நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' (ஸுனன் இப்னு மாஜா 1892,1893)

ஒ… மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)


மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)


ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

பிறர் உடமையைப் பேணுவீர்!
ஒ… மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.. (ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்.
நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!


ஓ… குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)


அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன்.

அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789)


ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, 'உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், 'ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)


ஒ… மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121,

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)


மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)


மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)


இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள்.. அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (புகாரி 4402)


(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)


அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)


ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880,


ஒ… மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத்,


ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)


ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன்.. அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)


மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை.

இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)

பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, 'மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், 'நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்' என்றார்கள்.


உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி 'இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!' என்று முடித்தார்கள்.. (ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:'இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3) (ஸஹீஹுல் புகாரி 4406, 4407,

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸூப்ஹானல்லாஹ்....ஸூப்ஹானல்லாஹ்
....ஸூப்ஹானால்லாஹ்.

______________________________
__________________
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 

சோதனைகள்....... இயற்கை அனர்த்தம் என்றா? அல்லாஹ்வின் சோதனைகள் என்றா?

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

சோதனைகள்.......
இயற்கை அனர்த்தம் என்றா?
அல்லாஹ்வின் சோதனைகள் என்றா?


நிச்சயமாக அல்லாஹ்வின் சோதனைகள் என்றே இறை விசுவாசிகள் நம்ப வேண்டும். அல்லாஹ்வின் சோதனைகள் இரு வகைப்படும் என்பதை அல்குர்ஆனின்னூடாக அறிகிறோம்.
முதலாவது

மக்கள் பாவங்களிலும் அட்டூழியங்களிலும் அக்கிர மங்களிலும் மூழ்கும்போது அல்லாஹ் சோதனைக்குள்ளாக்கி தண்டிக்க விரும்புகிறான். இந்தத் தண்டனை பாவங்களில் புரன்டு வாழ்பவர்களை திருத்துவதற்கும் மக்களுக்கு படிப்பினைக்குரியதுமாக ஆக்குகிறான்.
இரண்டாவது

மக்களின் ஈமானை பரீட் சிப்பதற்கும் பலப்படுத்துவதற்குமுரிய சோதனையாக ஆக்குகிறான்.
முதலாவது சோதனைகளை பொறுத்த வரை, மக்கள் பாவங்களிலும் இறை நிராகரிப்பிலும் மூழ்கும்போது ஏற்படுகின்றது. 
“எந்த ஒரு கிராமத்திற்கு நாம் நபியை அனுப்பினாலும் அதிலுள்ளவர்கள் அடிபணியும் பொருட்டு அவர்களை வறுமையாலும் துன்பத்தாலும் நாம் பிடிக்காது விட்ட தில்லை.” (7:94)

பின்னர் கெட்டதின் இடத்திற்கு நல்லதை நாம் மாற்றினோம். அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகியபோது “எங்கள் மூதாதையர்களுக்கும் துன்பமும், இன்பமும் ஏற் பட்டன என (தண்டனையை மறந்து) கூறினர். எனவே அவர்கள் உணராத விதத்தில் திடீரென நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.” (7:95)


அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து இறை விசுவாசத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்ற அடிப்படைச் செய்தி இந்த உம்மத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அச்செய்திக்கேற்ப அவர்கள் வாழாதபோது தண்ட னைகள் பல வழிகளிலும் வந்து சேரும். இத்தண்டனையிலிருந்து படிப்பினை பெற்று திருந்தி வாழ்வதற்காகவும் இன்பங்களை அனுபவித்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாழ்வதற்காகவும் சந்தர்ப்பங்கள்; வழங்கப்படுகிறன. அதிலிருந்து படிப்பினை பெற் றாக வேண்டும். இல்லையேல் திடீரென சோதனைகளும் தண்டனைகளும் நினைத்துப் பார்க்க முடியாதளவு வந்து சேரும் என்பதை அல்லாஹ் விளக்கப்படுத்துகிறான்.

மழை, வெள்ளம், கடல் கொந்தளிப்பு, பூகம்பம், மண்சரிவு என்று பல சோதனைகளை ஏற்கனவே அனுபவித்து விட்டு நிம்மதியை உணர்ந்தார்கள் மக்கள். ஆனால் சோதனைகளால் ஏற்பட்ட இழப்புகளையும் வேதனைகளையும் நாளடைவில் மறந்து விட்டு மறுபடியும் பாவங்களில் மூழ்கிவிடுகிறார்கள். சுனாமி என்கிற பயங்கரமான கடல் கொந்தளிப்பை கண்ணால் கண்டு பல அழிவுகளை நேரில் பார்த்து சொந்த பந்தங் களையும் சொத்துப் பத்துக்களையும் இழந்து விட்டு துயரத்திற்குள்ளான மக்களுக்கு, அமைதியாகவும் மன நிம்மதியுடனும் வாழும் சூழலை அல்லாஹ் ஏற்படுத்தினான்.


தண்டனைகளை “கதபாத்திரங்களாக”சித்தரிக்கப்ப
டுவதற்கு அல்லாஹ் தருவதில்லை. மாறாக நடந்து முடிந்த சோதனைகளிலிருந்து படிப்பினை பெற்று பாவங்கள் மற்றும் இறை நிராகரிப்பிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து அல்லாஹ்வின் கட்டளை பிரகாரம் வாழவே தருகிறான். எப்போது அல்லாஹ்வின் சோதனைகள் வெறும் கதைகளாக்கப்பட்டு இன்பத்தில் மூழ்கிவிடும் நிலை ஏற்படுகிறதோ அப்போது அம்மக்கள் உணராத விதத்தில் தண்டனை களை அல்லாஹ் அனுப்பி விடுகிறான்.
எனவே, மழை, வெள்ளம், மண்சரிவு, கடும் வறட்சி என்பனவெல்லாம் இயற்கையின் சீற்றம் என ஒரு முஸ்லிம் ஒருபோதும் நம்ப மாட்டான். அதற்கடுத்ததாக இன்னுமொரு செய்தியை அல்லாஹ் இப்படிக் கூறுகிறான். “நிச்சயமாக இக்கிராமங்களில் உள்ளவர்கள் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சி நடந்தால் அவர்களுக்கு வானம் மற்றும் பூமியிலிருந்து (பரகத்துகளை) பாக்கியங்களை திறந்து விடுவோம்…. (7:96)
அல்லாஹ்வை முழுமையாக விசுவாசம் கொண்டு தக்வாவுடன் வாழும்போது வானம், பூமியின் பரகத்துடைய வாசல்கள் திறந்து விடப்பட்டு பாக்கியங்களுடன் வாழும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான் என உறுதியளிக்கிறான். அல்லாஹ்வின் வாக்குறுதி ஒருபோதும் பொய்யாகு வதில்லை.
அல்லாஹ்வின் அருள்களுக்கு நன்றி கெட்ட தனமாக நடந்து பாவங்களில் மூழ்கி விடும்போது தண்டனைகள் சூழ்ந்து கொள்ள ஆரம்பிக்கிறது. பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருந்த ஒரு கிராமத்தை அல்லாஹ் உதாரணம் கூறுகிறான். அக்கிராமத்திற்கான ஆகாரம் எல்லா இடங்களிலிருந்தும் தாரா ளமாக அதனிடம் வந்து கொண்டிருந்தது. பின்னர் அது அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரித்தது. எனவே அக்கிராமத்தவர்கள் செய்துகொண்டிருந்தவற்றின் காரணமாக அல்லாஹ் பசி மற்றும் பயம் எனும் ஆடையைச் சுவைக்கச் செய்தான். (16:112)

அல்லாஹ் கூறும் உதாரணம் மிகவும் படிப்பினைக்குரியதாகும். அல்லாஹ்வின் எல்லா வகையான இன்பங்களை முழுமையாக அனுபவித்துக் கொண்டு அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்கிறார்கள். யாரிட மிருந்து எந்த அச்சுறுத்தல்களும் இன்றி பசி பட்டினியின்றி செல்வங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அல்லாஹ் வழங்கிய இந்த நிஃமத்களுக்கு நன்றி கூறி அவனுக்கு முற்றிலும் அடிபணியாது வாழும்போது அல்லாஹ் அவர்களை சோதித்து விடுகிறான்.

இன்பத்தையும் சொகுசு வாழ்க்கையையும் கண்டு பழகியவர்களுக்கு வறுமையும் பயத்தையும் அல்லாஹ் ஏற்படுத்தி விடுகிறான். இது சாதாரண சோதனையல்ல. இந்த சோதனை அவர்களை எல்லா வழிகளிலும் அச்சுறுத்தல் தரக்கூடியதாக இருக்கும். பசி, பட்டினி மற்றும் வறுமைக்கு வழிகாண முடியாத பயத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஆகிவிடுகிறது. உடல் அங்கங்களை மறைக்க ஆடை அணிவதுபோல் வறுமையும் பயமும் ஆடையாக மாறுகின்ற நிலை மாறிவிடுகிறது. எந்த நேரத்தில் எந்த ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் நாளா பக்கமும் சூழ்கின்ற அவல நிலைக்கு மாறிவிடுகிறது. “இத்தண்டனையை சுவைத்துப் பார்க்கவே” அல்லாஹ் ஏற்படுத்துவதாக எச்சரிக்கிறான். உணவை சுவைத்துப் பார்ப்பது போல் அல்லாஹ்வின் தண்டனை மனிதனால் சுவைக்க முடியாது. அவ்வளவு பயங்கரமானதாக அது இருக்கும். எனவே பாவங்களை விட்டும் ஒதுங்கி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி நன்மையின் பால் விரைகின்ற போதே அருள்மழை கிடைக்கிறது.


காற்று, மழை போன்றவற்றினால் ஏற்படும் சோதனைகளைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடக் கூடியவர்களாக இருந் தார்கள் என்பதை ஹதீஸ்களில் படிக்கிறோம். மழை பெய்யுமாறு துஆ கேட்கும்போது “யா அல்லாஹ்! பலனுள்ள மழையை தா! தீங்கை ஏற்படுத்தக் கூடியதாக மழையைத் தந்துவிடாதே” என பிரார்த்திப்பார்கள்


இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். (20:131)

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். ( 29:2,3)


ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ 2319)

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு (நூல்: திர்மிதீ 2323)


எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். ( 2:286)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை. இதை அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் (நூல்: முஸ்லிம் 5030)

"ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் , அது அல்லாத வேறு எந்தத் துன்பமாயினும் (அதற்கு ஈடாக) , மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை " என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 5023)


ஒவ்வொரு மனிதனும் நன்மையும், நலவும், செல்வமும், செழிப்பும் ஏற்படும்போது மகிழ்வு கொள்கிறான். துன்பமும் கஷ்டமும் சூழ்ந்து கொள்ளும்போது ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என்கின்றான். எந்நிலையிலும் அல்லாஹ்வை நினைப்போர் மிகக் குறைவே. அதுவும் இக்காலத்தில் இலட்சத்தில் ஒருவர் என்று கூட சொல்ல முடியாத நிலை.
ஆயினும் (இறைவன்) அவனை சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்து விட்டால், என்னிறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான்’ என்று (குறை) கூறுகின்றான்.’’ –  (89 : 15, 16)
* நபி(ஸல்) அவர்கள் தாயிப் நகர மக்களின் கல்லடி, சொல்லடியை ஏற்றும் அவர்களை அழிக்க நாடவில்லை. இச்சோதனையை ஏற்றுக் கொண்ட காரணத்தால் இன்று அந்நகரமே இஸ்மாமிய நகரமாகத் திகழ்கின்றது. இந்த வெற்றி எதனால் ஏற்பட்டது ?

*  நபி ஹள்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தன் தவப்புதல்வர், அருமை மகனை அறுக்க வேண்டும்’ என்ற அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அறுக்க எத்தனித்த போது தான் அல்லாஹ், அவர்களின் முழு ஈமானையும், தன் மீதுள்ள அதீத அன்பையும் தெரிந்து கொண்டான். பின்பு தான் ‘கலீலுல்லாஹ்’ என்ற பட்டத்தை வழங்கினான். சோதனையை ஏற்றதால் தானே இப்பட்டத்தைப் பெற முடிந்தது ?


* ஹள்ரத் பிலால் (ரளி) அவர்கள் தன் எஜமானனின் அடி, உதை தாங்க முடியாமல் ஈமானை விட்டிருந்தால் “ரளியல்லாஹு அன்ஹு” என்று போற்றப்படுவார்களா? பல சோதனைகளை ஈமானுக்காக அல்லாஹ்விற்காக ஏற்றுக் கொண்டதால் தான் இன்று அவர்களின் பெயரை பலர் பெருமையாக சூட்டிக் கொள்வதைக் காண்கின்றோம். இச்சிறப்பு எப்படி கிடைத்தது ?


* ஹள்ரத் சுமையா (ரளி) அவர்கள், இறைவனுக்காக ஈமானைக் காத்திட்டபோது அவர் தம் பிறப்புறுப்பில் அம்பெய்தப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்கள். இறைவனுக்காக தன் இன்னுயிரை ஈந்த காரணத்தால் அவர்கள் சரித்திர ஏடுகளில் போற்றப்படுகின்றார்கள்; புகழப்படுகின்றார்கள்.


* மூமீன்களின் அன்னை ஹள்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள் போருக்குச் சென்று வரும்போது சிறு தடங்கலால் தங்கி விட்டு பின்னால் வந்த ஸஃப்வான் (ரளி) அவர்களுடன் ஊருக்குத் திரும்பும்போது அவதூறு கூறப்பட்டு பரிதவித்தார்கள். உண்ணவில்லை, உறங்கவில்லை, நிம்மதியிழந்து தவித்தார்கள். தம் ஆருயிர்க் கணவர் நபி (ஸல்) அவர்கள் கூட நம்முடன் பேச மறுத்து விட்டார்களே ! என புழுவாய்த் துடித்தார்கள். இவ்வளவு சோதனைகளையும் பொறுத்துக் கொண்டு படைத்த இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டார்கள். எனவே அல்லாஹ் அவர்களை தூய்மைப்படுத்தும் வண்ணம் ‘சூரத்துன்நூர்’ எனும் அத்தியாயத்தில் பத்து வசனங்களைக் கூறினான். இதைக் கண்டு நம் அன்னை மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்கள்.


மறுமை நாளின் அடையாளங்கள்.
1- நடந்து முடிந்தவைகள்.
2- நடந்து கொண்டிருப்பவைகள்.
3- நடக்க இருப்பவைகள்.


1400 ஆண்டுகளுக்கும் முன்பே இவை நடக்கும் என்று சிலவற்றைச் சொன்னார்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் கூறிச்சென்ற அடையாளங்களில் பல நடந்து முடிந்து விட்டன.

நடந்தது போக இனியும் நடக்கும் என அவர்கள் கூறியுள்ள சில அடையாளங்கள் நிச்சயம் நடந்தே தீரும். இதில் சந்தேகமே இல்லை. அவை நிகழ்ந்து முடிந்ததும் மறமை நாள் வந்து விடும்.


மறுமை நாளில் நல்லவன், தீயவன் யார்? யார்? என இறைவன் விளக்கி, சொர்க்கம், நரகம் யாருக்கு எனத் தீர்ப்பு வழங்குவான். அதுவே நிரந்தர வாழ்வும் கூட.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக்
காட்டி 'நானும் யுக முடிவு நாளும் இவ்விரல்கள் அருகருகே இருப்பது போல இருக்கிறோம்''
எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி),
நூல்: புகாரி 4936, 5301, 6503


அந்த நாள் மிகவும் சமீபத்தில் வந்து விடும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்னர்
அல்லாஹ் அறிவித்த பின் இன்னும் அந்த நாள் வரவில்லையே என்ற சந்தேகம் சிலருக்கு
ஏற்படலாம்.
இதைச் சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வுலகம் படைக்கப்பட்டு இலட்சோப லட்சம் ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்து விட்ட

இலட்சோப லட்சம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 1400 ஆண்டுகள் என்பது மிகவும் அற்பம்
தான். இன்னொரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து மறுமை நாள் வந்தாலும் 'அது சமீபத்தில் தான்
உள்ளது'' என்ற அறிவிப்புக்கு அது முரணாக அமையாது.

யாராலும் அறிய முடியாது

'அந்த நாள் எந்த ஆண்டு வரும்? எப்போது இந்த உலகம் அழிக்கப்படும்'' என்ற கேள்விக்கு
திருக்குர்ஆன் அளிக்கும் விடை 'அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதை அறிய முடியாது''
என்பது தான்.


'அந்த நேரம் எப்போது வரும்?'' என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள்
கேட்கின்றனர்.'இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத்
தவிர யாரும் அதை வெளிப் படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக
அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்'' என்று கூறுவீராக! இது பற்றி நீர்
நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்ற னர். 'இது பற்றிய ஞானம்
அல்லாஹ்விடமே உள்ளது'' என்று கூறு வீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து
கொள்வதில்லை.
( 7:187)


'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த எச்சரிக்கை எப்போது?'' எனக்
கேட்கின்றனர்.'அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன்
மட்டுமே'' எனக் கூறுவீராக!
( 67:25, 26)

நீங்கள் எச்சரிக்கப்படுவது அருகில் உள்ளதா? அல்லது அதற்கு என் இறைவன் (கூடுதல்)

தவணையை ஏற்படுத்துவானா என்பதை அறிய மாட்டேன்'' என்று கூறுவீராக!
( 72:25)


மறுமை நாளுக்கு முன் ஒரு காலக்கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டு விடும்; ‘ஹர்ஜ்’ பெருகிவிடும். ‘ஹர்ஜ்’ என்பது கொலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி).புஹாரி : 7063

நபி (ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். ‘ஹர்ஜ்’ பெருகிவிடும்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘கொலை, கொலை” என்று பதிலளித்தார்கள்.

அபூஹுரைரா (ரலி).புஹாரி : 7061


மேற்படி நபியவர்களின் நபிமொழியை உற்று நோக்கும் போது மறுமை நாளின் நிகழ்வுகளுக்கு முன் ஒரு கால கட்டம் வரும். உலகம் படைக்கப்பட்டது முதல் இது வரைக்கும் நடந்து முடிந்தவைகள் ஏராளம் ஏராளம்.
இப்போது உலகில் நடைபெற்றுக்கொண்டிருப்பது தினம் தோறும் நாம் கண்களால் பார்க்கின்றோம், செவிகளால் கேட்கின்றோம்.பல நாடுகளை எடுத்து நோக்கும் போது அன்று 1400 ஆண்டுகளுக்கு முன் நபியவர்கள் சொன்னது தற்பொது நடை பெருகின்றது கொலைகள் அதிகரிக்கின்றது, அற்புதமான செய்திகள் அறங்கேருகின்றது.
இன்னும் ஒரு சில விடையங்கள் நடக்க இருக்கின்றது அதுதான் ஈஸா(அலை)அவர்களின் வருகை தஜ்ஜாலின் வருகைகளும் அதனூடாக நடைபெறும் கட்டங்களுமாகும்.

இன்றைக்கு அரேபியா நாடுகள், எகிப்து, பலஸ்தீனம், லப்னான், லிபியா, இன்னும் எத்துணை நாடுகளுக்கு மத்தியில் எத்துணை கொடூரங்களும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கவை.


சூரத்துல் பீல் அல்குர்ஆனில்.அத்தியாயம்105 வசனங்கள் 1-5 வரையான இந்த சூரா பெரும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது .


நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்விற்கு முன்னர் அரபு தீபகற்பத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு வரலாற்றுச் சம்பவம்:


நபித்துவ வாழ்விற்கு முந்திய கால கட்டத்தில் ரோமானியப் பேரரசு யமன் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதும், யமன் நாடு அபிசீனியாவின் ஆளுகைக்கு உட்பட்டது. அப்போது யமனில் அபிசீனியாவின் ஆளுநராக இருந்த அப்ரஹா என்பவன், அபிசீனியா மன்னரின் பெயரால் யமனில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை எழுப்பியிருந்தான். புனித மக்காவில் இருந்த காபா ஆலயத்திற்குச் செல்லாதவாறு, அரபியர்களை அந்த தேவாலயத்தின்பால் ஈர்ப்பதற்காக அதில் பல்வேறு வகையான பகட்டான அலங்காரங்களையெல்லாம் செய்திருந்தான்.


அரபு தீபகற்பத்தின் மத்திய பாகத்திலும், அதன் வடபுலங்களிலும் வாழ்ந்திருந்த அரபியர்கள், அப்ராஹாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த யமன் நாட்டு மக்கள் அனைவரும் புனித காபா ஆலயத்தின் பக்கமே தங்களின் கவனத்தைத் திருப்பியவர்களாகவும், அதன்பால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருப்பதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தமது இந்த எண்ணத்தை அபிசீனிய மன்னருக்கு எழுதித் தெரிவித்தான்.


அவன் எவ்வளவோ பிரயத்தனங்களை மேற்கொண்டும், அரபிகளை அவர்களின் புனித ஆலயமான காபாவை விட்டுத் திருப்பிவிட முடியவில்லை. அப்போது அப்ரஹா காபா ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு மக்களின் கவனத்தை, தான் எழுப்பிய கிறிஸ்தவ தேவாலயத்தின் பால் திருப்பிவிடும் எண்ணத்தில் பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டான். அதில் ஏராளமான யானைகளும் இருந்தன. மிகப் பெரும் பட்டத்து யானை அவற்றிற்கெல்லாம் முன்னணியில் சென்றது.

இதற்கிடையே அவன் இந்த நோக்கத்துடன் புறப்பட்டு விட்ட செய்தி அரபு நாடு முழுவதும் பரவியது. தமது புனித ஆலயத்தைத் தமது கண் முன்பே இடித்துத் தகர்த்துவிட அவன் வந்து கொண்டிருக்கும் செய்தி அரபிகளுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.
இதன் காரணமாக அரபுகள் ஒவ்வொரு குலத்தாரும் அணிதிரளும்படி வேண்டியபின் படை திரட்டிக்கொண்டு அப்ரஹாவை மக்காவிற்கு சென்று விடாமல் வழியிலேயே தடுக்க, அவன் படையுடன் போர் செய்தார்கள். எனினும் அவர்கள் தோல்வி கண்டார்கள். அப்ரஹா, தம்முடன் போர் செய்து தோல்வியடைந்தவர்களைச் சிறைப்பிடித்துக்கொண்டு, காபா ஆலயத்தை இடித்துத் தகர்க்க தொடர்ந்து இராணுவத்துடன் முன்னேறி வந்தான்.


காபாவை இடிக்க வந்த அப்ரஹாவின் யானைப்படையை இறைவன் என்ன செய்தான் என்பதை திருக்குர்ஆன், அல்ஃபீல் - யானை - 105வது அத்தியாயம் எடுத்துரைக்கிறது.
(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.


சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.


அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன், 105:1-5)


இந்த வசனத்தில் கூறப்பட்ட "ஸிஜ்ஜூல்" என்ற அந்த சிறிய கல் இன்று "சவூதி அரேபியாவில்" கண்டேடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் "ஸூப்ஹானல்லாஹ்" இதுவும் மறுமை நாளின் அடையாளங்கள்.

இன்னும் இலங்கையில் சில பகுதிகளில் சிவப்பு மழை பேய்ந்தகாக தகவல்கள் "ஸூப்ஹானல்லாஹ்" இதுவும் மறுமை நாளின் அடையாளங்கள் .

இப்படி மறுமை நாளின் அடையாளங்களை நடந்து முடிந்தவைகள்.
நடந்து கொண்டிருப்பவைகள், நடக்க இருப்பவைகள் இவைகளில் இரண்டு கட்டங்களை நாம் தாண்டி விட்டோம் இன்ஷா அல்லாஹ் நடக்க இருக்கும் நிகழ்வுகள் மிக சமீபத்தில். அல்லாஹ் என்னையும் உங்களையும், உலக மாந்தர்கள் அனைவரையும் நேரான வழியில் நடப்பதற்கும், அவ்வப்போது வரும் சோதனைகள், வேதனைகளில் பொறுமையாக இருப்பதற்கும், சந்தர்ப்பங்களை சாதனைகளாக மாற்றி அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடிய மக்காளாக அல்லாஹ் நம் அனைவரையும் மாற்றியருள்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா, ஹொரோவபதான, அனுராதபுரம், SRI LANKA.
*********************************************************************************