Followers

Monday, November 5, 2012

அறிய வேண்டிய கடமை ஈமான்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.


அறிய வேண்டிய கடமை ஈமான்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கின்றது. அதை நோக்கியே அவன் தனது பயணங்களை அமைத்துக் கொள்கின்றான். அதற்க்காக தனது முழு முயற்ச்சியையும் அர்ப்பணிக்கின்றான். அந்த வெற்றியின் ருசியை கூடிய விரைவில் தான் சுவைக்க வேண்டும் எனவும் ஆவல் கொள்கின்றான். அதை முன்னோக்கியே தனது ஒவ்வொரு செயலையும் அமைத்து கொள்வதை நாம் காண்கிறோம்.

மற்ற மனிதர்களின் வெற்றி இலக்கிலிருந்து முஸ்லிம்களின் இலக்கு முற்றிலுமாக மாற்றம் பெறுகின்றது. ஒரு முஸ்லிமுக்கு உண்மையான வெற்றியென்பது மறுமையில் அவன் தனது இறைவனுக்கு முன்னால் நீதி விசாரனைக்காக நிறுத்தப்படும் பொழுது கிடைக்கக் கூடிய வெற்றியே. அல்லாஹ் தன்னுடைய திருமறையில் இதை சொல்லிக் காட்டுக்கின்றான்:


ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3:185)


நம்மில் சிலர் அல்லாஹ்வை நம்புகிறோம் ஆனால் மறுமையை நம்புவதில்லை இறுதிநாளை நம்புவதில்லை விதியை நம்புவதில்லை சொர்க்கம் மற்றும் நரகத்திலும் நம்பிக்கையே இல்லை மாறாக தன் செல்வத்தையும் (எதிர்காலத்தில் காப்பற்றுவார்கள் என) பிள்ளைகளையும் குடும்பத்தினரையும் நம்புகிறார்கள் ஆனால் இறைவனை நம்பும் விதத்தில் நம்புவதில்லை.அவனுடைய வல்லமையையும்,கருணையையும் நம்புவதில்லை.

நன்மையும், தீமையும், இன்பமும், துன்பமும், உயர்வும்,தாழ்வும், ஆட்சியும், அதிகாரமும்,செல்வமும், ஏழ்மையும், அனைத்தும் அவனிடமிருந்து வந்ததுதான் என்று நம்ப வேண்டும் மேலும் அவன் அடியார்களுக்கு நன்மையே செய்கிறவன் என்றும் நம்ப வேண்டும் தன் படைப்புகளிடம் பாரபட்சம் காட்டவும் மாட்டான் என்றும் நம்ப வேண்டும்.எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு முன் நாம் அனைவரும் அடிமைகளே!


இந்த அடிப்படையில் ஒரு முஃமினிடத்தில் உறுதியா ஈமான் இருக்க வேண்டும். ஈமானுடைய விடயங்களை அறிய வேண்டும். ஈமானின்

கடமைகளை அறிய வேண்டும் என்ற நோக்கோடு ஈமான் பற்றி சில
வரிகளை இக்கட்டுரையில் தரிசனம் செய்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.


அடிப்படைகள் மூன்று:
1) ஈமான்
2) இஸ்லாம்
3) இஹ்ஸான்


1. ஈமான் என்றால் நம்பிக்கை, ஈமான் கொண்டவன் முஃமின் எனப்படுகிறான்.
2. இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல், முஸ்லிம் என்றால் கட்டுப்படுபவன்.
3. இஹ்ஸான் என்றால் அல்லாஹ்வை (நேரில்)காண்பது போல் வணங்குவது.


ஈமானின் அடிப்படைகள் ஆறு
1. அல்லாஹ்வை நம்புவது
2. வானவர்களை நம்புவது
3. வேதங்களை நம்புவது
4. நபிமார்களை நம்புவது
5. மறுமையை நம்புவது
6. விதியை நம்புவது (நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியே நடக்கிறது என்று நம்புவது ...(உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸின் கருத்து - புகாரி)

1. இறை நம்பிக்கையை நம்புவது.

அல்லாஹ் ஒருவன் இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது.

(அல்லாஹ் நித்திய ஜீவன்) - என்றென்றும் வாழ்பவன் - (2:225)

அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (28:88).


அவனுடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை.

2. வானவர்களை நம்புவது.

அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது ஈமானின் இரண்டாவது அம்சமாகும். கண்களுக்கு புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது.

இவர்களுள் பிரதானமானவரது பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும். இவரது பொறுப்பு இறைச் செய்தியை இறைத்தூதர்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதாகும். இன்னும் பல முக்கியமான வானவர்கள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.


3. வேதங்களை நம்புவது.
அல்லாஹ் உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு காலகட்டங்களில் தனது வழிகாட்டல்கள் அடங்கிய வேதங்களை அருளியிருக்கின்றான். அவற்றில் சில வேதங்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:

நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட (தௌராத்)

நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட (ஸபூர்)
நபி ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட (இன்சீல்)
நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட (அல்குர்ஆன்)

ஒரு முஸ்லிம் பெயரறிந்து மேற்கூறப்பட்ட வேதங்களையும், மற்றவைகளைப் பொதுவாகவும் அல்லாஹ் அருளியவை என நம்புவது இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த மூன்றாவது அம்சமாகும். அல்லாஹ் அருளிய அனைத்து வேதங்களிலும் இறுதியானது அல்குர்ஆன் ஆகும். இதில் முந்திய எல்லா வேதங்களதும் சாராம்சம் அடங்கியுள்ளது. எனவே யாராவது அல்குர்ஆனைத் தனது வேதநூலாக ஏற்றுப் பின்பற்றினால் அவர் முந்தைய வேத நூல்களையும் ஏற்றவர் ஆகின்றார். இதன்படி முன்னய வேதங்கள் நம்பிக்கைக்குரியனவாகும் போது அல்குர்ஆன் நம்பிக்கைக்கும் நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதற்கும் உரியதாக அமைந்து விடுகின்றது. முழு உலகத்துக்கும் உரிய பொது வேத நூலாகத் திகழ்வது அல்குர்ஆனின் சிறப்பியல்பாகும்.


4. இறைத்தூதர்களை நம்புவது.

வேதங்களைத் தெளிவாக புரிந்து அவற்றுக்கேற்ப வாழ்ந்து ஈருலக நற்பயன்களைப் பெறுவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்து முன்மாதிரியாக வாழும் மனிதப்புனிதர்களை அவர்களில் இருந்தே இறைவன் தோற்றுவித்தான். அவர்களையே இஸ்லாம் (இறைத்தூதர்கள்) என அறிமுகப்படுத்துகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்:
 
 'அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த சமுதாயத்தினரும் பூமியில் இருக்கவில்லை' (அல்குர்ஆன் 35:24)
இப்படித் தோன்றிய தூதர்களில் 25 பெயர்களையே அல்லாஹ் நமக்கு அறிவித்துள்ளான். அவர்களில் இறுதியானவர் முஹம்மத் (ஸல்) அவர்களாவர்.

5. மறுமை நாளை நம்புவது.
மறுமையை நம்ப வேண்டும் என்பது நம்பிக்கை சார்ந்த ஐந்தாவது அம்சமாகும். இது தொடர்பாக நம்பிக்கை கொள்ள வேண்டியவை.
ஒரு நாள் அல்லாஹ் முழு உலகையும் படைப்பினங்களையும் அழித்து விடுவான். அந்நாளின் பெயர்: கியாமத் ஆகும்.
பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அனைவரும் அல்லாஹ்வுக்கு முன் ஆஜராவார்கள். அதற்கு மஹ்ஷர் என்று பெயர்.
எல்லா மனிதர்களும் தங்கள் உலக வாழ்வில் எதை எதை செய்தார்களோ அவை முழுவதும் கொண்ட செயல் பட்டியல் இறைவனின் நீதி மன்றத்தில் சமர்ப்பணமாகும்.

அல்லாஹ் ஒவ்வொருவருடைய நல்ல கெட்ட செயல்களையும் நிறுத்துப்பார்ப்பான். நன்மை தீமைகளுக்கேற்ப மன்னிப்பும் தண்டனையும் அளிப்பான்.

யார் மன்னிப்புப் பெறுகிறார்களோ அவர்கள் சுவர்க்கம் புகுவர். யாருக்குத் தண்டனை வழங்கப்படுகின்றதோ அவர்கள் நரகம் செல்வர்.

6. விதியை நம்புவது.

இந்தப் பிரபஞ்சமும் இதிலுள்ள படைப்புக்கள் அனைத்தும் அணுவும் பிசகாது அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படியே இயங்குகின்றன என்பது இஸ்லாத்தின் இறை நம்பிக்கை சார்ந்த ஆறாவது அம்சமாகும்.
மனிதனுடைய கற்பனைகள் கருத்துக்கள் கூட அல்லாஹ்வின் நிர்ணயத்துக்கு உட்பட்டவையே. அல்லாஹ்வின் ஞானத்துக்கு புறம்பாகவோ, அவன் நிர்ணயித்த விதிமுறைகளுக்கு மாறாகவோ எதுவும் இயங்க முடியாது. இதன் கருத்து மனிதன் சுதந்திரமாக இயங்குவதற்கான அறிவையும் ஆற்றலையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். அதேவேளை அவற்றில் தன் விதிமுறைகளையும் வைக்க அவன் தவறவில்லை. இது அவனது ஆற்றலில், அறிவில், திறமையில் உள்ளதாகும்.

இவற்றில் உறுதியான ஈமான் கொள்வது ஒவ்வொறு முஸ்லிமினதும் கடமையாகும்.


புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்...(2:177)

(இறை) தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர் இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்...(2:285)


இஸ்லாம் கூறும் உள்ளமும் உடலும்

* கொள்கை (ஈமான்))
* செயல் (இஸ்லாம்))
* ஒழுக்கம் (நற்குணம்))


ஈமானுக்கும், இஸ்லாத்திற்கும் இடையே உள்ளவேறுபாடு
ஈமான் உள்ளத்தோடு தொடர்புடையது, அதன் அம்சங்களை வெளிப்படையாக அறியமுடியாது எனினும் அதன் பிரதிபலிப்பை உணர முடியும்.

இஸ்லாம் உடலோடும் செயல்களோடும் தொடர்புடையவை, செயலை வைத்து வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம்.


ஈமானின் சுவையைப் பெற்றவர்
மூன்று விஷயங்கள் யாரிடம் உள்ளதோ அவர் ஈமானின் சுவையைப் பெற்றுவிட்டார்.
1. மற்ற அனைத்தையும் விட அல்லாஹ்வும் அவன் தூதரும் அவருக்கு மிகப் பிரியமானவர்களாக இருப்பது.
2. அவர் யாரை நேசித்தாலும் அல்லாஹ்வுக்காக நேசிப்பார்
3. இறைநிராகரிப்பை விட்டு அல்லாஹ் அவரை ஈடேற்றம் செய்த பின் மீண்டும் அந்த இறைநிராகரிப்பின் பக்கம் திரும்புவதை தம்மை நரக நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போல வெறுக்கவேண்டும். அனஸ்(ரலி) புகாரி, முஸ்லிம்

உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும் அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும் இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். (8:2)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

“எவனது கரத்தின் மீது என் உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக – தான் விரும்பும் ஒன்றையே தன் சகோதரனுக்கும் விரும்பாத வரை உங்களில் எவரும் உண்மையிலேயே ஈமான் கொள்ளவில்லை”. (புகாரி, முஸ்லிம்)


யார் ஒருவர் அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளாரோ – அவர், தனது பக்கத்து வீட்டுக்காரர்களை நல்ல முறையில் நடத்திட வேண்டும்.

யார் ஒருவர் அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளாரோ – அவர், தனது விருந்தினரை நல்ல முறையில் கண்ணியப் படுத்த வேண்டும்.
யார் ஒருவர் அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளாரோ – அவர் நல்லதையே பேச வேண்டும். இல்லையேல், மவுனமாக இருந்திட வேண்டும்.” (புகாரி, முஸ்லிம்)

அடுத்த வீட்டுக்காரன் பசியோடு இருக்க, தான் மட்டும் வயிறாற உண்பவன், உண்மையான இறைநம்பிக்கையாளன் இல்லை.” (பைஹகி)


மேலும், ஈமான், தீய செயல்களில் இருந்து நம்மை விடுவித்து விடுகிறது. ஈமான் கொண்டவனிடத்தில் தீய செயல்களைக் காண முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒருவன் விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அவன் இறைநம்பிக்கையாளன் இல்லை.

ஒருவன் திருடிக் கொண்டிருக்கும் நிலையில் அவன் இறைநம்பிக்கையாளன் இல்லை.
ஒருவன் போதைப் பொருட்களைக் குடித்துக் கொண்டிருக்கும்போது அவன் இறைநம்பிக்கையாளன் இல்லை.
மக்கள் கவனிக்கும் நிலையிலும் கொள்ளையடிக்கும் ஒருவன் இறைநம்பிக்கையாளன் இல்லை.
ஒருவன் ஏமாற்றிக் கொண்டிருக்கும் போது அவன் இறைநம்பிக்கையாளன் இல்லை.
எனவே எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! (புகாரி, முஸ்லிம்)


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
______________________________*******************__________________________________
அஹமட் யஹ்யா. ஹொரோவபதான.அனுராதபுரம்.SRI LANKA.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~********************~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

No comments:

Post a Comment