Followers

Tuesday, November 6, 2012

வரதட்சனை ஒரு கொடுமை




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும்
அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

வரதட்சனை ஒரு கொடுமை

திருமணம் செய்தல் என் வாழ்க்கை வழியாகும் என்றொரு ஹதீஸிலும், எவர் இந்த வழியைப் பின்பற்றவில்லையோ அவர் என்முறை தவறியோர் ஆவர். என்று மற்றொரு ஹதீஸிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். திருமணத்தின் நோக்கம் சிற்றின்பத்தை அனுபவிப்பது மட்டுமல்ல. இரண்டு ஆத்மாக்களும் ஒன்று பட்டு இருவரிடமும் உள்ள இயற்கைத் தன்மைகளை சீர்படுத்துவதும் அதன் நோக்கமாகும். அன்பு மலர்களால் ஆழ்ந்த பூந்தோட்டம் என்னும் திருமணத்தை தம்பதிகள் தங்களது சுயநலம் காரணமாக போர்க்களமாக ஆக்கிவிடுகிறார்கள்.

இன்று மனித குலத்தை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் ஏராளம் ஏராளம். ஏழ்மை, பசி, பிணி, பணத்தாசை பதவிப்பித்து, லஞ்ச லாவண்யம், ஊழல், இனவெறி, நிறவெறி, மொழிவெறி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த வரதட்சணை.


நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)

ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .

முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம்.

இந்த அவலத்திற்கு ஊர் மனிதமேதைகளும் மார்க்க அறிஞர்களும்
அதாவது அறிவைக் கற்று மக்களை வழி நடத்தும் உலமாக்களும்
சேர்ந்து இதற்கு பங்கு போட்டு கொள்கின்ற அவல நிலையும் உலமாக்கள் திருமணம் முடிக்கும் போது கூட யாருக்கும் தெரியாமல்
ரகசியமான முறயில் ஹராமான வரதட்சனை என்ற பெயரை மாற்றி
அதற்கு ஒரு பெயர் வைத்து மனமுவந்து வாங்கிக் கொள்ளும் அறிஞர்கலையும் நாம் பார்க்கிறோம். இப்படி ஒரு நிலமை வந்தால்
பாமர மக்களை என்னவென்று சொல்வது இவர்களின் இச்செயலால்
சமூகத்துக்கு எவ்வளவு பாதிப்பும், பாரதூரமும் என்பதை உணர வேண்டும். கொடுமை என்று சொன்னால் இது மிகப்பெரும் கொடுமை
ஏழைக் குமரிகள் இன்றைக்கு சிந்தும் கண்ணீருக்கு கரை காண முடியாத அளவுக்கு இந்த மக்கள் நிலை மாறிவிட்டது.

சகோதரர்களே இந்த விஷையத்தை பகிரங்கப்படுத்துவது ஒவ்வொருவர் மீதும் கடமை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இஸ்லாம் காட்டிய திருமணம், நபியவர்கள் முடித்த முடித்து வைத்த
திருமணம், முடித்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன சொல், செயல்,அங்கீகாரம் இவைகளை நாம் உணர்கின்றோமா?.
இவைகலைக் கேட்டால் இதற்கு இரு மடங்கு பெற்ரார்கள் மகனை
கௌரமான இடத்தில் கொடுக்க வேண்டும் அந்த இடத்தில் சொத்து, சுகம் இருக்க வேண்டும் என்று பெற்ரார்களின் முன்னிலைக் காரணம். அத்துணை ஏழைக்குமருகளும் இன்று பாதிக்கப்படுகின்றார்கள்.

* தன் மகன் ஒரு ஆசிரியர் என்றால் அதற்கு ஒரு விலை.

* இன்ஜினியர் என்றால் அதற்கு ஒரு விலை.


* டொக்டர் என்றால் அதற்கு ஒரு விலை.


* ஆலிம் என்றால் அதற்கு ஒரு விலை.


* வெளிநாடுகளில் உழைத்தால் அதற்கு ஒரு விலை.


* பாமர மகனாக இருந்தால் அதற்கு ஒரு விலை.


இப்படி ஒருவர் தராதரத்தை வைத்து தன் மகனை திருமணம் முடிக்கும் போது தன் மகனோடு இன்பம் காண்பற்கு வரும் மண மகளிடம் பணம்
எடுத்து குடும்பம் நடத்தும் மன மகனையும்,பெற்றாரகளையும் நாம்
பாரக்கிறோம்.

ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் - இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.


யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப்- பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம்.


மணவாழ்வில் இணையும் இருவரும் சமமாக இன்பம் அடைகிறார்கள் என்பது உண்மை என்றாலும் மணவாழ்வின் காரணமாக அதிகமான சுமைகள் பெண்கள் மீது தான் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தான் அவற்றைச் சுமந்தாக வேண்டும்.


திருமணம் முடிந்தவுடன் ஆண்கள் தமது வீட்டில் தமது உறவினர்களுடன் வழக்கம் போலவே இருந்து வருவார்கள். ஆனால் பெண்கள் தனது தாய், தந்தை, உற்றார், உறவினர், ஊர் அனைத்தையும் தியாகம் செய்து வருகின்றனர். பிறந்த வீட்டை மறந்து விடுவதை சாதாரணமானதாகக் கருத முடியாது. பெண்களில் இந்த தியாகத்துக்காக ஆண்கள் பெண்களுக்குக் கொடுப்பது தான் நியாயமானது.


இதற்கு மாற்றமாக ஆண் சமூகம் இருக்குமென்றால் அவர்களே அவர்களை இவ்வுலகில் வெக்கப்பட வைப்பான் இறைவன் எந்பதை

யாரும் யாராலும் மறக்கவோ ,மறுக்கவோ முடியாது ஏன் இன்றைக்கு
பார்க்கின்றோம் ஒரு குடும்ப வாழ்கையில் ஒரு பிரச்சனை வந்தால்
அந்த குடுபங்கள் பிரிய வேண்டிய இக்கட்டான நிலை வந்தால் (காழி
கோடுகளில்) வரிசையாக நிற்க வைத்து அந்த இடத்தில் அவமானப்படும் நிளைகளை எல்லோரும் அறிந்ததே. அந்த இடத்தில்
வரதட்சனையைப் பார்ப்பதா? தனக்கு வந்த மனைவியைப் பார்ப்பதா?
இதுதான் நியதி என்பதை வரதட்சனை வாங்கும் கைகளும் வேண்டாம்
என்று இஸ்லாம் சொல்லியும் அதைக்கொடுக்கும் கைகளும் அந்தக் கைகள் யாருடைய உடம்பில் இருக்கின்றதோ அவர்கள் சிந்திக்க வேண்டும்.

இதன் காரணமாக இன்றைக்கு எத்தனை பெண்மணிகள் தகாத முறையில் வழிகேடுகளில் செல்கின்றார்கள் ஹராமான முறையில்

தன் ஆடைகளை களைந்து மானத்தை போக்குகின்றார்கள். இவைகளுக்கு காரணம் வரதட்சனையே!.
இன்பம் என்பது ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் இருகின்றது இதுதான் உண்மை நிலை.

வரதட்சணை கொடுமை திருமணத்துடன் முடிவதில்லை

மகளை திருமணம் முடித்த மருமகனுக்கு வேலையோ தொழிலோ இல்லை என்றால் அவனுக்கு
வேலை வாங்கி தர வேண்டும்.
அல்லது தொழில் செய்ய முதலீடு தர வேண்டும்.
அவன் பொருளீட்ட இப்படியான கொடுமைகளை பெண்ணை பெற்றோர் அனுபவிக்க வேண்டும்.
இவன் மனைவியிடம் சுகம் அனுபவிப்பானாம் அதன் காரணமாக கருவை (வாரிசுகளை)
மனைவி சுமக்க ஆரம்பித்து விட்டால் அவளுடைய மருத்துவ செலவு முதல் பிரசவ செலவு வரை – அவனுடைய மனைவியை
பெற்றவர்கள் செய்ய வேண்டுமாம், இந்த மாதிரியான இழிவான ஆண்கள் .

இஸ்லாமியத் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் மஹர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும். ஆனால், தான் கொடுப்பதற்குப் பதிலாக, தனக்காக எல்லாத் தியாகங்களையும் செய்ய முன் வந்து வாழ்க்கைத் துணைவியாக வரப்போகும் மனைவியிட மிருந்தே வரதட்சணையாக ஒரு பெரும் தொகையையோ, பொருளையோ வாங்குவது தன்மானமில்லா கேவலமான ஒரு விசயமாகும். இந்த அவல நிலையை இன்று நாம் நாட்டில் பரவலாகக் காணும்போது சமுதாயமே வெட்கித் தலைக்குனிய வேண்டியதிருக்கிறது.


வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.


மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)
திருமணம் முடிக்க இருக்கும் ஆண்மகனே!.

* இதற்குப்பிறகாவது உன் நடத்தையை சீராக்கிக்கொள்.

* முடிப்பது நீயல்லவா!, இன்பம் அனுபவிப்பதும் இருவருமல்லவா!


* உன் வாரிசை சுமப்பது உன் மனைவி, பிறந்த பிறகு குழந்தை வாப்பா

என்று சொல்ல போவது உன்னை தானே!

* நீ ஒரு கௌரமான குடும்பத்தைச் சார்ந்திருக்களாம் உனக்கு இஸ்லாம்

வகுத்துள்ள கடமைகளை முதல் சிந்திக்க வேண்டும்.

* இக்கொடுமைக்கு ஆண் பெயர் சூட்டப்பட்ட உன்னையும்,என்னையும்

குறிக்கும் என்பதை உன் வாழ்நாளில் மறந்து விடாதே.

* சந்தோஷத்தை பணம்,பொருள் வாங்கி அனுபவிக்காதே.


* பெண்களின் அவல நிலைக்கு நீ காரணமாக இருக்காதே.


* காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.


* நேரத்தை வீண்விரயம் செய்யாதே.


* இஸ்லாத்தை முழுமையாக அறிந்து உன் கடமைகளைத் தெரிந்து கொள்.


* நபியவர்கள் காட்டிய திருமணத்தை எளி முறையில் அமைத்துக்கொள்.

உன் துணைவியை நீ தேர்ந்தெடுத்துக்கொள்.காரணம் இது உன் வாழ்க்கை.

இப்படி ஒவ்வொரு ஆண்மகனும், நேரம் காலம் பார்க்காமல் தன்னைத்
தான் சிந்தித்தால் நியதி கிடைக்கும் ,ஒரு விரல் தட்டினால் சத்தம்
வராது பொதுவாக ஜந்து விரலும் சேர்ந்தால் சத்தம் வரும் என்பதுக்கு
உதாரணம் அவர் அவர் கை விரல்களை உற்று நோக்க வேண்டும்.

இஸ்லாம் சொன்ன திருமணம், ஒரு மணமகளை எந்த நோக்கத்துக்கா

திருமணம் செய்யவேண்டும் என்பதை நபியவர்களின் பொன்மொழி
மூலம் விளங்களாம்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்;


முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை மணந்து, வெற்றி அடைந்து கொள். (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!'' அறிவிப்பவர் : அபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி (எண் 5090)
o ஒரு முஸ்லிம் தன் துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது இந்நபி மொழியை பேணி மேலோட்டமான உலகியல் ரீதியான காரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தன் துணையை தேர்ந்தெடுப்பானாயின் அந்த திருமண வாழ்வு இறை அருள் நிறைந்ததாக இருக்கும்.
o ஒரு பெண் தன் திருமண வாழ்வு இறையருள் நிறைந்ததாக அமைய இறையச்சமுள்ள ஒருவரை தன் துணையாக அடையப்பெற வேண்டுமாயின் தான் மார்க்க கடமைகளை முறையாக இறையச்சத்துடன் கடைபிடித்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை இந்நபிமொழி பெண்களுக்குப் போதிக்கிறது.

o தன் மகளுக்கு இறையச்சத்துடன் கூடிய நல்ல கணவன் அமைய வேண்டும் என்றால் அவளை நல்ல குணத்துடன் மார்க்கப்பற்றுடன் மார்க்க அறிவு உள்ளவளாக வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையைப் பெற்றோர்களுக்கு ஏற்படுத்துகிறது.

o தன் மகள் நல்ல குணநலன்களுடன் மார்க்கப்பற்றுள்ளவளாக வளர வேண்டும் என்றால் அதற்கு முன்னுதாரணமாக தாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும்; இல்லையென்றால் வளரும் தனது குழந்தை சிறந்தவளாக வளர சாத்தியம் இல்லை என்பதனை அவர்களுக்கும் நினைவுறுத்துகிறது.

o தான் சிறந்த குணநலன்கள் கொண்ட மார்க்கப் பற்றுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் தானும் மார்க்கப் பற்றுள்ளவனாக வாழ வேண்டும் என்று ஆண்களுக்கும் போதிக்கிறது.

o தன் மகனுக்கு மார்க்கப்பற்றுள்ள பெண் வாழ்க்கை துணையாக அமைய வேண்டும் என்றால் நாம் நம் மகனை மார்க்கப்பற்றுடன் சிறந்தவனாக வளர்க்க வேண்டும் என்று ஆணின் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்துகிறது.

o அதே போல் தன் மகன் மார்க்கப்பற்றுடன் வளர வேண்டும் என்றால் நாம் மார்க்கப்பற்றுடன் வாழ்ந்து குடும்பத்தில் இறையச்ச சூழ்நிலையினை அவனுக்கு உருவாக்கித்தர வேண்டும் என்று பெற்றோர்களுக்கு உணர்த்துகிறது.


o இறையச்சத்திற்கு அவசியமான மார்க்க ஈடுபாடு, மார்க்க விருப்பம், மார்க்க அறிவு போன்றவற்றை அதிகரிக்கச் செய்யும் நிகழ்ச்சிகள், சாதனங்கள், நூல்கள், ஒலி/ஒளி நாடாக்கள், தட்டுக்கள் என்று தமது செல்வம் மற்றும் நேரத்தை மார்க்க காரியங்களில் செலவிடுதல் அவசியம் என்ற சிந்தனையை ஆண்-பெண் என்ற பாகு பாடின்றி சமுதாயத்தின் அனைத்து வர்க்கத்தினருக்கும் அவர் தாயாகவோ, தந்தையாகவோ, மகனாகவோ, மகளாகவோ யாராக இருந்தாலும் இது அவசியம் என்ற பேருண்மையையும் இந்த நபிமொழி உணர்த்தி நிற்கிறது.


ஆகவே நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும், தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். தங்கள் கணவன் மறைவாக உள்ள சமயத்தில் பாதுகாக்கப்பட வேண்டுமென அல்லாஹ் விரும்புகின்றவற்றை (தங்களையும், தங்களின் கணவனின் ஏனைய பொருட்களையும்) பேணிப் பாதுகாத்துக் கொள்வார்கள்.(4 : 34)’

வரதட்சனை என்னும் வன்கொடுமை ஒழிய வேண்டும். சீர் வரிசை என்னும் பெயரில் பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் பாதகர்கள் திருந்த வேண்டும்.
கல்யாணத்திற்காகக் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க இறையச்சமுள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்.
வரதட்சனை ஒரு மாபெரும் கொடுமை என்பதை உணர்ந்த ஏராளமான இளைஞர்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யத் தயாராகி விட்டனர்.
என்றாலும் இது ஒரு சாதனை அல்ல. மணப் பெண்ணுக்கு உரிய மஹர் தொகையைக் கொடுத்து மணம் முடிக்க வேண்டும். இதுவே மார்க்கச் சட்டம்.


ஜமாஅத் தலைவர்களே, பொறுப்பாளர்களே!

"முடிந்தவரை வாங்கிக் கொண்டு, பள்ளிவாசலுக்குப் பத்து சதவிகிதம் கொடுத்து விடு" என்று பாவமான வரதட்சணையில் பங்கு கேட்பவர்களாக ஜமாஅத் பொறுப்பாளர் இருந்தால் அந்த ஜமாஅத்தின்கீழ் வாழும் மக்கள் எவ்வகையில் செயல்படுவர் என்பது கூறித் தெரிய வேண்டியதில்லை. களங்கமான பணத்தைக் கொண்டு, தன் இல்லத்தைப் பராமரிப்பதைக் களங்கங்களுக்கு அப்பாற்பட்ட தூயவனான அல்லாஹ் ஒருபோதும் விரும்ப மாட்டான். ஜமாஅத் பொறுப்பாளர்கள், அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் பொறுப்பு நிறைந்த பதவியில் இருப்பவர்கள் ஆவர். கூடுதல் பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கூடுதலான கேள்விகளும் மறுமையில் உள்ளன.
பெருமானார் (ஸல்) முஸ்லிம்கள் அனைவரையும் எச்சரித்தார்கள்: "நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்களுடைய பொறுப்புகள் குறித்து நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். (மக்கள்)தலைவர் ஒருவர், அவருடைய பொறுப்பின் கீழிருந்த அனைவரையும் குறித்து விசாரிக்கப் படுவார். ஒரு குடும்பத் தலைவன், அவனுடைய குடும்பத்தார் குறித்து விசாரிக்கப் படுவான். ஒரு மனைவி, அவளுடைய கணவனின் உடைமைகளையும் பிள்ளைகளையும் குறித்து விசாரிக்கப் படுவாள். ஒரு (வேலைக்கார)அடிமை, அவனுடைய முதலாளியால் அவனிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துகள் குறித்து விசாரிக்கப் படுவான். இவ்வாறாக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்; உங்களுடைய பொறுப்புகள் குறித்து விசாரிக்கப் படுவீர்கள்" (புகாரீ). "

தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ள முன்வராத எந்தச் சமுதாயத்தையும் அல்லாஹ் திருத்தி அமைப்பதில்லை" ( 13:11) 

எல்லாம் வல்ல அல்லாஹ்வால் தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை, அவனுடைய கட்டளைகளுக்கும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டு நிறைவேற்றுவதற்கும் அவரவர் தங்களின் தவறுகளை உணர்ந்து, திருத்திக் கொள்வதற்கும் முன்வந்தால் மட்டுமே சமுதாயத்தில் புரையோடியுள்ள வரதட்சணை என்ற இக்கொடிய அரக்கனை வீழ்த்த இயலும்.

“நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.” (அல்குர்ஆன் 2:208)

அல்லாஹ் யாருக்கு நேர் வழிகாட்டுகிறானோ

அவரை வழிகெடுப்பவன்( யாரும்) இல்லை 39 :37

நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுகிற விதத்தில்

அஞ்சுங்கள் நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள் 3 :102


மென்மையானப்
பெண்மையைச்
சீண்டிப்பார்க்கும் கொடுமை;
தட்சணை என்ற வன்மை!

செலவோடுச் செலவாக;

இனி தொங்கவிடவேண்டும்
கதவுகளில் - நான்
விற்பனைக்கு அல்ல!


இதே கருத்தை இன்றைக்கு பெண்கள் பிடிவாதமாக நிற்கின்றாகள்
என்றால் வரதட்சநையே காரணம். அவர்களின் கண்ணீர்கள் இன்று
உழைப்பு என்ற பெயரில் வரதட்சனைப் பணம் தேடும் பெண்கள்
வெளிநாடுகளில் ஏராளம் ஏராளம்.
பெண்களே நீங்கள் உங்கள் உண்மை நிலையை நிறுத்தாதீர்கள்
வரதட்சனைக்கு எதிராக நீங்களும் போராடுங்கள். அல்லாஹ்
உங்களுக்கு அமைத்த வாழ்க்கையை மனந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லெண்ணங்களையும்,நல்லொழுக்கத்
தையும் தந்தருள்வானாக.
ஆமீன். இன்ஷா அல்லாஹ் தொடரும்.....
*******************************~~~~~~~~~~~~~~~~~~*********************************
அஹமட் யஹ்யா, ஹொரோவபதான,அனுராதபுரம்,SRI LANKA.
____________________________~~~~~~~~~*******~~~~~~~~~___________________________
  

1 comment:

  1. வ அலைக்கு முஸ்ஸலாம் வ
    ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு
    இறைவனின் சாந்தியும், சமாதானமும்
    தங்கள் மீது என்றென்றும்
    நிலவட்டுமாக!
    ஜஸாக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete