Followers

Tuesday, November 6, 2012

புறம் இஸ்லாத்தில் ஹராம்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.


 புறம் இஸ்லாத்தில் ஹராம்.
அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். படைப்பினங்களிலே மிகச் சிறந்த படைப்பாக அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதன் தன்னுடைய சிறிய நாவினால் சில நேரங்களில் மேன்மையடைகின்றான். ஆனால் பல நேரங்களில் சிறுமையடைந்து விடுகிறான். உலகில் நிகழும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் இந்த நாவு தான் என்றால் அது மிகையாகாது. இந்த நாவின் மூலம் பல சமூகங்களுக்கிடையே பெரும் போர்களும் அழிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதே போல் மிகப் பெரும் சமுதாய எழுச்சிகளும், புரட்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன. எனவே நாம் இந்த நாவைப் பயன்படுத்துவதைப்பொறுத்தே.

மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது.


* எல்லைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் சொல்லைக் கொட்டினால் பொறுக்கி விட முடியுமா?

* விட்ட அம்பையும் பேசிய சொல்லையும் மீளப் பெற முடியாது


* முள்ளால் பட்ட காயம் விரைவில் மாறும் சொல்லால் பட்ட காயம் மாறாது


* உண்மை வீட்டை விட்டுப் புறப்பட முன் பொய் உலகைச் சுத்தி வந்து விடும்

* நாவை கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம் கத்தியைக் கொண்டு ஓர் உயிரைக் காப்பாற்றவும் செய்யலாம் ஓர் உயிரை எடுக்கக் கொலையும் செய்யலாம். இதே போன்றுதான் நாவும்.
நாவு தான் சுவர்க்கம் செல்வதற்கும் நரகம் செல்வதற்கும் முக்கிய காரணமாக அமையும்.
* சொல்லிவிட்ட வார்த்தைக்கு நாம் அடிமை, சொல்லாத வார்த்தை நமக்கு அடிமை!

என்றெல்லாம் நாவின் அவலங்களை படம் பிடித்துக் காட்டும் வரிகள் முன் உதாரணம் காட்டுகின்றன.
நபி(ஸல்)அவர்கள், ஒரு அடியான் சில நேரங்களில் இறைவனின் திருப்பொருத்தத்திற்குரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான். (எனினும்) இறைவன் அதற்காக அவனின் அந்தஸ்துகளை உயர்த்துகிறான்.
இன்னும் ஒரு அடியான் சில வேளைகளில் இறைவனின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசிவிடுகிறான் அதன் காரணமாக அவன் நரகில் வீழ்கிறான் என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள், "புறம் பேசுதல் என்றால் என்னவென்பதை அறிவீர்களா?'' என்று வினவினார்கள். தோழர்கள் கூறினர்: "அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிந்தவர்கள்.'' நபி (ஸல்) அவர்கள், "உமது சகோதரர் வெறுக்கும்படியான ஒன்றை நீ பேசுவது'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம், "நான் சொல்வது என் சகோதரரிடம் இருந்தால் (அதுபற்றி) என்ன கருதுகிறீர்கள்?'' என்று ஒருவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "நீர் சொல்வது உம்முடைய சகோதரரிடமிருந்தால் நீர் புறம் பேசிவிட்டீர். அது அவரிடம் இல்லை யென்றால் அவரைப் பற்றி அவதூறு கூறிவிட்டீர்.'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)


நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) அவர்களிடம் தமது நாவைப் பிடித்தவர்களாகக் கூறினார்கள்: "இதை உம் மீது தடுத்துக் கொள்வீராக!'' முஆத் (ரழி), "அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசும் பேச்சின் காரணமாக தண்டிக்கப்படுவோமா?' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், "உமது தாய் உன்னை இழக்கட்டும்! மனிதர்களை முகம் குப்புற நரகில் தள்ளுவதெல்லாம் அவர்களது நாவுகள் அறுவடை செய்ததைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்'' என்று கூறினார்கள். இப்னு மாஜா)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகக் கெட்ட மனிதன் இரட்டை முகமுடையவன். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும், அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் வருவான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தை கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினால் ஆன நகங்கள் இருந்தன. அவற்றின மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் (தாமே) காயப்படுத்திக் கொண்டிருந்தனர். ‘’ஜிப்ரீலே இவர்கள் யார்?’’

‘’இவர்கள் மனிதர்களின் மாமிசத்தை சாப்பிட்டவர்கள் (அதாவது புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் பங்கம் விளைவித்தவர்கள் என விளக்கமளித்தார்கள். ( அஹ்மத், அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதிவாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)


யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)


உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களின் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே). அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுவோரை அங்கீகரிப்போனாகவும் கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான். (அல்குர்அன் 49:12)

குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக்கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான்.அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித்தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்டகம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.

(அல்குர்ஆன் 104:1-9)

'பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.'' - திருக்குர்ஆன் 28: 83 ]


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~************~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா, ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA
___________________________________________________________________________________
 

No comments:

Post a Comment