Followers

Wednesday, November 14, 2012

நான் கற்றுக்கொண்ட பாடங்கள்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....


நான் கற்றுக்கொண்ட பாடங்கள்.
(நான் என்று சொன்னால் இதை யாரெல்லாம் வாசிக்கின்றார்களோ
அவர்களையும், சொல்லுகின்ற என்னையும் குறிக்கும்.)


பாடம் 1): இந்த உலகில் ஒவ்வொருவரும் மற்றவரை நேசிப்பதைக் கண்டேன். ஆனால் மரணித்து மண்ணறைக்குச் சென்றுவிட்டால் அந்த நேசர்கள் பிரிந்து விடுவதையும் கண்டேன். எனவே, நல்லறங்களையே என் நேசத்துக்குரியவைகளாக நான் எடுத்துக் கொண்டேன். ஏனெனில், நான் கப்றுக்குச் சென்ற பின்னரும் அவை என்னை விட்டும் பிரிந்து விடாமல் என்னுடன் கப்றுக்கும் வரும்.

பாடம் 2) :நான் ‘யார் தனது இரட்சகன் முன் நிற்பதை அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னைத் தடுத்துக் கொண்டாரோ, நிச்சயமாக சுவர்க்கம் (அவரது) ஒதுங்குமிடமாகும். ‘ (79:40-41)என்ற குர்ஆன் வசனத்தைப் பார்த்தேன். எனவே, நான் முழுமையாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்படும் அளவுக்கு என் ‘ஹவா’ மனோ இச்சையைக் கட்டுப்படுத்த பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொண்டேன்.

பாடம் 3): உலகத்தில் இருக்கும் அனைவரும் ஏதோ ஒன்றைப் பெறுமதியாகக் கருதி அதைப் பாதுகாக்கக் கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவதைக் கண்டேன். பின்னர் ‘உங்களிடம் உள்ளவை முடிந்து விடக்கூடியவையே. அல்லாஹ்விடம் உள்ளவையோ நிலையானவையாகும். மேலும், பொறுமையுடன் இருந்தவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக அவர்களது கூலியை நாம் வழங்குவோம்.’ (16:96) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, என்னிடம் கிடைக்கும் பெறுமதிவாய்ந்த எதுவாக இருந்தாலும் அது பாதுகாப்பாக இருப்பதற்காக அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன்.
பாடம் 4): உலகத்தில் ஒவ்வொருவரும் தமது பணம், குடும்பப் பாரம்பரியம், பட்டம் பதவி மூலம் கண்ணியத்தையும் சிறப்பையும் பெற போட்டி போடுவதைக் கண்ணுற்றேன். பின்னர் ‘உங்களில் மிகப் பயபக்தியுடையவரே, நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக கண்ணியத்திற்குரியவர்.’ (49:13;) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, அல்லாஹ்விடம் கண்ணியத்தைப் பெறும் முகமாக தக்வாவுடன் செயல்பட்டேன்.

பாடம் 5): மக்களில் சிலர் சிலரைக் குறை கூறுகின்றனர். மற்றும் சிலர் சிலரை சபிக்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்று தேடினேன். பொறாமைதான் அதற்கு அடிப்படை என்று அறிந்து கொண்டேன். பின்னர் ‘(நபியே!) அவர்கள் உமது இரட்சகனின் அருளைப் பங்கிட்டுக் கொள்கின்றனரா? இவ்வுலக வாழ்க்கையில், அவர்களது வாழ்க்கைத் தேவைகளை அவர்களுக்கிடையில் நாமே பங்கிடுகின்றோம். அவர்களில் சிலர் மற்றும் சிலரைப் பணிக்கமர்த்திக் கொள்வதற்காக, அவர்களில் சிலரை மற்றும் சிலரைவிட அந்தஸ்துக்களால் நாம் உயர்த்தியிருக்கின்றோம். அவர்கள் ஒன்றுதிரட்டியிருப்பதை விட உமது இரட்சகனின் அருள் மிகச்சிறந்ததாகும்.’ (43:32) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, நான் பொறாமையைக் கைவிட்டேன். மக்களை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன். எனவே, பொறாமைப்படுவதை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்.

பாடம் 6): மக்களில் சிலர் சிலரைக் கோபித்துக் கொள்வதையும், எதிரியாக எடுத்துக் கொள்வதையும், தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதையும் கண்டேன். பின்னர் ‘நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு விரோதியாவான். எனவே, அவனை நீங்கள் விரோதியாகவே எடுத்துக் கொள்ளுங்கள். அவன் தனது கூட்டத்தாரை, நரகவாசிகளில் அவர்கள் ஆகிவிட வேண்டும் என்பதற்காகவே அழைக்கின்றான்.’ (35:6) என்ற வசனத்தைப் பார்த்தேன். அல்லாஹ் ஷைத்தானை எதிரியாக எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருப்பதனால் படைப்பினங்கள் மீதான எதிர்ப்புணர்வை விட்டு விட்டு ஷைத்தானை மட்டும் எதிர்ப்பதை இலக்காகக் கொண்டு செயற்படுவதற்கு நான் என்னைத் தயார் பண்ணிக் கொண்டேன்.

பாடம் 7): படைப்பினங்களில் அனைவரும் தனக்குரிய வாழ்வாதாரத்தைத் தேடுவதற்காகப் பெரும் பிரயத்தனத்தை மேற்கொள்வதைக் கண்டேன். சிலர் தடுக்கப்பட்ட வழிமுறைகள் மூலமாகவாவது தமக்குரிய ரிஸ்கைத் தேட முயற்சிப்பதைக் கண்டேன். இதற்காகவே தமது வாழ்வின் பெரும் பகுதியை கழிப்பதைக் கண்டேன். பின்னர் ‘பூமியில் உள்ள எந்த உயிரினமாயினும் அதற்கு உணவளிக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் மீதே உள்ளது. அதன் வாழ்விடத்தையும், அதன் சென்றடையும் இடத்தையும் அவன் நன்கறிவான். (இவை) அனைத்தும் தெளிவான பதிவேட்டில் இருக்கின்றன.’ (11:6) என்ற வசனத்தைப் பற்றி சிந்தித்தேன். அல்லாஹ் உணவளிக்கப் பொறுப்பெடுத்துக் கொண்ட உயிரினங்களில் நானும் ஒருவன் என்பதை அறிந்து கொண்டேன். அல்லாஹ் எனக்காகப் பொறுப்பெடுத்துக் கொண்ட ரிஸ்கைத் தேடுவதில் மூழ்குவதை விட்டு விட்டு அவனுக்காக நான் செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபாடு காட்டலானேன்.

பாடம் 8): உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றின் மீது நம்பிக்கை வைத்து செயற்படுவதைக் கண்டேன். சிலர் தமது பணத்தில் நம்பிக்கை வைக்கின்றனர். சிலர் தமது பதவியில் சிலர் தமது கட்சியில், சிலர் தமது தொண்டரில், சிலர் தமது தலைமையில்…. என பொறுப்புச்சாட்ட, நம்பிக்கை வைக்க என்று வேறு படைப்பை நாடுவதைக் கண்டேன். பின்னர் ‘நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டு, பின்னர் நிராகரித்ததே இதற்குக் காரணமாகும். எனவே, அவர்களது உள்ளங்கள் மீது முத்திரை குத்தப்பட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.’ (63:3) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, படைக்கப்பட்டவற்றின் மீது நம்பிக்கை வைப்பதை விட்டுவிட்டு படைத்தவனான அல்லாஹ்வின் மீதே நானும் தவக்குல் வைக்கலானேன்.
~~~~~~~~~~~```~~~~~~~~~~```~~~~~~~~~~~```~~~~~~~~~~~```~~~~~~~~~~```~~~~~~~~~```~~~~~~~~~~~~
முஸ்லிம், நேர்மையற்றவராகவோ மோசடிக்காரராகவோ இருக்கமாட்டார். எனெனில் அவர் வாய்மையாளராக இருப்பதால் பிறர் நலம் நாடுவது, மனத்தூய்மை, நீதி, நேர்மை போன்ற நற்பண்புகளையே விரும்புவார். மோசடி, வஞ்சம், நேர்மையின்மை போன்ற குணங்களை விரும்பமாட்டார்.

உண்மை முஸ்லிமின் மனசாட்சி மோசடித்தனத்தைச் சகித்துக் கொள்ளாது. அதிலிருந்து விலகிச் செல்லவே அவரைத் தூண்டும். அக்காரியங்களை செய்தால் இஸ்லாமிலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவோம் என அவர் அஞ்சுவார்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவர் நமக்கு எதிராக வாளை ஏந்துகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்லர். எவர் நம்மை மோசடி செய்கிறாரோ அவரும் நம்மைச் சார்ந்தவரல்லர்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தின் மற்றொரு அறிவிப்பில் காணப்படுவதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒர் உணவு தானியக் குவியலை கடந்து சென்றபோது தனது கரத்தை அதனுள் நுழைத்தார்கள். தனது விரல்களில் ஈரத்தைக் கண்டபோது "உணவு தானியத்தின் உரிமையாளரே! இது என்ன?'' என்று கேட்டார்கள். அவர் "அல்லாஹ்வின் தூதரே! மழைதான் காரணம்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் "அந்த ஈரமானதை மக்கள் பார்க்கும் வகையில் மேல் பகுதியில் வைத்திருக்க வேண்டாமா? மோசடித்தனம் செய்பவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.


இஸ்லாமிய சமுதாயம் நேசம், பிறர் நலம் பேணுவது என்ற அடிப்படையின் மீது நிர்மாணிக்கப்பட்டதாகும். இஸ்லாம் நேர்மை, உண்மை மற்றும் உபகாரம் செய்வதை தனது உறுப்பினர் மீது விதியாக்கியுள்ளது. அதனால்தான் நன்றி மறப்பவன், எமாற்றுக்காரன், வஞ்சகன் போன்றவர்களுக்கு அதில் இடமில்லை.

நபி (ஸல்) அவர்கள் மோசடி செய்பவன் விஷயத்தில் மிகக்கடினமான நிலையைக் கொண்டிருந்தார்கள். அவனை சமுதாயத்திலிருந்து நீக்கிவைப்பதுடன், உலக முஸ்லிம்களின் கூட்டமைப்பிலிருந்தும் விலக்கி வைத்தார்கள். மேலும், அவன் மனிதர்கள் ஒன்று சேர்க்கப்படும் மறுமை நாளில் தனது மோசடித்தனத்திற்கு அடையாளமாக ஒரு கொடியை கரத்திலேந்தி வருவான். அவனது மோசடித்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் மலக்குகள் சப்தமிட்டு அதைக் கூறுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் ஒவ்வொரு மோசடிக்காரனிடமும் ஒரு கொடி இருக்கும், இது அவனது மோசடித்தனம் என அறிவிக்கப்படும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அவன், தான் செய்த மோசடித்தனங்கள் கால ஒட்டத்தால் அழிந்திருக்கும் என்று எண்ணியிருக்க, படைப்பினங்கள் அனைவரின் முன்னிலையிலும் மோசடித்தனத்திற்குரிய என்ற கொடியை கையிலேந்தி வருவது எத்தகு அவமானம்?

மோசடிப் பேர்வழிகளின் துரதிஷ்டமும் கவலையும் மறுமை நாளில் அதிகரித்துக்கொண்டே செல்லும். நபி (ஸல்) அவர்கள் ஷஃபாஅத் செய்யும் அந்த அரிய சந்தர்ப்பத்தில் "அல்லாஹ தஅலா அந்த மோசடிக்காரர்களுக்கு எதிராக வாதிடப்போகிறான்'' என்று அறிவிக்கப்படும். ஏனெனில், அது அல்லாஹ்வின் அருளைத் தடுத்துவிடும் மாபெரும் குற்றச் செயலாகும். அதனால் மறுமை நாளில் கருணை நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் என்ற மகத்தான பாக்கியத்திலிருந்து அகற்றப்படுவார்கள்
.

அல்லாஹூ தஅலா அருளியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மூன்று நபர்களுடன் நான் மறுமை நாளில் வாதிடுவேன். 1.என் பெயரால் சத்தியம் செய்து பின்பு மோசடி செய்தவன் 2.சுதந்திரமான ஒருவரை அடிமையெனக் கூறி விற்று அவரின் கிரயத்தை சாப்பிட்டவன் 3. தனது வேலைக்கு கூலிக்காரரை அமர்த்தி அவரிடம் முழுமையாக வேலை வாங்கிக் கொண்டு அவருக்கு கூலி கொடுக்காதவன்.'' (ஸஹீஹுல் புகாரி)

முஸ்லிமின் உணர்வுகளை இஸ்லாம் மதிக்கிறது. சிந்தித்து செயல்படுவதற்கான வழிகளைத் திறந்து வைத்துள்ளது. அவர் பொருளீட்டும்போது பொய், மோசடி, அநீதம் போன்ற குணங்கள் தலைதூக்கிவிடாமல் கவனமாக இருப்பார். அதனால் அவருக்கு எவ்வளவு இழப்பு எற்பட்டாலும் சரியே. ஏனெனில் இந்த குணங்கள் உடையவனை இஸ்லாம் நயவஞ்சகர்களின் பட்டியலில் சேர்க்கிறது. நயவஞ்சகர்களுக்கு மறுமையில் உதவுவார் ஒருவருமில்லை. அவனுக்கு நரகின் அடித்தளமே நிரந்தரமாக்கப்படும்.

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்பாகத்தில்தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீர் காண மாட்டீர் (அல்குர்அன் 4:145)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவனிடத்தில் நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் முழுமையான நயவஞ்சகனாவான். எவனிடத்தில் அதில் எதேனும் ஒன்று இருக்கிறதோ அதை விட்டொழிக்கும்வரை நயவஞ்சகத்தின் ஒருகுணம் அவனிடத்தில் இருக்கும். 1. அவன்மீது நம்பிக்கை வைத்தால் மோசடி செய்வான் 2. பேசினால் பொய்யுரைப்பான் 3. ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான் 4. விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

சிந்திக்கத் தூண்டுகிறது:-
இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகிய குர்ஆன் அல்லாஹ்வினால் அருளப்பட்டது. அருள்மறை சிந்திக்கக்கூறி உலகோரை அழைக்கும் வசனங்கள் ஏராளம். ஏராளம். ஓரிரு சான்றுகளைக் காண்போம்.

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)

நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (54:17)


இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.) (25:73).


மேற்கூறிய அருள்மறை வசனங்கள் சிந்திக்கத் தூண்டுவதுடன் ஒரு படிப்பினையையும் நமக்குக் கற்றுத்தருகிறது. அதாவது எந்த ஒரு கருத்தும் எவரால் சொல்லப்பட்டாலும் அக்கருத்து சரியானதுதானா? என்பதை சிந்தித்து தீர்மானிக்க கூறுகிறது. அருள்மறை வசனங்கள் அல்லாஹ்வினால் அருளப்பட்டதாக இருந்தாலும் அதனையும் சிந்தித்துச் செயல்படக்கூறும் வியப்பைப் பார்த்தோம். சொல்பவர் யார்? என்று பார்க்காமல் சொல்லும் கருத்து சரிதானா? என்ற உயரிய சித்தாந்தம் இங்கு நிலைநாட்டப் படுகின்றது.
________________________________________________
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
******************************************************************************
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~