Followers

Monday, November 26, 2012

நற்குணமும்,தீயகுணமும்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அன்பின் சகோதர, சகோதரிகளே.

நற் குணங்கள்
***********


**தூய்மை
___________________________


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)

(நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)

** எளிமை
__________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, 'எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.' (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) (நூல்கள்:அபுதாவூத், )

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் )

** நிதானம்
__________________________

இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)

உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)


** நாவடக்கம்
__________________________


இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)

எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)


** அன்பாக பேசுதல்
___________________________

கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)
** உண்மை பேசுதல்
____________________________

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)
விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)

** பிறருக்கு உதவி புரிதல்
___________________________

நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், )


** மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்
____________________________


மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) (நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்)

உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)


** நன்றி செலுத்துதல்
____________________________

மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி)


** உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்.
___________________________

நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)

தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். (நூல்: புஹாரி,முஸ்லிம்)


** தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)
__________________________

அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)

** தவ்பா (மன்னிப்பு கோருதல்)
___________________________

எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)
** வெட்கப்படுதல்
___________________________

திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர
்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)

 

தீய குணங்கள்
************


** கோபம்
___________________________

(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.
(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

** தற்பெருமை
___________________________


(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

** பிறர் துன்பத்தை கண்டு மகிழ்தல். 
____________________________

உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).
** பொய்
___________________________


எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)
சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)
** கெட்டவற்றை பேசுதல்
____________________________

எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)
** வேஷம் போடுதல்.
____________________________

மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)

** கொடுமை
____________________________


அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)

** வரம்பை மீறிய புகழ்ச்சி –
_____________________________
 
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்)
** வாக்குறுதி மீறல்
______________________________

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)
நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)
** சண்டை
______________________________
_
அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)
** குறை கூறல்
______________________________
__
குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)

** பொறாமை
______________________________
___
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, )
** பாரபட்சம் காட்டுதல்
______________________________
____

நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)

முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)
** கெட்ட பார்வை
______________________________
____

(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)

கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)


செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)


** பரிகாசம்
______________________________
____
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
*******************************************************************************
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA
__________________________________________________________________________________
 

ஸலாம் சொல்வதின் சிறப்பு...

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அன்பின் சகோதர, சகோதரிகளே.


ஸலாம் சொல்வதின் சிறப்பு...

அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்குணங்களை முழுமைபடுத்தவே அனுப்பப்பட்டார்கள். நற்குணங்களின் முழு வடிவமாகத் திகழ்ந்த அவர்கள், மனித நேயத்தையும், பண்பாட்டையும், உயரிய ஒழுக் விழுமியங்களையுமே உலகிற்கு போதித்தார்கள். அவர்கள் போதனைகளுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் தான் போதித்தவைகளை முதிலில் செயல்படுத்துபவர்களாக அவர்களே திகழ்ந்தார்கள். அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுமாறு தூதருக்கு பணிக்கின்றான்:

(நபியே! இன்னும்) ‘மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்.’ என்றும் கூறுவீராக. ‘அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்’ (என்றும் நீர் கூறுவீராக). (39: 11,12).
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 12

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: திர்மிதீ 2613

அஸ்ஸலாமு அலைக்கும் என்ற இந்த வார்த்தை முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓரு பெரிய அருட்கொடை என்றே சொல்ல வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்: ஸலாம் – நிகரற்ற அன்புடையோனாகிய இறைவனிடமிருந்து வந்த வார்த்ததையாகும். (அல்குர்ஆன்: 36:58).
பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், குட்மார்னிங் போன்ற ஒரு வார்த்தை என்று தான் பலர் நினைத்து கொண்டுள்ளனர்.
நாம் சொல்லும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தையை சாதாரண மனிதர்களோ, பண்டிதர்களோ இயற்றவில்லை. மாறாக மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் இந்த அஸ்ஸலாமு அலைக்கும். நாம் இதை மொழியும் போதெல்லாம் நிச்சயம் இறைவனின் அருள் மழை பொழியும். இந்த ஸலாத்தின் மூலம் சண்டை சச்சரவுகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு பிரியத்தையும், சமாதானத்தையும் உண்டாக்க அல்லாஹ் விரும்புகிறான்.


உங்களில் ஈமான் (விசுவாசம்) கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை ஈமான் கொண்டவர்களாக ஆகமாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை நான் கற்றுத்தரட்டுமா? என்று கேட்ட நபி(ஸல்) அவர்கள், உங்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்வதைப் பரவலாக்குங்கள் (பிரியத்தை ஏற்படுத்த இதுவே மிக சிறந்த வழியாகும்) என்று கூறினார்கள். (நூல்:முஸ்லிம்)

உங்களில் ஈமான் கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள் இதுதான் அந்த முதல் வாசகம். இதற்கு பொருள் என்ன? உலகில் யார் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்தாலும் அவர்களுக்கு ஈமான் (இறை நம்பிக்கை) கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் நற்செயல்கள் அனைத்தும் அழிந்து விடும்.

எனவே ஸலாம் சொல்லி அதன் மூலம் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள் அல்லாஹ்வையே ஏளனம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது நிம்மதி நிலவட்டுமாக! என்பது அதன் பொருள். அதாவது உங்கள் மனைவியிடத்தில், உங்கள் குழந்தையிடத்தில், உங்கள் உறவினர்களிடத்தில், உங்கள் பிரயாணத்தில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், உங்கள் மண்ணறையில் பின்பு மறுமையில் இவை எல்லா நிலைகளிலும் உங்கள் மீது நிம்மதி உண்டாகட்டுமாக! இது தான் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதின் பொருள். இவை அனைத்தையும் சுருட்டி மடக்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்பதில் அல்லாஹ் வைத்துள்ளான். மனித வாழ்வில் ஏற்படும் முக்கியமான தருணங்கள் அவை.


'ஸலாம்' கூறுவதன் மூலம் சகோதரத்துவம், அன்பு, பாசம், நேசம் ஏற்படுகிறது.
இறைநம்பிக்கையும் அன்பும் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.இறைபக்தி மற்றும் இறைநம்பிக்கையுடன் செயல்படுவோர் தீமைகளைத் தவிர்ப்பர். நன்மை செய்வோருக்கு சுவனம் கிடைப்பது உறுதி இறைநம்பிக்கை கொண்டோரே! ஸலாத்தின் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள்! சகோதரப் பிணைப்பிற்கு அது ஒன்றே வழி!

''அல்லாஹ்விடம் மக்களிலேயே மிசச்சிறந்த நபர் முதலில் ஸலாம் கூறுபவராவார்''என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


ஸலாம் கூறுவதை மரியாதைக் குறைவாக கருதுவோரும் உண்டு; நமது அந்தஸ்திற்கு இவருக்குப் போய் ஸலாம் கூறுவதா? என்ற அகந்தை எண்ணத்துடன் தலை நிமிர்ந்து செல்வோரும் உண்டு; இது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். அடுத்தவரது நல்வாழ்விற்காக செய்யும் பிரார்த்தனையே ஸலாம் ஆகும். அதைச் சொல்வதற்குக் கூட கஞ்சத்தனம் செய்வோர் மனித நலனை எவ்விதம் காப்பர்? அதனால் தான் நபியவர்கள் தாங்களாகவே முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள். இந்த நபி மொழியை செயல்படுத்துவதற்காக அப்துல்லாஹிப்னு உமர் என்ற நபித்தோழர் கடைவீதிக்குச் சென்று, ஏழை, எளியோர், வியாபாரிகள் மற்றும் வருவோர், போவோர் அனைவருக்கும் ஸலாம் கூறும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். முதல் மனிதர் ஆதமின் முதல் வார்த்தையே ஸலாம் தான்! ஒருவரையொருவர் வெறுத்து பிரிந்து வாழ்வோர் ஸலாம் கூறுவதன் மூலமாக ஒன்று சேர்வதற்கான அருமையான வழிமுறையை அண்ணல் நபியவர்கள் காட்டியுள்ளார்கள்.


'திண்ணமாக அல்லாஹ் மென்மையானவன்; அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ, முஸ்லிம்


ஒரு மனிதன் தான் அறியாமலிருக்கும் ஒருவருக்கு 'ஸலாம்' கூறுவது அறிமுகத்தையும், சகோதர உணர்வையும் ஏற்படுத்துகிறது. அறிந்தோருக்கு ஸலாம் கூறுவது ஏற்கனவேயுள்ள தொடர்பையும் பாசத்தையும் வலுப்படுத்தி அகந்தை மற்றும் பெருமையை அகற்றுகிறது. உணவளிப்பது உடலுக்கு வலிமைåட்டுகிறது என்றால், 'ஸலாம்' கூறுவது மனநிம்மதிக்கும், அமைதி வாழ்விற்கும் வழிகோலுகிறது.
மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்கிக் கொண்டிருங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி, நூற்கள் : திர்மிதீ, இப்னுமாஜா 3242, அஹ்மத், ஹாகிம்)


அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சொர்க்கத்தை நிச்சயமாகப் பெற்றுத் தரும் ஒன்றை அறிவியுங்கள்! என ஹானீ (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நல்ல வார்த்தைகளைப் பேசு! ஸலாத்தைப் பரப்பு! என்றார்கள்.
(அறிவிப்பவர் : ஷுரைஹ் இப்னு ஹானீ -ரலி, நூற்கள் : இப்னுஹிப்பான், ஹாகிம்)



ஸூப்ஹானல்லாஹ் ஸலாம் சொல்வது எவ்வளவு பெரிய அருட் கொடை என்பதை மேலே சொன்ன நபிமொழி நமக்கு உணர்த்துகின்றது. எனவே நமக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்பவும் அந்த ஸலாத்தை தூய்மையான எண்ணத்துடன் சொல்லவும் அல்லாஹ் நமக்கு நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான,அனுராதபுரம்.SRI LANKA. 
**********************************************************************************