Followers

Tuesday, October 16, 2012

இஸ்லாத்தில் இத்தா

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.


இஸ்லாத்தில் இத்தா

இத்தா என்பதற்கு எண்ணுதல் என்று பொருள்படும். இஸ்லாமிய மார்க்கத்தில் கணவனை இழந்த பெண்களும் தலாக் (மணவிலக்கு) செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் மறுமணம் செய்யாமல் காத்திருப்பது கடமையாகும். இவ்வாறு காத்திருப்பதற்கு ‘இத்தா’ என்று சொல்லப்படும்.
இத்தா அனுஷ்டிக்கும் பெண்களைப் பொறுத்து இக்காலத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றது.


1. கணவனை இழந்த பெண்களின் இத்தாக் காலம்:
 
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் ‘இத்தா’ இருக்க வேண்டும் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இறைவன் தனது திருமறையில்,

‘ உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 2:234)

2. விவாகரத்து செய்யப்பட்ட பெண்களின் இத்தாக் காலம்:
 
விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் மறுமணம் செய்யக் கூடாது என இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இறைவன் தனது திருமறையில்,

‘விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன் ஞானமிக்கவன்.’ (அல்குர்ஆன் 2:228)

3. மாதவிடாய் அற்றுப் போன பெண்களின் இத்தாக் காலம்:
 
மாதவிடாய் அற்றுப் போன பெண்கள் மூன்று மாதங்கள் ‘இத்தா’ இருக்க வேண்டும் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இறைவன் தனது திருமறையில்,
‘உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக்கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அழ்ழாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.’ (அல்குர்ஆன் 65:04)
4. கர்ப்பிணிப் பெண்களின் இத்தாக் காலம்:

 
கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை ‘இத்தா’ இருக்க வேண்டும் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இறைவன் தனனது திருமறையில்,
‘உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக்கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அழ்ழாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.’ (அல்குர்ஆன் 65:04)

எவருக்கும் எந்த அநியாயமும் பாதிப்புகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக அல்லாஹ் மார்க்கத்தில் பல வரையறைகளையும் சட்டங்களையும் அமைத்துள்ளான். அதனை மனிதர்கள் மீறும் பட்சத்திலேயே இழப்புகளை எதிர்க்கொள்கின்றனர். அந்த வகையில் திருமணத்தின் மூலம் பெண்களுக்கே அதிக கஷ்டங்கள் இல்வாழ்வில் ஏற்படுகின்றது. ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் இறந்து விட்டாலோ அல்லது அவளை விவாகரத்து செய்து விட்டாலோ இன்னும் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடுகின்றது. இளம் வயதுடைய ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி நிலைமை ஏற்படின் அவளுக்கு இன்னொரு வாழ்க்கைத் துணை கட்டாயம் தேவைப்படும். எனவே அவள் மறுமணம் செய்ய வேண்டும்.
 
கணவன் இறந்து அல்லது விவாகரத்து செய்த மறுகணமே அல்லது காலவரையறை எதுவுமின்றி அவள் மறுமணம் செய்தால் அவளுக்கு மறுமணத்தின் பின்னர் கிடைக்கும் குழந்தைக்கு தந்தை யார்? என்பதில் சில வேளைகளில் புதிய கணவனுக்கோ மற்றவர்களுக்கோ சந்தேகம் ஏற்படலாம். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அதனை கண்டுபிடிக்க சாதனங்கள் இருப்பினும் பணத்தை வீசி பொய்யான மருத்துவ அறிக்கைகளைப் பெறுவதும் கூட மிக இலகுவாக உள்ளது. அதனால் பாதிக்கப்படுவது அந்தப் பெண் மட்டுமல்ல அவளது குழந்தையும் தான். அதனால் தான் அல்லாஹ் பெண்ணுக்கு மறுமணத்திற்காக ஒரு காத்திருப்பு (இத்தா) காலத்தை ஏற்படுத்தி கருவுற்றிருப்பதை ஊர்ஜிதம் செய்து தெளிவுபடுத்தியதன் பின்னரே மறுமணம் செய்ய அனுமதித்துள்ளான். இது பெண்களுக்கு கிடைத்த அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையாகும்.
இத்தா வின் போது தடைசெய்யப்பட்டவை.

 
‘இறந்தவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாட்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்” என உம்மு அதிய்யா (ரலி) அறிவித்தார்.
நூல் : புகாரி 313
கணவனை இழந்த பெண், மஞ்சள் அல்லது சிவப்புச் சாயம் பூசப்பட்ட ஆடைகள், நகை ஆகியவற்றை அணியக் கூடாது; தலைக்குச் சாயம் பூசக் கூடாது; சுர்மா இடக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூல்: அபூதாவூத் 1960
மறுமணத்தைத் தள்ளிப் போடும் இந்தக் காலகட்டத்தில் நகை அணியலாகாது. மருதானி போன்ற சாயங்கள் பூசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூல் : அபூதாவூத் 1960, அஹ்மத் 25369


இத்தாவில் இருக்க வேண்டிய முறைகள்.
 
மார்க்கச் சட்டமானது ஆண், பெண் எல்லோருக்கும் பொதுவானது. எப்போதும் பின்பற்றப்பட வேண்டியது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் 24:31


இது பெண்களுக்காக அல்லாஹ் எப்பொழுதும் இருக்குமாறு சொல்கின்றான். பெண்கள் திருமணம் முடிப்பதற்கு முன்னாலும், திருமண் முடித்த பின்னாலும், கணவனை இழந்தாலும்,இழக்காவிட்டாலும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். பொதுவாக பருவ வயதை அடைந்தது முதல் மௌத்து வரைக்கும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

முஹம்மதே! தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 24:30


எனவே இத்தா இருப்பதற்கு என்று விசேடமான முறைகள் எதுவுமில்லை. சர்வ சாதாரணமாக அன்றாடம் செய்யும் வேலைகளைச் செய்து கொண்டு அல்லாஹ் தவிர்க்கும் படி கூறியவைகளை தவிர்க்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,........................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அஹமட் யஹ்யா..
ஹொரோவபதான, அனுராதபுரம், SRI LANKA
****************************
  

No comments:

Post a Comment