Followers

Saturday, October 13, 2012

இஸ்லாத்தின் தூண்கள் ஜந்து.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.


 இஸ்லாத்தின் தூண்கள் ஜந்து.
அல்லாஹ் இவ்வுலகத்தைப் படைத்து அதில் பல் கோடி படைப்பினங்களையும்,கோல்களையும் படைத்து ஒரே நேரத்தில் அவைகளின் தேவைகளை நிறைவு செய்து கொண்டிருக்கிறான்.

அதிலும் சிறந்தவனாக உயர்ந்தவனாக அல்லாஹ் மனிதநைப்படைத்து அம் மனிதனுக்கு பகுத்தறிவையும் கொடுத்து அவனுக்கு சில கடமைகளையும் நிர்ணயம் செய்து இருக்கிறான்.இஸ்லாத்தின் கடமைகள் அவைகளை முறையாக ஒரு மனிதன் அறிந்து, புறிந்து, தெரிந்து கொள்வது அவனது கடமையாகும்.எனவே இஸ்லாம் ஜந்து தூண்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. இக்கடமைகளை இக்கட்டுரையில் இன்ஷா அல்லாஹ் அமைக்கலாம் என நினைக்கிறேன் .அல்ஹம்துலில்லாஹ்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

இஸ்லாம் ஐந்து விசயங்கள் மீது கட்டப்பட்டுள்ளது.


1.அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுவது


2.தொழுகையை நிலை நாட்டுவது


3.ஜகாத் கொடுத்து வருவது


4.ரமளான் மாதம் நோம்பு நோற்பது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5.ஹஜ்ஜு செய்வது
(ஆதாரம்: புகாரி)


இந்த (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 22:78)

1 வது. கலிமா.
லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் யாதெனில் பூமியிலோ, வானத்திலோ உண்மையாக வணங்கப்படுவதற்க்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன். இணை துணையற்றவன் அவனுக்கு நிகராக எதுவுமில்லை . உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ் மாத்திரம்தான். அவன் தனித்தவன். யாதொரு இணை துணையுமற்றவன்.
மேலும் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஒரு அடியான் உறுதியாக சாட்சி கூற வேண்டும்.

அல்லாஹ்வின் ஒருமைத்தன்மையில் அடங்கியிருக்கும் உண்மையான விளக்கத்தையும் அதன் தேவைகளை நிறைவேற்றும் அவசியத்தையும் ஒருவன் உணரத் தொடங்க வேண்டும். அவன் இந்த உண்மையான நம்பிக்கையைத் தன் சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்தி, அதன் படியே நடக்கத் தொடங்க வேண்டும்.


நபியின் போதனைகளை நம்பி, அவற்றைத் தன் வாழ்க்கையில் கடைபிடித்து, அவர் தடுத்தவற்றை விட்டு ஒதுங்கி, அவருக்கு அல்லாஹ்வால் அருளப்பெற்ற தூதுச்செய்தியின் அடிப்படையிலேயே இறைவனை வணங்கி, வாழ்வதுதான் முஹம்மத் நபியைத் தூதர் என்று ஏற்றுக்கொண்டதன் உண்மையான அடையாளமாகும்.


இறை வரம்பு மீறலை வெறுத்து அல்லாஹ்வின் மீது எவர் முழுமையாக நம்பிக்கை கொள்கிறாரோ திண்ணமாக அவர் மிக உறுதியான-அறுபடாத - பிடிமானத்தைப் பற்றிக் கொண்டவராவார். (அல்குர்ஆன் 2:256)

2 வது தொழுகை.
பருவமடைந்த, ஆண், பெண் அனைவரின் மீதும் தொழுகை கடமையாகும்.

அல்லாஹ் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் வணக்கமே இத்தொழுகை. எனவே அதனை கடமை உணர்வுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் முறையாக நிறைவேற்றவேண்டும்.


இந்தக் கடமை மனிதன் மரணிக்கும் போதுதான் முடிவடைகிறது. ஊரில் இருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும் ஆரோக்கியமாக இருக்கும் போதும் நோயாளியாக இருக்கும் போதும் கூட தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.


நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

தொழுகைக்கு இறையச்சம் இன்றியமையாததாகும். இறையச்சமற்ற தொழுகை குறையுடைய தொழுகையாகும். எனவே தொழுகையை மிகவும் அச்சஉணர்வுடன் நிறைவேற்றவேண்டும். நாம் அல்லாஹ்வை காணாவிட்டாலும் அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் தொழவேண்டும். தொழுகை இறைவனுடன் உரையாடுவது போன்றதாகும். எனவே தொழுகையில் தொழுகையல்லாத மற்றவற்றை சிந்திப்பது, பேசுவது, ஏதேனும் சாப்பிடுவது, மேலே, வலது, இடது புறங்களிலே திரும்புவது, ஸலாத்திற்கு பதில் சொல்வது மேலும் இதுபோன்ற அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது.
3வது ஜகாத்.

ஜகாத் யார் மீது கடமை ? எப்போது கடமை? எப்படி நிறைவேற்றப்பட வேண்டும்? யாருக்கு தரவேண்டும்? என ஜகாத்திற்குதிட்டமிட்ட வரையரைகளை மார்க்கம் விதித்துள்ளது. ஜகாத் வழங்கும் முஸ்லிம்கள் இந்த விதிமுறைகளை கவனித்து வழங்க வேண்டும்.

ஜகாத் பண வசதி படைத்தவர்கள் மீதே கடமையாகும். ஏழைகள் ஜகாத் கொடுக்கும் நிலையை எட்டாத நடுத்தர வர்க்கத்தினர் மீது ஜகாத் கடமையில்லை ஏழைகளும் ஓரளவு தன்னிறைவு பெற்றோரும் முடிந்த அளவு தர்ம்ம் செய்யலாம்.


செல்வம் செல்வந்தர்களை மட்டுமே சுற்றி வரக்கூடாது. அது சமுதாயத்தின் எல்லா நிலை மக்களையும்சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நெறிபை; போதிப்பதாகும். இதுவேபொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வை போக்குவதற்கு சிறந்த வழி என்று இஸ்லாம் உலகிற்கு பிரகடனம்செய்கிறது. இதைத்தான் அருள்மறை அல்-குர்ஆன் பின் வருமாறு இயம்புகிறது.


''உங்களுடைய செல்வம் நாட்டிலுள்ள செல்வந்தர்களுக்கிடையே சுற்றிக்கொண்டிருக்கக்கூடாது.'' (அல்குர்ஆன் 59:7)

ஜகாத்தின் விதிகள் என்னென்ன?
1) ஸகாத் பொருள் தனக்கு உரியதாக இருக்க வேண்டும்.
2) அளவு (நிஸாப்) முழுமை பெறவேண்டும்.
3) ஓராண்டு காலம் நிறைவு பெறவேண்டும்.
4) (கடன்கள் இல்லாமலிருக்க வேண்டும்.
5) சொந்த தேவைகள் போக மீதயிருக்க வேண்டும்.)


ஜகாத் கொடுப்பதற்கு கடமைப்பட்டோர் யார் ?

ஜகாத் வரி குறிப்பிட்ட அளவு (நிஸாப்), பொருள் படைத்த ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் இஸ்லாம் விதியாக்கியுள்ளது. தொழுகை நோன்பு, ஹஜ்ஜு போன்ற வணக்கங்களில் சிறுவர்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதோருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவது போல் ஜகாத்தில் விதிவிலக்கு வழங்கப்படவில்லை. அவர்களிடம் குறிப்பிட்ட தொகை இருந்தால் அவர்களின் பொறுப்பாளர்கள், அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று வழங்கியாக வேண்டும். ஏனெனில் இது ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய உரிமையாகும்.

4 வது நோன்பு.

 12 மாதங்களில் ஒரு மாத காலம் இறையச்சத்தோடு அல்லாஹ்வுக்காக பசித்திருந்து, தாகித்திருந்து,இச்சைகளைக் கட்டுப்படுத்தி  பருவ வயதை அடைந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நோற்க வேண்டியது  நோன்பு.
ரமழான் என்பது ஏதோ சில நல்லறங்கள் புரிவதற்கும், பகலிலே பசித்திருப்பதற்காகவும், இரவிலே தொழுவதற்காகவும் கடமையாக்கப்பட்டது என நம்மில் பெரும்பாலோர் புரிந்துவைத்துள்ளனர். உண்மையில் இந்த நோக்கத்தை உள்ளடக்கியதாக மட்டும் இருந்திருக்குமானால் இது போன்று ரமழான் அல்லாத ஏனைய காலங்களிலும் இறைவன் நோன்பை கடமையாக்கியிருப்பான். ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதத்தை தேர்வு செய்து அதில் பசித்திருப்பதை கடமையாக்கியிருக்கிறான் என்றால் அதில் வேறு விஷேச காரணங்கள் இருக்க வேண்டும்.

வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இந்த வணக்கங்களின் வரிசையில் ஒன்றாக உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இது ஒரு சடங்காகக் கருதாமல் வணக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதாகக் கொள்ளப்படுகிறது. நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.


"நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் இறைவனை அஞ்சி (பயபக்தியுடன்) நடந்துக் கொள்வதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது". (அல்குர்ஆன் 2:183)
நோன்பின் உன்னதமான நோக்கத்தை அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு ரத்தினச் சுருக்கமாகவும், மிக அழகாகவும் சொல்லிக் காட்டுகிறான்.'நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக' என்ற ஒரு வார்த்தையிலேயே, எவ்வளவு அற்புதமான வாழ்வியல் பண்பாட்டினை மனிதனுக்கு போதிக்கும் நோக்கத்தை இறைவன் பொதிந்து வைத்துள்ளான் பாருங்கள்! (சுப்ஹானல்லாஹ்!)

5 வது ஹஜ்.

 மனிதனின் வாழ் நாளில் ஒரு முறை நிறை வேற்றப்பட வேண்டிய கடமை ஹஜ். இது வசதியும்,சென்று வருவதற்கான ஆரோக்கியமும்,இருக்குமானால் அவர் மீது ஹஜ் செய்வது கடமையாகும்.
“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள்.” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26

இஸ்லாத்தின் இறுதிக் கடமையாக ஹஜ் அமைந்துள்ளது. நாடு, மொழி, இனம், நிறம், கோத்திரம், செல்வம், செல்வாக்கு ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்என்ற உணர்வுடன் கூடும் உலக மகா மாநாடு ஹஜ்.
நொடியும் மாறாத நம்பிக்கை
நாளில் ஐந்து முறை தொழுகை
இயலும் போதெல்லாம் ஜக்காத்
வருடத்தில் ஒரு மாதம் நோன்பு
ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்


இந்த ஐந்து கடமைகளும்தான் இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்து தூண்கள்!

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
*******************************
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,அனுராதபுரம், SRI LANKA
*********************************************************
 

No comments:

Post a Comment