Followers

Sunday, November 4, 2012

சோதனைகளே மனித வாழ்வின் யதார்த்தம் சோதனை இல்லாமல் மனித வாழ்க்கை கிடையாது.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

சோதனைகளே மனித வாழ்வின் யதார்த்தம்
சோதனை இல்லாமல் மனித வாழ்க்கை கிடையாது.

 
அல்லாஹ் மனிதனை பல கோணத்தில் சோதிக்கிறான் மரணம்
என்பது ஒரு பெயர் அதை சுவைத்த பிறகுதான் அதன் இன்பத்தைக்
காணமுடியும். அதுவும் மரணிப்பவருக்குப் புரியாது அவர் புரிந்து
கொள்வார் மறுமையில் ஏன் இன்றைக்குப் பார்க்கிறோம் மரணம்,மரணம் என்ற பெயரை.


* தாயின் வயிற்றிலே உருவாகி வெளியில் வராமல் மரணம் சம்பவிக்கின்றது.
* தாயின் வயிற்றில் உருவாகி அந்தக் குழந்தை ஆணோ,பெண்னோ இவ்வுலகத்தில் வந்து கண் விழிக்காமல் அப்படியை மரணத்தை சம்பவிக்கிறது.
* படித்த மாணவன் தன் படிப்பின் இறுதியைக் காணமுடியாமல் மரணம் சம்பவிக்கிறது.
* வாகனத்தை ஒட்டினவன் வாகனத்திலே மரணத்தை சம்பவிக்கிறான்.
* பாதையிலே நடப்பவன் அப்படியே மரணத்தை சம்பவிக்கிறான்.
* இரவில் கண்ணை மூடியவன் காலையில் கண்மை விழிக்காமல் மரணத்தை சம்பவிக்கிறான்.


இப்படி மரணம் ஒரு சோதனையாக மாறுவதை நாம் நமது கண்ணால்
பார்க்கின்றோம், கோட்கின்றோம்.

அல்லாஹ் இந்த உலக வாழ்கையைச் சோதனைக் களமாக ஆக்கியிருக்கின்றான். இந்த உலகத்தில் வாழும் மக்களை நல்லவர்கள், கெட்டவர்கள் எனத் தரம் பிரித்துப் பார்க்க அனைவரையும் தன் சோதனைக்கு உட்படுத்துகின்றான். இச்சோதனைகளில், கடைசிவரை அவன் கட்டளைக்கு மாறு செய்யாமல் யார் பொறுமை கொள்கிறார்களோ அவர்களுக்கு நல்லடியார்கள் என சான்று பகர்ந்து மறுமையில் சொர்க்கத்தில் நுழையச்செய்வான்.


மனிதர்களில் பலர் இறை வணக்கத்தை சரியான முறையில் நிறைவேற்றுபவர்களாகவும், நல் அமல்கள் புரிபவர்களாகவும், தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களாகவும் இருக்கலாம். இது போன்ற சூழலில் தமக்கு ஒரு இடர் வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீது அதிருப்தி காட்டுவது போல, தான் செய்து கொண்டிருக்கும் நல்ல செயல்களிலிருந்து பின்வாங்கி விடுகிறார்கள். இவர்கள் மனதில் ஷைத்தான் மிக எளிதில் ஊடுருவி மறுமையில் அவரை நரகத்தில் தள்ளிவிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறான்.


அல்லாஹ் சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், சிலருக்கு நோயைக் கொண்டும், சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும், சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் பலவாறு சோதிக்கின்றான்.


சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவையே

 
ஆதம்(அலை) முதல் முஹம்மது(ஸல்) வரை நபிமார்களும் இன்னும் இறைநேசர்களும் அல்லாஹ்வின் சோதனைக்கு ஆளானவர்களே. அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு நபிமார்களிகன் வரலாறுகளைக் கூறுகின்றான். அதில் எல்லா நபிமார்களும் சோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. தூதுத்துவத்தைச் சொல்ல வந்த நபிமார்களை, அல்லாஹ் சொல்லெண்ணாத் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் இடர்படுத்திச் சோதித்தான். எனினும் அவர்கள் அல்லாஹ்வின் மீது திடமான நம்பிக்கையை வைத்திருந்தனர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தூதுத்துவப் பணியை செம்மையென நிறைவேற்றினார்கள்.

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. "அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்) (அல்குர்ஆன் 2:214)


இந்த உலகத்தில் மனிதன் மிகவும் விரும்பக் கூடியதாக செல்வமும், குழந்தைகளும் இருக்கின்றன. அல்லாஹ் இவ்விரண்டையும் மனிதனுக்கு சோதனை என்று அறிவிக்கின்றான். அல்லாஹ் ஒருவருக்கு அளவுக்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்துள்ளான் எனில் அவர் அதைக்கொண்டு சோதிக்கப்படுகிறார் என்பதே உண்மை.


* கடன் கேட்டு வருபவனுக்கு கடன் தர வலியுருத்துகிறது இஸ்லாம்.
* இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாக ஜகாத்தை சரியாக நிறைவேற்றச் சொல்கிறது இஸ்லாம்.

* நடைமுறையில் பலர் அல்லாஹ் கொடுத்துள்ள செல்வங்களையெல்லாம் தன் சொந்த முயற்சியிலும் தன் அறிவு மற்றும் உழைப்பாலும் பெற்றவை என எண்ணிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் வட்டித் தொழிலில் மூழ்கிவிடுகிறார்கள். அல்லாஹ் இவர்களுக்கு அதிகமான பொருட்செல்வத்தைக் கொடுத்து சோதிக்கவில்லையெனில் இது போன்ற தவறுகள் செய்ய வாய்ப்புகள் இல்லையென்று உணர்ந்து கொள்ளுங்கள்.


ஒரு மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)


நூல்: திர்மிதீ 2319


இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது

விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


நூல்: திர்மிதீ 2323


நாம் முதலில் முஃமின்களாக இருக்கவேண்டும்.

ஆனால் ஒரு நிபந்தனை!. அல்லாஹ்வின் உதவியும், ஷைத்தானிய சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்பும், வெற்றியும் நமக்குக் கிடைக்க வேண்டுமெனில் நாம் முதலில் முஃமின்களாக வாழவேண்டும். இதுவே அந்த நிபந்தனை. நாம் உண்மையான, உளத்தூய்மையான, உறுதிமிக்க முஃமின்களாக வாழ்ந்தால் மட்டுமே உன்னதமான வெற்றிகளை அடைய இயலும். இதைத்தான் திருமறைகுர்ஆனும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களுக்குத் தகுதி கொடுத்து உங்களை நம்மளவில் நெருங்கி வைக்கக் கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான நல்ல அமல் செய்கின்றாரோ அத்தகையோருக்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு. மேலும் அவர்கள் சுவனபதியின் உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள். (34:37)

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும் நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (6:32)


நபியே! யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். (6:70)


ஏனென்றால் அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம். (7:51)


எனவே ஒவ்வொரு உண்மை முஃமினுடைய இலட்சியமும், குறிக்கோளும் நாளை மறுமையில் ஈடேற்றம் அடைவதை நோக்கியே இருக்கவேண்டும். மறுமையை மறந்து அற்பமான இவ்வுலக வாழ்க்கையின் தற்காலிக சுகபோகத்தில் மயங்கிக் கிடப்பவன் உண்மை முஃமின் அல்ல. அவனுக்கு அல்லாஹ்வுடைய உதவியோ, இம்மை மறுமை வெற்றியோ, ஈடேற்றமோ கிடையாது என்பதை மேற்கண்ட இறைவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

எனவே இவ்வுலக மாயையில் சிக்குண்டு, இஸ்லாமிய மார்க்கத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்ட அத்தகையவர்களுக்கு ஷைத்தான்கள், இலுமனாட்டிகள் என்று (நம் ஒற்றுமை இணையதளம் போல எத்தனை இணையங்கள்) எத்தகைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்காது. இவ்வுலக இச்சைகளில் மயங்குவதை விட்டொழித்து மறுமை வெற்றியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படும்வரை அவர்கள் பரிசுத்த முஃமின்கள் என்ற நிலையை அடையவே மாட்டார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.


இன்பமும் துன்பமும் ஒவ்வொருவர் வாழ்விலும் மாறிமாறி நடைபெறுபவை. எவருக்கும் இதில் விலக்கில்லை. ஆயினும் நல்லது ஏற்படும்போது மகிழ்கின்ற மனம், துன்பமோ சோதனையோ தீண்டும்போது மட்டும் துவள்கிறது; நிதானத்தை இழக்கிறது. நினைத்தது நடக்கும்போது மனம் இன்பத்தில் துள்ளுகிறது. அது நிறைவேறாதபோது வெறுப்பில் மூழ்குகிறது.


நல்லதும் கெட்டதும் இருக்கத்தான் வேண்டும். நல்லவை ஒருவனை நன்றியுடையவனாய் மாற்ற உதவும். சோதனைகள் அல்லாஹ்விடம் உதவி வேண்டி இறைஞ்ச வைக்கும். அப்படி இறைஞ்சி வேண்டுவதை இறைவன் நிறைவேற்றி வைக்கவில்லையெனில் அல்லாஹ் அந்தச் சோதனையை முழுமைப்படுத்த நாடியுள்ளான்; நம்மை அவனுடைய நாட்டத்திற்கு அடிபணிய வைக்க விழைகிறான் என்றே எண்ணங்கொள்ள வேண்டும். அங்குதான் உண்மையான இறை நம்பிக்கை ஒளிவிடும். இறைவனின் நாட்டத்திற்கு முழுக்க அடிபணிவதில்தான் ஒரு மனிதனின் மெய்யான இயல்பு வெளிப்படுகிறது,’ என்று இறைவனுக்கு அடிபணிவதன் மெய்ப்பொருளை உணர்த்துகிறார்.


நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக. அவர்கள் யாரெனில், தமக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்போது “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நாம் அவனிடமே திரும்பச் செல்பவர்கள் என்று கூறுவார்கள்.


அத்தகையோருக்கே அவர்களின் இரட்சகனிடமிருந்து அருள்களும் கருணையும் உண்டாகும். அவர்களே நேர்வழி பெற்றவர்கள். (2: 155-157) நிச்சயமாக மனிதன் அல்லாஹ்வின் சோதனைகளுக்கு ஆளாகுபவனாக இருக்கிறான் என்ற செய்தியை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சோதனைகளைத் தாண்டாமல் மனிதன் வாழ முடியாது. சோதனைகள் அவனை பண்படுத்துகிறது. பக்குவப்படுத்துகிறது. அவனது வாழ்வின் யதார்த்தத்தை புரியவைக்கிறது. அவன் அடைய வேண்டிய இலக்கை காட்டிக் கொடுக்கிறது.


வாழ்வு, மரணம் பற்றிய சிந்தனையையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இன்பங்களும் துன்பங்களும் நிரந்தர மல்ல. பருவக்காற்று போல் மாறி மாறி வரக் கூடியதே. சக மனிதர்களுடன் சகஜமாகவும் மனிதாபிமானத்துடனும் வாழும் கலையை கற்றுக் கொடுக்கிறது. மரணத்திற்குப் பின் மறுமையை சந்திக்க வேண்டும் என்ற உண்மைகளை உணர்த்துகிறது.


ஒரு இறை விசுவாசியை பொறுத்த வரையில் துன்பங்களைக் கண்டு துவண்டு விட மாட்டான். சோதனைகளுக்கு அஞ்சி அழுது புலம்ப மாட்டான். அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தவனாக பொறுமை காப்பான்.


உலகம் நிரந்தரமல்ல. வாழ்வும் நிரந் தரமல்ல. உலகமும் அழியக் கூடியதே. வாழ்வும் அழியக் கூடியதே. நிரந்தரமாக வாழ்பவர்கள் எவருமில்லை. எல்லோரும் மரணத்தை அனுபவித்தே ஆக வேண்டும். இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டே இறைவிசுவாசி எப்போதும் தயாராக இருப்பான்.


அல்லாஹ்வுடைய சோதனைகள் பல வழிகளில் வந்தே தீரும். அண்மையில் ஏற்பட்ட சுனாமி மற்றும் வெள்ளப் பெருக்கு சகஜ வாழ்வை அப்படியே பாதித்துவிட்டது. பயிர்ச் செய்கைகள், விவசாய நிலங்கள் அழிந்து விட்டன. பொருளாதாரம் நட்டமடைந்துள்ளன. பசியும் வறுமையிலும் பீடித்துள்ளது. பலபேர் உயிரிழந்துள்ளனர். கால்நடைகள் செத்துப் போயுள்ளன. இன்னுமொரு பக்கம் மண்சரிவு. பல பேருடைய வீடுகள் இல்லாமல் போயுள்ளன. இருப்பிடங்கள் சிதைவடைந்துள்ளன. என்ன நடக்குமோ என்ற பயம் தொற்றிக்கொண்டுள்ளது. உலகளவில் இதுபோன்ற சோதனைகளைக்கண்டு வருகிறோம்.


வாழ்வின் யதார்த்தத்தை புரிய வைத்து வறுமை-செழிப்பு என்கிற சமநிலையில் வாழ வைக்கும் சக்கரத்தை சுழற்றுகிறான் அல்லாஹ். பலர் இந்தயதார்த்தத்தை புரியாமல் இயல்பு வாழ்வை அறியாமல் சோதனைகளின் போது தங்களையே மாய்த்துக் கொள்கிறார்கள். நொந்துகொள்கிறார்கள். மற்றும் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களை பொறுத்தவரை இன்பத்தை மட்டுமே ருசிக்க விரும்புகிறார்கள். துன்பத்தையும் தோல்வியையும் ஏற்க மறுக்கிறார்கள். “சமநிலை வாழ்வை” அறியாததே இதற்குக்காரணம்.


அல்லாஹ் மனிதர்களுக்கு துன்பத்தைக் கொடுத்து அதனூடாக பெற்றுக் கொள்ளும் பாடத்தையும் படிப்பினையாகக் கொடுக்கின்றான். அத்துன்பத்திலிருந்து மீள்கின்ற வழிகளையும் காண்பிக்கிறான். மனதை அலைபாய விடாமல் அமைதிப்படுத்தும் பயிற்சியையும் கொடுக்கிறான்.


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
 ********************************************************************************
அஹமட் யஹ்யா,
 ஹொரோவபதான, அனுராதபுரம். SRI LANKA. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 

1 comment: