Followers

Thursday, October 11, 2012

குழந்தை வளர்ப்பு...



 
 
 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

குழந்தை வளர்ப்பு...

இவ்வுலகத்தில் பிறக்கும் எந்தக் குழந்தையும் கெட்ட குழந்தையாக பிறப்பதில்லை. எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகத் தான் பிறக்கின்றன.
அவர்களது பெற்றோர்களின் வளர்ப்பு தான் அவர்களை நல்லவனாக அல்லது கெட்டவனாக மாற்றி விடுகிறது. (பார்க்க புகாரி 1385)
இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.
எனவே நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கான முழு முயற்சிகளை மேற்கொள்வது பெற்றோர்களின் கடமையாகும்.


''என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம் களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர். (அல்குர்ஆன் 2:132)
இப்ராஹீம் நபியும் யஃகூப் நபியும் தன் குழந்தைகளிடம், ''வாழும் நாட்களில் நீங்கள் முஸ்லிம்களாக வாழ வேண்டும். உங்களுக்கு மரணம் வரும் போதும் முஸ்லிம்களாகவே இருக்க வேண்டும்'' என்பதைத் தெளிவாக, தம் குழந்தைகளுக்கு விளக்கியுள்ளார்கள்.
இதைப் போன்று லுக்மான் (அலை) அவர்களும் தம் குழந்தைகளுக்கு அல்லாஹ்வின் வல்லமை, இணை வைப்பின் பயங்கரம், தொழுகையின் முக்கியத்துவம், நன்மையை ஏவி, தீமையை தடுப்பதன் அவசியம், பொறுமையின் சிறப்பு, ஆணவத்தின் கடுமை என்று ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.


லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ' 'என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தி உள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப் பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்து வாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விரு வரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

அல்லாஹ்தான் படைத்தவன்; பாதுகாப்பவன்; உணவளிப்பவன்; நிவாரணமளிப்பவன். அனைத்து நிலைகளிலும் நாம் அவனிடமே மீளவேண்டும் என்ற என்ற எண்ணத்தை உங்கள் குழந்தையின் இதயத்தில் வரைந்து விடுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் மீது நேசத்தை ஊட்டுங்கள். நறுமணம் கமழும் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அழகிய பண்பாட்டையும் பற்றிக் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.
தூய இஸ்லாமிய அகீதாவையும், அதன் ஒழுக்க விழுமியங்களையும் குழந்தைகளின் உள்ளத்தில் விதைத்து விடுங்கள்.

உங்கள் குழந்தைகள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க நீங்கள் உதவுங்கள். தீய நண்பர்களை விட்டும் அவர்களை விலக்கி வையுங்கள்.

தூய நபிவழிகளைக் கற்றுக் கொடுங்கள். உண்ணல், உறங்கள், விழித்தல், மல-சல கூடங்களுக்குச் செல்லுதல் போன்ற ஒழுங்குகளைக் கற்றுக் கொடுப்பதுடன் அவ்வேளைகளில் ஓத வேண்டிய ஒளறாதுகளையும் கற்றுக் கொடுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடங்கள். அவர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாது அனைவரையும் சமமாக நடத்துங்கள்.

உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.

அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.

பொய், ஏமாற்று, திருட்டு, அநீதமிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை விட்டும் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

சின்ன வயதிலிருந்தே சுத்தம்-சுகாதாரத்திற்கு அவர்களைப் பழக்குங்கள், ஒழுச்செய்யும் விதத்தைக் கற்றுக் கொடுங்கள். உடல்-உடை சுத்தம் குறித்து விழிப்புணர்வூட்டுவதுடன், உணவு உண்ண முன்னரும்-பின்னரும் கரங்களைக் கழுவிக் கொள்ளப் பழக்குங்கள்.

குழந்தைகளின் வெட்க உணர்வைக் குன்றச் செய்யாதீர்கள். முறையான ஆடைக்கு அவர்களைப் பழக்குங்கள். ஆண் பிள்ளைகளுக்குப் பெண் பிள்ளைகள் போன்றோ, பெண் பிள்ளைக்கு ஆண் பிள்ளை போன்றோ ஆடை அணிவிக்காதீர்கள்.

குழந்தைகள் பேசும் போது, அவர்களது பேச்சை வெட்டி விடாதீர்கள்; காது கொடுத்துக் கேளுங்கள். அதன் மூலம் அடுத்தவர் பேசும் போது, காது கொடுத்துக் கேட்கும் பக்குவத்தை அவர்கள் பெறுவார்கள்.

குழந்தைகள் கேள்வி கேட்கும் போது, அவர்களை அதட்டாதீர்கள்; பொறுமையுடன் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்;

இஸ்லாமிய சரித்திரத்தையும், அதன் சாதனை வீரர்களது வரலாறுகளையும் எடுத்துக் கூறுங்கள்;

இஸ்லாத்தின் எதிரிகள் குறித்தும், அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதிகள்; குறித்தும் அவர்களுக்கு உணர்த்துங்கள்;

இருப்பதைக் கொண்டு திருப்தியடையப் பழக்குங்கள்; அடுத்தவர்களிடமிருப்பதைப் பார்த்துக் கொட்டாவி விடும் இயல்பை அழிக்க முயலுங்கள்.

பொது விடயங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்; அவர்களது கருத்து பொருத்தமானதாகப் பட்டால், அதன்படி செயல்படத் தயங்காதீர்கள்.

உளவியல் ரீதியில் அவர்களை அணுக முற்படுங்கள்; ‘நல்ல பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்கள்; இப்படி-இப்படி செய்ய மாட்டார்கள். நீ நல்ல பிள்ளை; நீ எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’ என்ற தோரணையில் நீங்கள் கூற விரும்புவதைக் கூறலாம்.


“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்” (அல்-குர்ஆன் 66:6)

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
***************************************************************************************************
 அஹமட் யஹ்யா,,
ஹொரோவபதான,அனுராதபுரம்.
SRI LANKA
**********************************************************************************  

No comments:

Post a Comment