Followers

Thursday, October 11, 2012

சகோதரத்துவம் ..


 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ..
அன்பின் சகோதர சகோதரிகளே .... புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.


சகோதரத்துவம் ..
 சகோதரத்துவத்தை எவ்வாறு பேண வேண்டும் என்ற விடயத்தில் இஸ்லாம் நமக்கு ஒரு பாடதிட்டத்தையே வழங்குகிறது. முஸ்லிம் சமூகம் தங்களுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த விஷயங்களை கடைபிடித்தால் சகோதரத்துவம் மேலோங்கும், சகோதரத்துவம் பாதிப்படையாமல் இருக்க எந்த விடயத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று மிக விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறது. இஸ்லாம் உருவாக்க விரும்பும் சகோதரத்துவத்தின் உயரிய நிலை எப்படி இருக்க வேண்டுமென்றால் ... ஈயத்தால் வார்க்கப்பட்ட சுவரைப் போன்று ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும்.

"எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்." (திருக்குர்ஆன் 61:4)
ஈயத்தால் வார்த்து உருவாக்கப்பட்ட சுவர் எப்படி உறுதியானதாக இருக்குமோ, எவ்வளவு பிணைப்பாக, வலிமையாக இருக்குமோ, அதைப்போன்று முஸ்லிம்கள் தங்களுக்குள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அந்த சுவரினுள் ஓட்டையோ, விரிசலோ விழாதவாறு பார்த்துக்கொள்வது ஈமான் கொண்ட ஒவ்வொருவருடைய பொறுப்பாகும்.
"உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது போர்த்துவீராக" (திருக்குர்ஆன் - 15:88)
ஒருமுறை நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:. 'உன் சகோதரனுக்கு உதவி செய்திடு, அவன் அநீதி இழைப்பவனாக இருந்தாலும் அநீதிக்குள்ளானவனாக இருந்தாலும் சரியே! அப்பொழுது ஒருவர் எழுந்து ஆட்சேபனை கிளப்பினார் ....
அல்லாஹ்வின் தூதரே! அவன் அநீதிக்கு உள்ளானால் நான் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் தான். ஆனால் அவன் அநீதியாளனாக இருந்தால் அவனுக்கு நான் எப்படி உதவி செய்ய முடியும்? இது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!
நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்: 'அநீதி இழைப்பதிலிருந்து அவனை நீ தடுத்திடவேண்டும். அது தான் அவனுக்கு நீ செய்யும் உதவி '(நூல்: புகாரி)

ஒருவன் சகோதரத்துவம் என்ற பெயரில் தன்னிச்சையான போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டு மேலே சொன்ன சகோதரத்துவப் பயன்பாடுகளை எதிர்பார்த்தான் எனில் கானலைப் பார்த்து தண்ணீர் என ஏமாறும் நிலைதான் ஏற்படும். சகோதரத்துவத்திற்கென சிலநெறிமுறைகள் - நிபந்தனைகள் உள்ளன. அவற்றைப் பேணினால் தான் அவற்றின் பயன்களை அடைய முடியும்.

*) அல்லாஹ்வின் உவப்புதான் குறிக்கோளாக இருக்க வேண்டும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு மனிதர் வேறொரு கிராமத்தில் உள்ள தன் சகோதரனைச் சந்திப்பதற்காகச் சென்றார். அந்தப் பாதையில் அவனை எதிர்பார்த்திருக்குமாறு அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி வைத்தான். அங்கு அவர் வந்த போது மலக்கு கேட்டார்: நீ எங்கே செல்கிறாய்? அதற்கு அவர் இந்த ஊரிலுள்ள என் சகோதரரைச் சந்திக்கச் செல்கிறேன் என்றார். நீ அவருக்கு ஏதேனும் உபகாரம் செய்து அதற்கு கைமாறு பெற நாடுகிறாயா? என்று மலக்கு கேட்டார். அதற்கு அவர், அப்படி ஒன்றுமில்லை. அல்லாஹ்வுக்காக அவரை நான் நேசிக்கிறேன் என்றார். அப்பொழுது வானவர் சொன்னார்: ஒரு விஷயத்தை அறிவிப்பதற்காக அல்லாஹ்தான் என்னை உன்னிடம் அனுப்பி வைத்துள்ளான்;: நீ அவரை அல்லாஹ்வுக்காக நேசிப்பது போன்று அல்லாஹ் உம்மை நேசிக்கிறான் (நூல்: முஸ்லிம்)


*) இறையச்சத்துடன் சகோதரத்துவம் பேணிட வேண்டும். அதா வது, கடமைகளில் பொடுபோக்கும் தீமை நாடுவதும் தவிர்க்கப் படவேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:
இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர் '(49: 10). மேலும் இறையச்சத்தின் அடிப்படையில் அமையாத உறவுகள் அனைத்தும் பாழாகப் போய்விடும் என்பதை இவ்வாறு தெளிவுபடுத்துகிறது திருக்குர்ஆன்:
அந்த மறுமை நாளில் ஏனைய நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பகைவர்களாகி விடுவர், இறையச்சத்துடன் வாழ்ந்தவர்களைத் தவிர.! '(43: 67).

எனவே புகழாசை, அதிகார மோகம், பட்டம் பதவி போன்றவை குறுக்கிட்டால்; சண்டை சச்சரவு தான் வளரும்.
*) பிறர் நலன் நாடுதல் எனும் அடிப்படையில் அமைந்திட வேண்டும். ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்;: 'நான் நபியவர்களிடம், தொழுகையை நிலைநாட்டுதல், ஜகாத் கொடுத்தல், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலன் நாடுதல் ஆகியவற்றின் பேரில் விசுவாசப்பிரமாணம் செய்து கொடுத்தேன்' (புகாரி)

*) நன்மையான காரியத்திலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். சகோதரத்துவத்தின் முதன்மை நோக்கமும் இதுவே. இந்நிலை இல்லையெனில் அது, சகோதரத்துவம் வலுவிழந்து வருவதன் அடையாளமாகும்.
*) வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது. அதாவது, இது போன்ற சூழ்நிலைகளில் தம் சகோதரர்களின் நலனுக்காக அர்ப்பணமாகும் நிலை இருக்க வேண்டும்!

'உங்களில் எவரும் தனக்கு விருப்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாத வரையில் இறை நம்பிக்கையாளராக முடியாது' (நூல்: முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள். (வாங்குவதில்லை எனும் நோக்குடன்) பொருள்களின் விலையைக் கூட்டாதீர்கள். ஒருவருக்கொருவர் கோபப்படாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். பிறரின் வியாபாரத்தைக் கெடுத்துக் கொண்டு வியாபாரம் செய்யாதீர்கள். நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் நல்லடியாளர்களாக, சகோதரர்களாகத் திகழுங்கள்! ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி இழைக்க மாட்டான். மோசடி செய்ய மாட்டான். அவனை இழிவாகக் கருத மாட்டான். இறையச்சம் இங்கு உள்ளது என்று நபியவர்கள் தம் நெஞ்சைச் சுட்டிக்காட்டி மூன்று முறை சொன்னார்கள்! ஒரு மனிதன் தீயவன் என்பதற்கு தன் முஸ்லிம் சகோதரனை இழிவாகக் கருவதுவதே போதுமானதாகும். ஒரு முஸ்லிமின் உயிர், உடைமை, தன்மானம் ஆகியவற்றிற்கு பங்கம் விளைவிப்பது எல்லா முஸ்லிம்களுக்கும் ஹராம் - தடுக்கப்பட்டதாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (முஸ்லிம்)

நற்குணம்தான் அன்பையும் பாசத்தையும் விதைத்து உள்ளங்களை இணைக்கும் பாலம். இணங்கிப்போகும் பண்பு தான் சகோதரத்துவத்தின் யதார்த்த நிலையாகும். இதனால் தான் நற்குணம் வளர்க்கிறது. ஆனால் பிணங்குவதென்பது ஒருவருக்கொருவர் முரண்படுவதென்பது தீய குணத்தின் விளைவாகும். அது உள்ளங்களில் கோபத்தையும் குரோதத்தையும் புறம்பேசும் போக்கையும் தான் உருவாக்கும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நற்குணத்துடன் மக்களிடம் பழகிடு. எவர், நரகத்திலிருந்து தூரமாக்கப் படவும் சுவனத்தில் புகுத்தப்படவும் விரும்புகிறாரோ அவர், அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட நிலையில் மரணத்தைச் சந்திக்கட்டும். மேலும் மக்கள் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோரோ அப்படியே மக்களிடம் அவர் நடந்துகொள்ளட்டும் (நூல்: அஹ்மத்)

பரஸ்பரம் உதவி செய்யாதிருப்பது, உரையாடும் பொழுது ஒழுங்கு முறை கடைப்பிடிக்காதிருப்பது, கண்ணியக் குறைவாக நடந்து கொள்வது, அளவின்றி விமர்சனம் செய்வது, வீணாகத் தர்க்கிப்பது, பொறுமையின்றி நடந்து கொள்வது, நான்கு பேருக்கு மத்தியில் புத்திமதி சொல்வது, கோள் மூட்டுபவர்கள் சொல்வதை உண்மையென நம்புவது, ரகசியத்தைப் பரப்புவது, தனிப்பட விவகாரத்தில் தலையிடுவது, சகோதரன் படும் துன்பத்தைக் கண்டு கொள்ளாதிருப்பது, சுய புகழ்பாடுவதுதில் அலாதி இன்பம் காண்பது, அதனூடாக தனது அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ள முயல்வது, தக்க காரணமின்றி வாக்களித்த நேரத்தில் சந்திக்காதிருப்பது, மனக் கவலையை, மனவருத்தத்தை அதிகப்படுத்தும் வகையில் பேசுவது ஆகியவை உறவைக் குலைத்து விடலாம் . நோக்கத்தைப் பாழாக்கி விடலாம்.
அல்லாஹ்வின் நல்லடியாளர்கள் பற்றி குர்ஆன் ஓரிடத்தில் இவ்வாறு புகழ்கிறது:
தாங்களே தேவையுள்ளவர்களாக இருந்தாலும் கூட தங்களைவிடப் பிறருக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். உண்மை யாதெனில் யார் தங்கள் மனத்தின் உலோபித்தனத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார்களோ அவர்களே வெற்றி பெறக் கூடியவர்கள் ஆவர் '(59: 9)

நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: அல்லாஹ்வுக்காக பரஸ்பரம் நேசம் கொண்டு வாழும் இருவரில் மிகச் சிறந்தவர் யார் எனில் எவர் தன் சகோதரனை அதிகம் நேசிக்கிறாரோ அவர்தான் '(அல் அதபுல் முஃப்ரதில் இமாம் புகாரி)

"(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர் (கள் செய்யும் பிழை) களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்" (திருக்குர்ஆன் 3:134)

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக ........
அஹமட் யஹ்யா ...
ஹொரோவபதான, அனுராதபுரம், இலங்கை.
************************************************** *
  

No comments:

Post a Comment