Followers

Thursday, October 11, 2012

வியாபாரம் ..


 வியாபாரம் ..

 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ..
அன்பின் சகோதர சகோதரிகளே .... புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும்





மனிதனின் பொருளாதார வாழ்வு, உறுதியான அடிப்படை, தெளிவான இறைவழி காட்டுதல் ஆகியவற்றின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. தனது வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையானவற்றை நேர்மையான உழைப்பின் மூலம் சம்பாதித்துக் கொள்ளவேண்டியது ஒருவனின் கடமை என்பது மட்டுமல்ல, மாட்சிமைமிக்க சிறந்த நற்குணமுமாகும்.

உழைத்திடும் திறன் இருந்தும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் அடுத்தவர்களை அண்டிப் பிழைத்திடுவது மார்க்கத்தின் பார்வையில் மிகப்பெரிய பாவமாகும். அது ஒரு அவமானமுமாகும். ஒரு முஸ்லிம் தனது உழைப்பாலேயே தனது வாழ்க்கையை நடத்திட வேண்டும். யாருக்கும் ஒரு சுமையாக அவன் இருந்திடக் கூடாது. இது இறைவனின் கட்டளையாகும்.

அனுமதிக்கப்பட்ட எந்த வியாபாரத்தில் ஈடுபடும்போதும் கவனத்தில்கொள்ளவேண்டிய சில அம்சங்களை இஸ்லாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அவற்றைப் புறக்கணித்து நடக்கும் வியாபாரிகள் மறுமையில் பாவிகள் கூட்டத்தில் எழுப்பப்படுவர்

* அளவை நிறுவையில் மோசடி செய்தல்

அளவை நிறுவையில் முறையாக நடந்து கொள்ளவேண்டும்.

அளவை நிறுவையில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால் நிறைய அளந்துகொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுக்கும்போதும்; நிறுத்துக் கொடுக்கும்போதும் குறைத்துவிடுகின்றனர். மகத்தான ஒரு நாளில் நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? அந்த நாளில் மனிதர்கள் அகிலத்தின் இறைவன் முன் (விசாரணைக்காக) நிற்பர். (83: 1 - 6)

விற்றல், வாங்கல் நடவடிக்கைகளில் விட்டுக்கொடுத்து நிதானமாக நடந்து கொள்ளவேண்டும்.

"விற்கும்போதும் வாங்கும்போதும் தன் உரிமையைக் கோரும்போதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளும் மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக" என்று நபியவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். (புஹாரி, திர்மிதீ)

* வியாபாரத்தில் சத்தியம் செய்தல்.

"நிச்சயமாக வியாபாரிகளே பாவிகள்" என நபியவர்கள் குறிப்பிட்ட போது "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி இருக்கிறான் அல்லவா" என்று ஸஹாபாக்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம். எனினும், அவர்கள் சத்தியம் செய்து பாவம் செய்கின்றார்கள். பேச்சில் பொய் சொல்கிறார்கள்" என்று கூறினார்கள். (அஹ்மத்)
வியாபாரப் பொருள்களின் தன்மைகள்.

1. சுத்தமானதாக இருத்தல் 2. பயனுள்ளதாக இருத்தல்



3. விற்பவருக்குச் சொந்தமானதாக இருத்தல்


4. பண்டத்தை வாங்குபவருக்கு ஒப்படைக்கும் சக்தி இருத்தல்


5. பண்டமும், அதன் விலையும் குறிப்பாக அறியப்பட்டிருத்தல்


6. கையிருப்பில் உள்ளதாயிருத்தல்


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு பெண் தம் வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவு செய்தால் (அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்கூலி அவளுக்கு கிடைக்கும். (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்கூலி அவளுடைய கணவனுக்கு உண்டு. கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோல் (நற்கூலி ) கிடைக்கும். ஒருவர் மற்றவரின் கூலியில் எதனையும் குறைத்து விடமாட்டார் "என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். "ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்" என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்! "என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக் ( ரலி) அறிவிக்கிறார்கள்.



"ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "என மிக்தாம் (ரலி) அறிவிக்கிறார்கள்.


"பிறரிடம் யாசகம் கேட்படை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விறகச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்;. மறுக்கவும் செய்யலாம் "என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" இதை அபூ ஹுரைரா (ரலி) ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) இருவரும் அறிவிக்கிறார்கள்


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக ...
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான, அனுராதபுரம், இலங்கை.
*********************************** 

No comments:

Post a Comment